முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையை 30 நாளில் தீர்க்காவிட்டால் போராட்டம்

முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையை 30 நாளில் தீர்க்காவிட்டால் போராட்டம்
X

முல்லைப்பெரியாறு அணை (பைல் படம்)

முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையை 30 நாட்களுக்குள் பேசித்தீர்க்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையை தமிழக- கேரள அரசுகள் 30 நாட்களுக்குள் பேசித்தீர்க்காவிட்டால், பீர்மேடு, உடும்பஞ்சோலை, மூணாறு உள்ளிட்ட தமிழர்கள் வாழும் பகுதிகளை திரும்ப கேட்டு போராட்டம் நடத்துவோம் என முல்லைப்பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- 1979 ஆம் ஆண்டு,முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியிலிருந்து, 136 அடியாக குறைத்து, தமிழகத்திற்கும் கேரளத்திற்குமிடையே ஒப்பந்தம் கையெழுத்தான போது, அணையினை பலப்படுத்தி பத்து ஆண்டுகளுக்குள் அணையில் மீண்டும் 152 அடி தண்ணீர் தேக்க வேண்டும் என உறுதி அளிக்கப்பட்டது.

ஆனால் நீர்மட்டம் குறைக்கப்பட்டு 42 ஆண்டுகள் கழிந்தும், இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற கேரளா முன்வரவில்லை. தவறான பிரச்சாரங்களும் தொடர்ந்து கேரள மாநிலம் முழுவதும், இனவெறி அமைப்புகளாலும், என். ஜி. ஓ. க்களாலும் பரப்பப்பட்டு வருகிறது.

ஒப்பந்தம் 999 ஆண்டுகளுக்கு இருந்தும், இன்று கிட்டத்தட்ட முல்லைப் பெரியாறு அணை, கேரளா வசம் போய் விட்டதாக, பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது.

இரண்டு மாநில முதல்வர்களும் தனித்தன்மையோடு ஒத்த கருத்தில் தேசிய நீரோட்டத்தில் பயணிக்கும் நிலையில், இந்தப் பிரச்சனையை தீர்க்க முன் வராதது மிகப் பெரிய ஏமாற்றமே.

கிட்டத்தட்ட இரண்டு லட்சம் ஏக்கர்களுக்கு மேல் நேரடி பாசனம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மறைமுகமாக 4 லட்சம் ஏக்கர்களுக்கு மேல் பெரியாறு பாசனத்தில் தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது.

மதுரை மாவட்டத்தில் மேலூர் தாலுகா சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள், பெரியாறு தண்ணீரின்றி கடும் வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கிறது.

ஆனால் விஷமப் பிரச்சாரங்களுக்கும், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதற்கும் தடை ஏதும் இன்றி மலையாளிகள் ஆடும் ருத்ரதாண்டவம், பெரியாறு பாசனத்தில் கடைமடை விவசாயிகளை விரக்தியின் விளிம்புக்கு தள்ளி விட்டிருக்கிறது.

தீர்வுக்கான வாய்ப்புகளே இல்லாத நிலையில், நாங்கள் சில கோரிக்கைகளை முன்வைக்க வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. 1956 ஆம் ஆண்டு பண்டித நேருவின் அரசாங்கத்தால்,வலியத் திணிக்கப்பட்ட மொழிவழி பிரிவினை குழுவின் அறிக்கையை ரத்து செய்து, தமிழகம் கேரளாவிடம் இழந்த பகுதிகளை மீளத் திரும்ப பெறுவதற்கு, ஒன்று அளவீடு செய்ய வேண்டும் அல்லது தேவிகுளம்,பீர்மேடு மற்றும் உடுமஞ்சோலை ஆகிய மூன்று தாலுகாக்களில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

இல்லையேல் கர்நாடக- மகாராஷ்டிர எல்லை பிரச்சனையை தீர்ப்பதற்காக, 1976 ம் ஆண்டு அன்றைக்கு பிரதமராக இருந்த இந்திரா காந்தியால், உருவாக்கப்பட்ட ஒரு நபர் கமிட்டியான மகாஜன் கமிட்டியை போல ஒரு பொதுவான கமிட்டியை முன்னிறுத்தி, மேற்படி தாலுகாக்களில் வாக்கெடுப்புக்கு மத்திய அரசு முன் வர வேண்டும்.

அதே நேரத்தில் கர்நாடக உணவுத்துறை அமைச்சரான உமேஷ் கட்டி நேற்று சொன்ன ஒரு கருத்தையும் ஆதரிக்கிறோம். வட கர்நாடகத்தைச் சேர்ந்தவரான உமேஷ், தொடர்ந்து வட கர்நாடகம் வளமாக இல்லை என்றும் எனவே கர்நாடகா இரண்டாகப் பிரிக்கப்பட வேண்டும் என்றும் குரல் கொடுப்பவர். இவர் பிரச்சனைக்குரிய பெல்காமில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது 2022ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு நாட்டில் 50 புதிய மாநிலங்களை உருவாக்க பிரதமர் மோடி அவர்கள் ஆவலோடு இருப்பதாக கூறியிருக்கிறார்.

அப்படி நடந்தால், தேவிகுளம் பீர்மேடு மற்றும் உடுமஞ்சோலையை கேரளாவில் இருந்து பிரித்து புதிய மாநிலம் உருவாக்கப்பட வேண்டும்.இன்றளவும் கர்நாடகத்தோடு எதேச்சதிகாரமாக 1956 ல் இணைக்கப்பட்ட மராட்டிய பகுதிகளான பெல்காம், கார்வார் மற்றும் நிப்பானி ஆகிய பகுதிகளை கேட்டு தொடர்ச்சியாக மராட்டியத்தில் போராட்டங்கள் நடந்து வருவது போல, நாங்களும் போராட வேண்டிய நெருக்கடியை உருவாக்கும்.

1956 இல் மொழிவழி பிரிவினை நடந்தபோது, பெல்காம் மாவட்டத்தில் மட்டும், மராத்தி பேசும் மக்களுடைய எண்ணிக்கை 51%. ஆனால் அது இன்று 44 விழுக்காடாக குறைந்திருக்கிறது.

அதே காலகட்டத்தில் தேவிகுளம் பீர்மேடு மற்றும் உடுமஞ்சோலை ஆகிய மூன்று தாலுகாக்களில் சராசரியாக வாழ்ந்த தமிழர்களுடைய எண்ணிக்கை 72 விழுக்காடு.

பெல்காம் மாநகரத்தின் பெயரையே பெலகாவி என்று மாற்றி, குளிர்கால சட்டமன்றத்தை அங்கு கட்டி, அதில் குளிர்கால சட்டமன்ற கூட்டத்தொடரையே கர்நாடக மாநில அரசு நடத்தினாலும், பெல்காம், கார்வார் மற்றும் நிப்பானி ஆகிய பகுதிகளில் இன்றளவும் நாங்கள் மராத்தியர்கள் தான் என்று ஓங்கி முழங்கிக் கொண்டிருக்கிறார்கள் அங்குள்ள மராத்திய மக்கள்.

அதே முழக்கத்தை தேவிகுளம்,பீர்மேடு, உடுமஞ்சோலையிலும் நாங்கள் எழுப்புவோம். கர்நாடக முதலமைச்சராக இருந்த குண்டுராவ், கேரள மாநிலத்தின் கண்ணூர் மாவட்டத்தில் ஒரு தாலுகாவாக இருந்த காசர்கோட்டை (இப்போது இது ஒரு மாவட்டம்) கேட்டு அடம்பிடித்ததை போல, தேவிகுளம் பீர்மேட்டை கேட்டு அடம்பிடிக்க இங்கு அரசியல்வாதிகள் எவரும் இல்லை.

கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பரில் கூட, உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் எல்லை பிரச்சனைகளுக்கான வழக்கை பார்ப்பதற்காக, தற்போது புரட்சி செய்து கொண்டிருக்கும் மராட்டிய மாநில சிவசேனா அமைச்சரான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மூன்று அமைச்சர்களை நியமித்து உத்தரவிட்டிருந்தார் உத்தவ் தாக்கரே.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டு வர கேரள மாநில அரசு தயாராகவில்லை என்றால்,

தேவிகுளம்,மூணாறு,மறையூர், பூப்பாறை, கஜானா பாறை, டாப் ஸ்டேஷன், வட்ட வடை, கோவிலூர், குமுளி, கம்பம்மெட்டு, போடி மெட்டு, வண்டிப்பெரியாறு ஆகிய எல்லையோர கேரள மாநில கிராமங்களில், சுவரொட்டிகள் ஒட்டி, முழக்கங்கள் எழுப்புவதற்கும் இப்பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க கேட்டு போராடுவதற்கும் நாங்கள் தயாராகி வருகிறோம்.

மொழிவழி பிரிவினை எனும் மோசடியால் 1,400 சதுர கிலோமீட்டர் பரப்பை கேரளாவிடம் தமிழகம் இழந்து நிற்கும் நிலையில், நூற்றாண்டுகளுக்கு செல்லுபடியாகும் நீர் உரிமைகளையும் பறிப்பார்களானால்,

தேவை தமிழர் பகுதிகளுக்கு தனி மாநில அந்தஸ்து.கூடுதலாக இன்னொன்றையும் முன்வைக்க விரும்புகிறோம்.மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங் என்றழைக்கப்படும் கூர்க்கா லேண்ட் முழுக்க முழுக்க மலைப்பகுதி ஆகும்.

மேற்கு வங்கத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு, தன்னாட்சி பெற்ற கவுன்சில் அந்தஸ்தாக தரம் உயர்த்தப்பட்டு இருப்பதைப் போல,தேவிகுளம் பீர்மேடு மற்றும் உடுமஞ்சோலை ஆகிய மூன்று தாலுகாக்களையும், தன்னாட்சி கவுன்சில் பெற்ற அந்தஸ்துடன் கூடிய பகுதியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

அடுத்த ஒரு மாத காலத்திற்குள் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையை தீர்ப்பதற்கு இரண்டு மாநில அரசுகளும் முன்வராத பட்சத்தில், எல்லையோர கிராமங்களில் நாங்கள் போராட்டத்தை துவக்குவோம். தன்னாட்சி கவுன்சில் அந்தஸ்து கோரி உச்சநீதிமன்றத்தை நாடுவோம்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது