பாதுகாப்பாக உள்ளது தமிழகம் இப்படியே இருந்தா எப்படியிருக்கும்...!
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சிகள் கடுமையான புகாரை எழுப்பி வந்தன. அதற்கேற்ப தினமும் பல இடங்களில் அடிதடி, தகராறு, மதுபாட்டில் விற்பனை, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை நடந்து வந்தது. பெண்கள் மீதான தாக்குதல்களும் நடந்து வந்தன. அதேபோல் வீடு புகுந்து திருடுவதும் அதிகம் இருந்தது. ரோடு விபத்துக்களும் அதிகம் இருந்தது. கடத்தல் பிரச்னைகளும் இருந்தன.
இந்நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் 24 மணி நேர வாகன சோதனை, ரோந்து பணி தொடங்கி உள்ளது. இதுவரை தனியாக போராடி வந்த போலீஸ்துறைக்கு, தேர்தலுக்கு பின்னர் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வங்கித்துறை என பல்வேறு துறைகளும் களம் இறங்கி உள்ளன.
மூன்று ஷிப்டுகளாக சோதனை நடக்கிறது. அதுவும் ஒரு சிறிய நகராட்சியில் மட்டும் நான்கு முதல் ஐந்து இடங்களில் நடக்கிறது. மாவட்டம் முழுவதும் கணக்கிட்டால் 50 இடத்தை தாண்டும். இதே பெரிய மாவட்டத்தை கணக்கிட்டால் இன்னும் எண்ணிக்கை அதிகரிக்கும். தவிர வாகன சோதனைகளை ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மட்டுமின்றி தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும் கண்காணித்து வருகின்றனர்.
இதனால் இப்பணிகள் மிகவும் சிறப்பாக நடக்கின்றன. தேர்தல் பணி என்பதாலும், சமூக ஊடகங்கள் கடும் விழிப்புடன் இருப்பதாலும், சோதனை தீவிரமாகவே உள்ளது. இதனால் சமூக விரோதிகளின், சமூக விரோத செயல்கள் செய்பவர்களின் சப்தநாடியும் ஒடுங்கிப்போய் உள்ளது. தேர்தல் நேரம் என்பதால் யாரையும் பகைத்துக் கொள்ளக்கூடாது என நினைத்து ‘குடி’மகன்களும், சண்டைக்கோழிகளும் சற்று அடக்கியே வாசிக்கின்றன.
இதனால் குடியிருப்பு பகுதிகள், கிராமப்பகுதிகளில் சண்டை சச்சரவுகளும் குறைந்து விட்டன. எப்படியோ வரும் ஏப்., 19ம் தேதி வரை தமிழகம் நிம்மதியாக இருக்கும்... எங்களுக்கு நிம்மதியான காலம்.... அதன் பின்னர் உதவிக்கு வந்தவர்கள் ஒதுங்கி விடுவார்கள். எங்களிடமும் போதிய அளவு போலீசார் இல்லை. நாங்கள் தனியாகத்தான் போராட வேண்டும் என போலீசார் புலம்புகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu