தமிழர்களின் உரிமைகளை மீட்க போராட்டம்; விரைவில் அறிவிப்பு
பீர்மேடு, தேவிகுளம், உடும்பஞ்சோலை தமிழர்களின் உரிமைகளை மீட்க போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு, விரைவில் வெளியாகிறது.
HIGHLIGHTS

பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம்.
கேரளா ஆக்கிரமித்துள்ள தேவிகுளம், பீர்மேடு, உடுமஞ்சோலை நீலகிரி வரையிலான 236 தமிழக கிராமங்கள், அங்கு வாழும் தமிழர்களின் சுதந்திரமான வாழ்வு குறித்து விரைவில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என, பெரியாறு வைகை பாசன விவசாயிகள் அறிவித்து உள்ளனர்.
இச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் கூறியதாவது;
இந்தியாவில் கடந்த 1956 ல் இருந்து தொடர்ந்து பல மாநிலங்களுக்கு இடையே எல்லைப் பிரச்சினைகள் நீடிக்கின்றன. கர்நாடக - மகாராஷ்டிர மாநிலங்களுக்கு இடையே 50 ஆண்டுகளாக தொடரும் எல்லை சார்ந்த விவகாரம், தற்போதைய பாஜக ஆட்சி காலத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மத்தியில் மட்டுமன்றி, பிரச்சினைக்குள்ளான 2 மாநிலங்களிலும் பாஜகவே ஆட்சியில் இருக்கிறது.
கர்நாடக மாநிலத்தை நேரடியாக பாஜக ஆள்கிறது. மராட்டிய மாநிலத்தில் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கூட்டணியில், துணை முதல்வர் பொறுப்புடன் பாஜக ஆட்சி செய்கிறது. 2 பாஜக மாநிலங்களும் பரஸ்பரம் எல்லை கிராமங்களை குறிவைத்து, அடுத்த மாநிலத்தின் பிராந்தியங்களில் உரிமை கோருகின்றன. இவை தொடர்பாக உச்ச நீதிமன்ற வழக்கு வரை இரு மாநிலங்களுக்கும் இடையிலான எல்லை தாவா இழுபறியில் உள்ளது.
அண்மையில் இரு மாநில முதல்வர்கள் இடையிலான வார்த்தைகள் பரிமாற்றமும் வரம்பு கடந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் சமாதான ஏற்பாடுகள் தொடங்கின. ஆனபோதும் இந்த பிரச்சினை அதிகாரபூர்வமாக அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. அதன்படி, எல்லைப் பிரச்சினையில் கர்நாடக மாநிலம் தனது உரிமையை வலியுறுத்தும் வகையில் கடந்த வியாழன்று சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றியது.
இதற்கு பதிலடியாக, டிசம்பர்.27ம் தேதி மராட்டிய சட்டப்பேரவையில் ஒரு தீர்மானம் றைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தில், ''கர்நாடக எல்லைக்கு உட்பட்ட மராத்தி பேசும் பெல்காம் உள்ளிட்ட 5 முக்கிய நகரங்கள் மற்றும் 865 கிராமங்களின் ஒவ்வொரு இஞ்ச் நிலப்பரப்பும், மகாராஷ்டிராவின் உரிமைக்கு உரியது*' என அறிவித்துள்ளார்கள்.
கர்நாடகாவின் மராத்தி பேசும் மக்களின் பாதுகாப்பை, அந்த மாநில அரசு உறுதி செய்ய, மத்திய அரசு உத்தரவிடுமாறும் கோரப்பட்டுள்ளது. இது தொடர்பாக முன்னாள் முதல்வரும் பிளவுறாத சிவசேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே கர்நாடகம் 'ஆக்கிரமித்துள்ள' மகாராஷ்டிர பிராந்தியங்களை தனி யூனியன் பிரதேசமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்' என்று அதிரடியாக பேசி வருகிறார்.
தமிழகமும் அதே 1956 ம் ஆண்டு இழந்த 1400 சதுர கிலோமீட்டர் பரப்பை உள்ளடக்கிய, தேவிகுளம், பீர்மேடு, உடுமஞ்சோலை உள்ளிட்ட நகரங்களையும் நீலகிரி வரை உள்ள 260 க்கும் மேற்பட்ட கிராமங்களையும் மீட்க வேண்டும் அல்லது யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும். இது குறித்து விரிவாக பேசி, கேரளாவின் பிடியில் சிக்கி உள்ள தமிழர்களின் சுதந்திர வாழ்வுக்காக தொடர் போராட்டங்கள் நடத்த வேண்டும். இது பற்றிய அறிவிப்பினை விரைவில் வெளியிட, ஆலோசனை கூட்டம் நடத்தி போராட்ட தேதிகள் அறிவிக்கப்படும். தமிழர்களின் உரிமைகள், சுதந்திர வாழ்வுஉறுதிப்படுத்தும் வரை அல்லது பீர்மேடு, தேவிகுளம், உடும்பஞ்சோலை பகுதிகள் தமிழகத்துடன் இணைகப்படும் வரை போராட்டம் தொடரும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.