முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை குறித்து தமிழக விவசாயிகள் விளக்கம்

முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை குறித்து தமிழக விவசாயிகள் விளக்கம்
X

முல்லைப்பெரியாறு அணை.

Mullaperiyar Dam Issue -முல்லைப்பெரியாறு அணை குறித்து மத்திய நீர்வள அமைச்சகம் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக விவசாயிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

Mullaperiyar Dam Issue -முல்லைப்பெரியாறு அணை குறித்து மத்திய நீர்வள அமைச்சகம் கொடுத்துள்ள விளக்கம் ஒருதலைப்பட்சமானது என பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

முல்லைப் பெரியாறு அணையில் எதேச்சதிகாரமாக அட்டவணைப்படுத்தப்பட்டிருக்கும், ரூல் கர்வ் முறையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று, நமது சங்கத்தின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறோம். இந்த வழக்கில் மனுதாரர்களாக கீழப்பூங்குடியை சேர்ந்த நாராயணன், அழகமாநகரியை சேர்ந்த கதிரேசன், வலையராதினிப்பட்டியை சேர்ந்த கிருஷ்ணன், திருமலை அய்யனார், சிலமலை விஜய்மாரீஸ் ஆகியோர் தொடர்ந்த வழக்கு டைரி நம்பர் கொடுக்கப்பட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்ட நிலையில், மத்திய நீர்வள அமைச்சகம் சம்பந்தமே இல்லாமல் மனுதாரர்களுக்கு விளக்கம் கொடுத்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

நோட்டீஸ் அனுப்பியதை கூட ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் ஒழுங்குபடுத்துதல் மற்றும் பராமரிப்பு காரணங்களுக்காகவே முல்லைப் பெரியாறு அணையில் ரூல்கர்வ் முறை அட்டவணைப்படுத்தப்பட்டு இருக்கிறது என்கிற அதனுடைய விளக்கம் முற்றிலும் சர்வாதிகாரத்துக்கு ஒப்பானது. கூடுதலாக இந்த ரூல் கர்வ் முறையை, தமிழக அரசு ஏற்றுக் கொண்டு விட்டது எனவும், மேலாக இதை அமல்படுத்துவதற்கு உச்சநீதிமன்றமும் ஒப்புதல் அளித்திருக்கிறது என்றும் நமக்கு விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

மத்தியநீர்வள அமைச்சகத்தின் இந்த கடிதம், ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று அல்ல. இதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவும் மாட்டோம். கடந்த 2014 ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறது என்றும், பதிநான்கு நிபுணர் குழுக்களின் ஆய்வறிக்கை அடிப்படையிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது என்றும் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்எதற்காக மத்திய நீர்வள ஆணையத்தின் அறிக்கையை ஏற்றுக் கொண்டு இப்போது 8 ஆண்டுகள் கழித்து, மறுபடியும் அணையை பராமரிக்க வேண்டும், மராமத்து செய்ய வேண்டும் என்று கூற வேண்டும்.

நீங்கள் கொடுத்த தீர்ப்பை நீங்களே ஏற்க மறுப்பது என்பது ஜனநாயகத்திற்கு விடப்பட்டிருக்கும் சவாலாகவே பார்க்கிறோம். எனவே ரூல்கர் முறையை எந்த நிலையிலும் முல்லைப் பெரியாறு அணையில் அனுமதிக்கக் கூடாது. அப்படி அட்டவணைப்படுத்த வேண்டுமானால் அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக முதலில் உயர்த்த வேண்டும். அதற்குப் பிறகு ரூல் கர்வ் முறையைப் பற்றி பரிசீரிக்கலாம்.

எனவே நாங்கள் விளக்கம் கொடுக்க வேண்டியது உச்சநீதிமன்றத்திற்கு தானே தவிர, நீர்வள அமைச்சகத்திற்கு அல்ல. நீர்வள அமைச்சகத்தின் எந்த கடிதத்தையும் ஏற்றுக் கொள்ள நாங்கள் தயார் இல்லை. சட்டப்படி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கை சந்திப்போம்.

2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை முழுமையாக நடைமுறைப்படுத்தும் வரை, எங்கள் சட்டப் போராட்டம் தொடரும். இதற்கு முந்தைய தமிழக அரசு கொடுத்த ரூல் கர்வ் அட்டவணைக்கான ஒப்புதலை மாநில அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் எங்களுடைய கோரிக்கையை கவனமாக பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும். எங்கள் இலக்கு 152 அடி. அந்த இலக்கை எட்டும் வரை எங்கள் பயணம் எங்கள் போராட்டம் ஒருபோதும் ஓயாது. இவ்வாறு கூறியுள்ளனர்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!