முல்லைப்பெரியாறு அணைக்குள் தமிழக நிருபர்களுக்கு அனுமதி மறுப்பு..!

முல்லைப்பெரியாறு அணைக்குள்  தமிழக நிருபர்களுக்கு அனுமதி மறுப்பு..!
X

பெரியாறு அணை பைல் படம்.

முல்லைப்பெரியாறு அணைக்குள் தமிழக நிருபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை விவசாய சங்கம் கடுமையாக கண்டித்துள்ளது.

முல்லைப்பெரியாறு அணைப்பகுதிக்குள் தமிழ்நாட்டு செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

2011 முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனைக்கு பிறகு, அணைக்குள் பார்வையாளர்கள் செல்வது முற்றாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமிழகப் பத்திரிகையாளர்கள் மட்டும் அவ்வப்போது அணைக்குள் சென்று வந்தனர். குறிப்பாக பிரதான குழு மற்றும் துணைக்குழுவினர் வரும் போது தமிழக பத்திரிகையாளர்கள் அணைக்குள் செல்ல தடை ஏதுமில்லை.

ஆனால் பிப்., 15ம் தேதி வியாழன் அன்று அணையை பார்வையிட வந்த துணைக் குழுவின் வருகை தமிழக பத்திரிகையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படாமலேயே நடந்திருக்கிறது. அணைக்கு பொறுப்பாளராக இருக்கும் பொறியாளர் சாம்இர்வினுக்கு தெரியாமல் துணைக் குழு அணைக்குள் வந்ததா என்பது முதலில் தெரிய வேண்டும். பொறியாளர் சாம்இர்வினுக்கு துணைக்குழு அணைக்குள் வந்தது ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தால் எதற்காக அவர் தமிழக பத்திரிகையாளர்களுக்கு தகவல் சொல்லவில்லை என்பதும் தெரிய வேண்டும்.

பிரதான குழு மற்றும் துணைக்குழு ஆகிய இரண்டு குழுக்கள் வரும்போது மட்டுமே தமிழக பத்திரிகையாளர்கள் அணைக்குள் அனுமதிக்கப்பட்ட நிலையில் எதற்காக இப்போது துணைக்குழு வந்தது பற்றி எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. அணை பலமாக இருக்கிறதா அல்லது பலவீனமாக இருக்கிறதா அல்லது என்ன நிலையில் இருக்கிறது என்பதை கண்காணிக்கத் தான் இந்த துணைக் குழு அணைக்குள் வந்தது.

தமிழக பத்திரிகையாளர்களுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்பட்டு அவர்கள் அணைக்குள் சென்றிருந்தால் துணைக் குழு அணை குறித்து என்ன விதமான அறிக்கையை கொடுத்தது என்பதை நாம் தெரிந்திருக்கக்கூடும். ஆனால் தமிழகத்தின் சார்பில் எந்தவித பத்திரிகையாளர்களும் அழைக்கப்படாத நிலையில், அணைக்குள் வந்து பார்வையிட்ட துணைக் குழு அணையைப் பற்றி என்ன விதமான கருத்தைச் சொன்னது என்பது யாருக்கும் நம்மில் தெரியவில்லை.

இந்த நிலையில் தனக்கு தகவல் தெரிந்தும் பத்திரிகையாளர்களுக்கு தகவல் தெரிவிக்க மறுத்த சாம் இர்வின் எதற்காக இத்தகைய தவறை செய்தார் என்பது குறித்து தமிழக அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். 20 நாட்களுக்கு முன்னால் கேரள சட்டமன்றத்தில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் உரையாற்றிய கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் முல்லைப் பெரியாறு அணை வலுவிழந்து விட்டது என்று அரசின் கருத்தை கூறியது கேரள சட்டமன்ற அவை குறிப்பில் ஏற்றப்பட்டு இருக்கும் நிலையில் எதற்காக இந்த விட்டுக்கொடுத்தலை அணைக்கு பொறுப்பாக இருக்கும் தமிழக பொறியாளர்கள் செய்ய வேண்டும்.

கூடுதலாக அணைக்குள் செல்லும் தமிழக பத்திரிகையாளர்கள் யாராக இருந்தாலும் கையெழுத்து செய்து விட்டு தான் செல்ல வேண்டும் என்கிற நெருக்கடியையும் கேரள காவல்துறை விதித்திருக்கிறது. யாருக்கு சொந்தமான அணையில் யார் வந்து சட்டாம்பிள்ளைத்தனம் செய்வது? தேனி மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் அணை வராத வரை, இது போன்ற பிற்போக்குத்தனங்களை அணைக்கு பொறுப்பாக இருக்கும் பொறியாளர்கள் தொடர்ந்து செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.

எனவே தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் அணையில் தமிழக காவல்துறையினரை 50 பேர் பணியமர்த்தவும் தேனி மாவட்ட ஆட்சியரின் கீழ் அணையின் கட்டுப்பாட்டை கொண்டு வரவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அணையில் பணிபுரியும் 125 க்கும் மேற்பட்ட கேரள காவல்துறையினரின் பலத்தை 25 ஆக குறைத்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு டிஎஸ்பி தலைமையிலான தமிழக காவல்துறையினரை முல்லைப்பெரியாறு அணையில் பணியமர்த்தினால் மட்டுமே அணையைக் காக்க முடியும். கூடுதலாக அணைக்கு பொறுப்பாக இருக்கும் பொறியாளர் சாம் இர்வினின் கடந்த ஒரு மாத அலைபேசி உரையாடலை தமிழக உளவுத்துறை எடுத்து ஆய்வு செய்ய வேண்டும். கட்டாயம் ஒரு விஷயத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன். விவசாய சங்கங்கள் நடத்துபவர்களை முட்டாளாக எண்ணுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு