/* */

பிணம் தின்னும் கழுகுகளை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை

இறந்த விலங்குகளை உண்டு வாழும் பாறு கழுகுகள் என்று அழைக்கப்படும் பிணம் தின்னும் கழுகுகளை பாதுகாக்க தமிழக அரசு ஒரு குழுவை அமைத்திருக்கிறது.

HIGHLIGHTS

பிணம் தின்னும் கழுகுகளை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை
X

பிணந்தின்னி கழுகு என அழைக்கப்படும் பாறு கழுகு.

இது 16 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு கிடைத்திருக்கும் பரிசு என்கிறார்கள் பறவைகள் நல ஆர்வலர்கள். இந்தக் குழு என்ன செய்யப் போகிறது, இந்தப் பறவையைப் பாதுகாப்பதால் என்ன பயன் கிடைத்துவிடும்? என்ற கேள்விகளுக்கு பதில் இருக்கிறது.

பாறு கழுகுகளை முன்னர் 'பிணந்தின்னி கழுகுகள்' என்று அழைத்து வந்தார்கள். அந்தப் பெயர் ஓர் எதிர்மறை எண்ணத்தை உருவாக்குவதாகக் கருதி, பழந்தமிழில் பாறு என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்தக் கழுகுகளைப் பாதுகாத்து, எண்ணிக்கையை அதிகரித்து மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பல காலமாக வைக்கப்பட்டு வந்திருக்கிறது.

இதைத் தொடர்ந்து, 10 நபர் குழுவை தமிழக அரசு அமைத்திருக்கிறது. இரண்டு ஆண்டு பதவிக் காலம் கொண்ட இந்தக் குழு பாறு கழுகுகளை கணக்கெடுப்பது, அவற்றை மீட்பது, இனப்பெருக்கம் செய்ய உதவுவது, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகளைச் செய்ய இருப்பதாக தமிழ்நாடு அரசு கூறுகிறது.

ஒரு காலத்தில், எல்லா இடங்களிலும் பாறு கழுகுகள் காணப்பட்டதாகவும், இந்தியா முழுவதும் லட்சம், கோடிகளில் பாறு கழுகுகள் இருந்ததாகவும், இப்போது தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 300 வரையிலான பாறு கழுகுகள் மட்டுமே காணப்படுவதாகவும் பறவைகள் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மும்பை போன்ற விமான நிலையங்களில், பாறு கழுகுகள் அதிகமாகக் கூடி விமான சேவைக்கு பாதிப்பு ஏற்படுத்திய சம்பவங்களையும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

"செங்கழுத்துக் கழுகு, வெண் முதுகு கழுகு, நீண்ட அலகுக் கழுகு, மஞ்சள் முகக் கழுகு ஆகிய நான்கு வகையான பாறு கழுகுகள் தான் தமிழ்நாட்டில் இருக்கின்றன. இவை தவிர மூன்று வகையான பாறு கழுகுகள் தமிழ்நாட்டுக்கு வலசை வருவது பதிவு செய்யப்பட்டிருக்கிறது" என்கிறார் பாறு கழுகுகள் பற்றி ஆய்வு செய்து வரும் ஊட்டியைச் சேர்ந்த பேராசிரியர் ராமகிருஷ்ணன். தமிழ்நாடு அரசு அமைத்திருக்கும் குழுவிலும் இவர் இடம்பெற்றிருக்கிறார்.

மஞ்சள் முகக் கழுகு தருமபுரி மற்றும் ஓசூர் பகுதிகளில் காணப்படுகின்றன. மற்றபடி நீலகிரி காடுகளில் மட்டுமே பாறு கழுகுகள் காணப்படுகின்றன. இந்தியாவில் கழுகுகள் காணப்படும் தென் எல்லை நீலகிரிக் காடுகள் தான் என்கிறார் ராமகிருஷ்ணன்.

நீலகிரியைத் தாண்டிய தென்பகுதிகளில் எங்கும் பாறுக்கழுகுகள் தென்படவில்லை என்பது மிகவும் ஆபத்தான உண்மை என்று இவர் கூறுகிறார்.

பாறு கழுகுகளின் எண்ணிக்கை குறைந்தது

இந்தியாவின் மத்தியப் பகுதி மற்றும் மேற்குப் பகுதிகளில் மாடுகளை புனிதமாகப் பார்க்கும் நடைமுறை இருக்கிறது. அதனால் மாடுகள் சாகும் நிலைவரை அதற்கு சிகிச்சையளித்து காப்பாற்ற முயற்சி செய்வார்கள். அங்கு மாட்டு இறைச்சியை சாப்பிடும் வழக்கமும் இல்லை. அங்கு மாடுகளுக்கு வலிநிவாரணி மருந்துகள் அதிகமாகச் கொடுக்கப்படுவதால், அவற்றை உண்ணும் பாறு கழுகுகள் இறக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் இந்த வலி நிவாரணிகளால் கழுகுகள் இறப்பது மிகவும் குறைவு என்கிறார்கள் கழுகு ஆய்வாளர்கள்.

"தென்னிந்தியாவைப் பொறுத்தவரை பாறுகழுகுகளின் எண்ணிக்கை குறைந்து போக, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடும் விலங்குகளைக் கொல்வதற்காக இறந்துபோன விலங்குகளின் உடலில் விஷத்தை தடவும் வழக்கம் இருந்ததால் அவற்றை உண்ட கழுகுகள் இறந்துபோயின" என்கிறார் ராமகிருஷ்ணன்.

இறக்கும் தருவாயில் உள்ள மாடுகளை கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யும் வழக்கம் இருப்பதால், வலி நிவாரணியை அதிகமாகப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லாமல் போயிருக்கிறது என்று அவர் குறிப்பிடுகிறார்.

நீண்ட காலத்தைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் இப்போதைய எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தாலும், 1990-களை ஒப்பிடுகையில் இது சொற்பமான உயர்வு என்றே கூறலாம் என்கிறார் ராமகிருஷ்ணன்.

பாறு கழுகுகளின் முக்கியத்துவம்

பாறு கழுகுகளை இயற்கைத் துப்புரவாளர்கள் என்கிறார்கள். இறந்த விலங்குகளின் உடலை முற்றிலுமாகத் தின்று துப்புரவு செய்யும் பணியை அவை மேற்கொள்கின்றன.

செங்கழுத்துக் கழுகுக்கு பார்வைத் திறனும், நுகர்வுத் திறனும் அதிகம். எங்காவது ஒரு பிணம் இருப்பை அதில் தெரிந்து கொள்கிறது. வலிமையான அலகு கொண்டிருப்பதால், தோலைக் கிழித்து உண்ணத் தொடங்கும். வெண்முதுகு கழுகும், நீண்ட அலகுக் கழுகும் அதன் பிறகு இறங்கி பிணம் எத்தகையதாக இருந்தாலும் அதை உண்கின்றன. கடைசியில் மஞ்சள் முகக் கழுகு எலும்புகளைக்கூட தின்று விடுகின்றன.

உணவுச் சங்கிலியில் பாறு கழுகுகளுக்கு மிக முக்கியமான இடம் இருக்கிறது. இயற்கையின் துப்புரவாளர்கள் இல்லாவிட்டால் உணவுச் சங்கிலி முற்றிலுமாகப் பாதிக்கப்படும். சுற்றுச்சூழல் கேடு ஏற்படும் என அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.

"விலங்குகளின் உடல்களில் இருக்கும் நுண்ணுயிர்கள் அனைத்தையும் இவை தின்னுவிடுவதால் விலங்குகளில் ஏற்படும் பல தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கப்படுகிறது. இவை இல்லாமல் போனால் ஏற்படும் பாதிப்பு உடனே நமக்குத் தெரியாது. ஆனால் நாளடைவில் கொரோனாத் தொற்றைவிட ஆபத்தான நுண்ணுயிரிகள் மனித குலத்தைத் தாக்க நேரலாம். இவை இருந்தால் அத்தகையத் தொற்று பரவாமல் தடுக்கப்படலாம்" என்கிறார் பாறு கழுகுகளைப் பற்றிய இரு புத்தகங்களை எழுதிய அருளகம் என்ற அமைப்பின் செயலாளர் பாரதிதாசன்.

பாறு கழுகுகளை "ஆகாய மருத்துவர்கள்" என்று இவர் அழைக்கிறார். கழுகுகள் இறப்புக்குக் காரணமாக இருக்கும் கால்நடை மருந்துகளை தடை செய்வதுதான் அரசு அமைத்திருக்கும் குழுவின் முதல் பணியாக இருக்கும் என்று தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாறுபாடு மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு கூறினார்.

பாறு கழுகுகளை மீட்பது, சிகிச்சையளித்து திருப்பியனுப்புவதற்கான ஒரு மையம் அமைப்பதும் அரசின் முயற்சிகளில் அடங்கும் என்று அவர் கூறினார். கழுகுகளைக் கணக்கெடுப்பது, கழுகுகளுக்கான பாதுகாப்புப் பகுதிகளைக் கண்டறிவது, இனப்பெருக்க மையங்களை உருவாக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு அமைத்திருக்கும் குழு எடுக்கும் என்று சுப்ரியா சாகு கூறினார்.

எனினும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் பெரும் சவாலாக இருக்கும் என்று கூறும் அவர், "பாறு கழுகுகள் அழிவின் விளிம்பில் இருப்பதும், அவை இல்லாவிட்டால் என்னவாகும் என்பதும் பலருக்கும் தெரியவில்லை" என்கிறார்.

பாறு கழுகுகளைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு குழு அமைத்திருப்பதை பறவை ஆர்வலர்கள் பலரும் வரவேற்கிறார்கள். பலர் இது முழுமையாகவும் சுதந்திரமாகவும் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.

"சிவிங்கிப் புலியை முற்றாக அழித்துவிட்டு இப்போது தான்சானியா நாட்டிலிருந்து இறக்குமதி செய்துள்ளோம். இது போன்றதொரு நிலைப் பாறுக் கழுகுகளுக்கும் நேர்ந்துவிடக்கூடாது." என்று சமூக ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர்.

Updated On: 8 Jan 2023 7:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  2. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  3. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  4. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  5. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  8. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  10. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து