காமயகவுண்டன்பட்டியில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு
கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தேனி கலெக்டரிடம் மனு கொடுத்த சமூக ஆர்வலர்கள்.
இது தொடர்பாக தேனி கலெக்டர் அலுவலகத்தில் எதிர்ப்பாளர்கள் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:
கடந்த பிப்ரவரி 27ம் தேதி அன்று தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே காமயக்கவுண்டன்பட்டியில் 6 கல்குவாரிகள் அமைப்பதற்கான பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிப்பதற்காக வந்திருந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் கம்பூர் செல்வராஜ், கரிமேடு அண்ணாதுரை, கச்சைகட்டி ஞானசேகரன் ஆகிய மூவரையும் கல்குவாரிக்கு எதிராக கருத்து தெரிவிக்க விடாமல் தடுத்து அவர்களை கூட்டம் நடந்த அரங்கைவிட்டு கல்குவாரி ஆதரவாளர்களால் வெளியே தள்ளப்பட்டனர். இது முழுக்க முழுக்க ஜனநாயக அநீதியாகும். சட்டத்திற்கு விரோதமானதும் கூட.
மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருந்த அந்த கருத்து கேட்பு கூட்டத்தில் நடந்த இவ்வாறான நிகழ்வு மிகவும் கண்டனத்துக்குரியதாகும். இதிலிருந்து நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டமானது முறையாக நடைபெறவில்லை என்பது தெளிவாகிறது.
அதேபோல் காமயக்கவுண்டன்பட்டியில் கல்குவாரி அமையுள்ள இடத்தை சுற்றிலும் விளை நிலங்களும், நீர்நிலைகளும் சூழ்ந்து காணப்படுகிறது. அருகில் சண்முகா நதி அணைக்கட்டு, வழிபாட்டு தளங்கள் பழங்கால குகை ஓவியங்கள் உள்ளன. மேலும் அருகில் உள்ள மேகமலை புலிகள் சரணாலத்தில் உள்ள விலங்குகளுக்கு கல்குவாரியில் வைக்கப்படும் வெடிகளால் கருச்சிதைவிற்கு காரணமாகி விடும் சூழல் உள்ளது .
எனவே காமயக்கவுண்டன்பட்டி கருத்து கேட்பு கூட்ட நிகழ்வினை ரத்து செய்வதோடு அங்கே கல்குவாரிகள் அமைப்பதற்கு எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.
நிகழ்விற்கு தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் சி. நேதாஜி தலைமை தாங்கினார். கனிம வளக் கொள்ளைக்கு எதிரான கூட்டமைப்பு மற்றும் இயற்கை வள பாதுகாப்பு இயக்கத்தின் கம்பூர் செல்வராஜ், மக்கள் சட்ட உரிமை இயக்க கரிமேடு அண்ணாதுரை, தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் பொறுப்பாளர்கள் காராமணி, தமிழ்ச்செல்வன், சின்னன், ராஜேஷ், பெரியார் வைகை பாசன விவசாயிகள் சங்க பொறுப்பாளர்கள் சுப்பையா, பழனிச்சாமி, சரவணகுமார், E.M.S.அபுதாகிர் UCPI(M.K),புரட்சிகர இளைஞர் முன்னணி உதுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu