கேரள விஷம பிரச்சாரத்திற்கு தமிழக விவசாய சங்க தலைவர் சரியான பதிலடி
பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம்.
இடுக்கி மாவட்டத்தில் உள்ள தமிழர்களின் எஸ்டேட்டுகளை கைப்பற்றுவோம் என கேரள விஷமிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் கூறியதாவது:
முல்லைப்பெரியாறு அணையில் இனி பிரச்சினை செய்தால், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பீர்மேடு, தேவிகுளம், உடும்பஞ்சோலை தாலுகாக்களை தமிழகத்துடன் சேர்ப்போம் என நாங்கள் வைத்த கோரிக்கை கேரளாவை ஆட்டிப்படைத்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு தமிழக, கேரள, மத்திய உளவுத்துறை அதிகாரிகள் எங்களை தொடர்பு கொண்டு தகவல்கள் கேட்டு வருகின்றனர்.
கேரளாவிற்கு நாங்கள் வலுவான செக் வைத்துள்ளதால், மிரண்டு போன கேரள விஷமிகள், பீர்மேடு, தேவிகுளம், உடும்பஞ்சோலை தாலுகாவில் உள்ள தமிழர்களின் எஸ்டேட்டுகளை கைப்பற்றுவோம் என மிரட்டல் விடுத்து வருகின்றனர். தைரியம் இருந்தால், அவர்கள் கேரளாவில் உள்ள தமிழர்களின் எஸ்டேட்டுகளின் மீது கை வைத்து பார்க்கட்டும். தமிழகம் முழுவதும் உள்ள மலையாளிகளின் சொத்துக்களையும், நிறுவனங்களையும், நிதி நிறுவனங்களையும், தங்க நகைக்கடைகளையும், கடன் வழங்கும் அடகு கடை நிறுவனங்களையும் நாங்களும் கணக்கெடுத்து வைத்துள்ளோம்.
எந்த சூழலிலும் நாங்கள் வன்முறையினை கையில் எடுக்க மாட்டோம். அரசுக்கோ, சட்டத்திற்கோ சங்கடம் ஏற்படும் காரியங்களை செய்யவே மாட்டோம். ஆனால் கேரள விஷமிகளை கேரள அரசு ஒடுக்காவிட்டால், நாங்கள் பதிலடி தருவோம். கேரள சொத்துக்களை அவர்கள் எடுத்துச் செல்ல விடாமல் தடுத்து விடுவோம். மற்றபடி சொத்துக்களுக்கு எந்த சேதமும் செய்யமாட்டோம்.
என்னிடம் பேசிய கேரள முக்கிய பிரமுகர், 'நீங்கள் தமிழகத்தில் உள்ள கேரள சொத்துக்களை தொட்டால் உங்கள் போலீசை வைத்தே உங்களை நசுக்குவோம்' என கூறினார். இந்த உரையாடலை நான் பதிவு செய்து வைத்துள்ளேன்.
கேரளாவில் தமிழர்கள் சொத்துக்கள் அழிக்கப்படும் போது, கேரள போலீஸ் வேடிக்கை பார்த்தால், தமிழகத்தில் தமிழக போலீசாரும் அதே நிலையை எடுப்பார்கள். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை இனிமேல் இருக்கும். நாங்கள் அமைதியான வழியில் எங்கள் உரிமையை தான் கேட்டோம். ஆனால் பீர்மேடு, தேவிகுளத்தை நாங்கள் கேட்கும் அளவு பிரச்சினையை தூண்டியது நீங்கள் தான். எம்.ஜி.ஆர்., உடன் போட்ட ஒப்பந்தப்படி முல்லைப்பெரியாறு அணை பலப்படுத்திய சில நாட்களிலேயே 152 அடி தண்ணீர் தேக்கலாம் என ஒத்துக்கொண்ட நீங்கள், தற்போது 42 ஆண்டுகளை கடந்தும் பிரச்சினையை தீர்க்காமல் நாளுக்கு நாள் தீவிரப்படுத்துவது ஏன் என கேட்டேன். அதற்கு அவர் பதிலளிக்கவில்லை. இப்போதும் சொல்கிறோம். நாங்கள் எந்த ஒரு வலுவான உறுதிமொழியும் அளிக்க தயாராக உள்ளோம். நொடிப்பொழுதும் கேரள சகோதரர்களுக்கு நாங்கள் சிறு தீங்கு கூட இழைக்கவே மாட்டோம். ஆனால் எங்கள் உரிமை பிரச்சினையான முல்லைப்பெரியாறு ஜீவாதார பிரச்சினையில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. எங்கள் மாவட்டங்கள் பாலைவனமாவதை தடுத்தே தீருவோம்.
இவ்வாறு கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu