2ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகம்
நாட்டின் 51 ஆவது புலிகள் காப்பகமாகவும், தமிழகத்தின் மிகப்பெரிய புலிகள் காப்பகமாகவும் உருவான ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம், வனச் சட்டப்படி அறிவிக்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்று இரண்டாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.
இன்னமும் வளம் குன்றாத சோலைக்காடுகளை ஏக்கர் கணக்கில் தன்னகத்தே கொண்டிருக்கும் மேகமலை புலிகள் காப்பகம், 2001 வனச்சட்டத்தின் அடிப்படையில் முழுமையாக *National tiger conservation authority* ன் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை வனப்பகுதி களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பிறகு புதிய வனப்பை எட்டியிருப்பதை, கணக்கில் கொண்டாவது ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தை வனத்துறை தன்னுடைய முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டும். இங்குள்ள தேயிலை கம்பெனிகளை இழுத்துப்பூட்டி தேயிலை செடிகளை வெட்டி அப்புறப்படுத்தவேண்டும். அங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் 1200 க்கும் உட்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கு, மாற்று ஏற்பாட்டை செய்து கொடுத்துவிட்டு,தென்பழனி சோதனைச் சாவடி முதல் மஹாராஜா மெட்டு வரை, வனச் சட்டங்களை கடுமையாக அமல் படுத்துவதற்கு வனத்துறை முன் வர வேண்டும்.
சொகுசு விடுதி என்கிற பெயரில் திறந்தவெளி பார்களை வனத்துறையில் உள்ள சில கருப்பு ஆடுகளின் உதவியோடு நடத்தும், காடழிப்பு மாஃபியாக்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். கூடுதலாக அத்து மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சதுர அடிக்கு 10 ஆயிரம் வீதம் தண்டத்தொகை விதித்து, இடித்து அப்புறப்படுத்த வேண்டும். சட்டவிரோதமாக தங்களுடைய விடுதிக்கு சாலை அமைத்தவர்களையும், ஆழ்துளை கிணறு அமைத்தவர்களையும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இந்த காப்பகத்தை உருவாக்கும் போது இந்திய வனத்துறை ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகம் என்பது வெறுமனே வன விலங்குகளை பாதுகாப்பது மட்டுமல்ல, அதற்கும் மேலாக வைகை ஆற்றின் தோற்றுவாயை பாதுகாக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம் என கூறியது. முதல் ஆண்டில் ஆண்டில் பெரிதாக எவ்வித பணிகளும் புலிகள் காப்பகத்தில் நடைபெறாத நிலையில்...இந்த ஆண்டாவது அதிரடியாக தன்னுடைய பயணத்தை புலிகள் காப்பகம் தொடரவேண்டும் என்பது ஐந்து மாவட்டத்தில் வாழும் 90 லட்சம் மக்களின் ஆசை.
முதலில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள சொகுசு விடுதிகளை அப்புறப்படுத்துவதில் தனி கவனம் செலுத்த வேண்டும். வனப்பகுதியை சூறையாடுவதில் இவர்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இவர்களை ஒடுக்காமல் வனத்தை சீர் செய்ய இயலாது. சட்ட விரோத கட்டிடங்களுக்கு அனுமதி கொடுத்த அரசுத்துறை அதிகாரிகள் அத்தனை பேரையும், தங்களுடைய இரும்புப் பிடிக்குள் வனத்துறை கொண்டு வர வேண்டும். மேலாக இந்த இரண்டாம் ஆண்டை, சட்டவிரோத கட்டிடங்களை அகற்றும் ஆண்டாக திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் அறிவிக்க வேண்டும். மேகமலை புலிகள் காப்பகம் காப்பாற்றப்பட்டால், நிச்சயம் வைகை வற்றாத நதியாக மாறும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu