சென்னை- பெங்களூரு ஹைப்பர் லுாப் ரயில் ஆய்வு

பைல் படம்
இந்தியாவில் ஹைப்பர் லூப் (Hyperloop) ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பான ஆய்வை ரயில்வே வாரியம் மேற்கொள்ளவுள்ளது. இதற்கான ஆலோசகர்களை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது.
உலகில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் வந்தே பாரத் ரயில், புல்லட் ரயில் உள்ளிட்ட அதி வேக போக்குவரத்து வசதிகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் அடுத்த கட்டமாக ஹைப்பர் லூப் போக்குவரத்தும் வரவுள்ளது. இதற்கான சாத்தியக் கூறு ஆய்வுகளை இந்திய ரயில்வே வாரியம் மேற்கொள்ளவுள்ளது.
ஹைப்பர்லூப் தொழில்நுட்பம்: வெற்றிடமான குழாய்க்குள், ஒரு கேப்சூல் மூலம் பயணிப்பது. காந்த அலைகள் மூலம் இந்த கேப்சூலை நகர்த்தும் தொழில்நுட்பம்தான் ஹைப்பர் லூப். ரயில் பாலங்கள் போலவே, இதற்கென பிரத்யேக தூண்கள் அமைக்கப்பட்டு, அதன் மேல் குழாய்கள் நிறுவப்படும். அந்த குழாய்க்குள் பயணத்திற்கான கேப்சூல்கள் இருக்கும். கேப்சூலின் உள்ளே பயணிகள் அமர்ந்திருப்பர். காந்த அலைகள் மூலம் கேப்சூலை நகர்த்தும் போது, ரயில் தண்டவாளத்தில் செல்வது போல கேப்சூல் குழாய்க்குள் பயணிக்கும்.
வேகம்: 2012-ம் ஆண்டு கலிபோர்னியாவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசிய டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் மணிக்கு 1,200 கி.மீ வேகத்திலும் செல்லும் புதிய போக்குவரத்து முறையை ஆய்வு செய்து வருவதாகக் கூறினார். இதன் பிறகு டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இணைந்து ஹைப்பர் லூப் என்ற தொழில் நுட்பத்தை உருவாக்கியது. 2020-ம் ஆண்டு விர்ஜின் ஹைப்பர் லூப் நிறுவனம் மணிக்கு 170 கிலோமீட்டர் வேகத்தில் ஹைப்பர் லூப் பாட்களை இயக்கி சோதனை செய்தது.
இந்தியாவில் ஹைப்பர்லூப்: மும்பைக்கும் புனேவுக்கும் இடையே ஹைப்பர் லூப் போக்குவரத்து பாதை அமைப்பதற்காக ஹைப்பர் லூப் டிரான்ஸ்போர்டேஷன் டெக்னாலஜிஸ் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. ஹைப்பர் லூப் போக்குவரத்து கொண்டு வரப்பட்டால் மும்பையில் இருந்து புனேவுக்கு 35 நிமிடத்தில் செல்லலாம் என்று கூறப்படுகிறது. இந்த திட்டத்திற்கு ஒப்புதல் பெறுவதற்கான பணிகளை மகாராஷ்டிரா அரசு எடுத்து வருகிறது.
சென்னை ஐஐடி: சென்னை ஐஐடியின் ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியரிங் துறை மாணவர்கள் ஹைப்பர் லூப் போக்குவரத்து முறையை ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கு ரயில்வே துறை ரூ.8.50 கோடி நிதி உதவி அளித்துள்ளது. ஹைப்பர் லூப் மூலம் 2025-ம் ஆண்டு சரக்கு போக்குவரத்தும், 2030-ம் ஆண்டு பணிகள் போக்குவரத்தும் தொடங்க சென்னை ஐஐடி திட்டமிட்டுள்ளது. மேலும் இதன்மூலம் 25 நிமிடத்தில் சென்னையில் இருந்து பெங்களுரூவிற்கு செல்லலாம் என்று கூறப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu