வலுவாக மிரட்டும் பாஜக; எடப்பாடியை விட்டு போகும் அதிமுக

வலுவாக மிரட்டும் பாஜக; எடப்பாடியை விட்டு போகும் அதிமுக
X

எடப்பாடி பழனிசாமி.

அ.தி.மு.க., உள்கட்சி பிரச்னையில் பா.ஜ., தலையிட்டுள்ளதால் அக்கட்சி எடப்பாடியின் கையை விட்டு போகும் சூழல் உருவாகியுள்ளது.

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் பல்வேறு மாற்றம் நிகழ்ந்தது. இறுதியாக பாஜக தலையீட்டால், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வசம் அதிமுக வந்தது.

ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவை வழி நடத்தி வந்தனர். இதற்கிடையே இவர்கள் இருவரும் தங்களுக்குள் பனிப்போர் நடத்தி வந்ததாகவும் சொல்லப்பட்டது.

இதன் எதிரொலியாக தன்னுடன் சேர்ந்து பயணித்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு அல்வா கொடுக்க முடிவு செய்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக முன்னணி நிர்வாகிகள் பலரையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டார்.

இவர்களின் துணையுடன் ஒற்றை தலைமை விவகாரத்தை கையில் எடுத்ததோடு நிற்காமல், பொதுக் குழுவை கூட்டி இடைக்கால பொதுச்செயலாளர் பதவியையும் எடப்பாடி பழனிச்சாமி கைப்பற்றினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்கி, எடப்பாடி பழனிச்சாமி அதிரடி காட்டினார். இதனால் ஆத்திரமடைந்த ஓபிஎஸ் அதிமுகவுக்கு உரிமை கோரி சட்டப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

அதேசமயம் தனக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி குறித்து விளக்கி கூறவும், மீண்டும் இறங்கி நியாயம் பெற்று தரவும் கோரி பாஜக மேலிடத்தின் கதவை ஓபிஎஸ் தட்டி இருக்கிறார். இதை சீரியசாகவே எடுத்துக்கொண்ட பாஜக மேலிடம் எடப்பாடியிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது ''நீங்கள் என்ன சொல்றது.. நான் என்ன கேட்கிறது. கட்சி என் பின்னால் இருக்கிறது. பெருவாரியான பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் என் பின்னால் உள்ளார்கள்'' என்று, எடப்பாடி கூறியுள்ளார்.

இதில் டென்ஷன் ஆன பாஜக தரப்பு குறிப்பிட்ட காலக்கெடுவை கொடுத்து, ''ஓபிஎஸ், சசிகலா, டிடிவி ஆகியோரை அதிமுகவில் மீண்டும் இணைத்து விட்டு வாங்க'' என்று கறாராக கூறியுள்ளது. இந்த உத்தரவை தடாலடியாக நிராகரித்த எடப்பாடி பழனிச்சாமி, ''இனி பாஜகவின் பஞ்சாயத்தில் கலந்துகொள்ள போவதில்லை'' என்று தெரிவித்து அதிரடியை அரங்கேற்றியுள்ளார்.

இதனால் டென்ஷன் ஆன பாஜக மேலிடம் சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என எதிலும் எடப்பாடி கை ஓங்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி, ''கட்சியை ஓபிஎஸ், சசிகலா வசம் ஒப்படைத்துவிட்டு ஆதரவாளர்களுடன் வெளியேறுங்கள்'' என்று மறைமுகமாக உத்தரவு போட்டு உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரம் காதை கடிக்கிறது.

பாஜக சொன்னால் நடக்கும் என்பதை அறிந்து வைத்து இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, தனக்கு நெருக்கமான ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்து, வருவதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!