வணிகமயமான வீரபாண்டி திருவிழா! நெருக்கடியில் தவிக்கும் பக்தர்கள்

வணிகமயமான வீரபாண்டி திருவிழா! நெருக்கடியில் தவிக்கும் பக்தர்கள்
X

பக்தர்கள் அமர்ந்து ஓய்வெடுக்க ஒதுக்கப்பட்ட இடம் முழுவதும் தற்போது பொருட்காட்சி திடலாக மாறி விட்டது.

ஆன்மிகமயமான தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழா முழுக்க முழுக்க வணிகமயமாக மாறிப்போனது

தேனி மாவட்டம் வீரபாண்டியில் கவுமாரியம்மன் கோயில் விழா மாவட்டத்தின் மிகப்பெரிய திருவிழா ஆகும். இந்த விழா நடக்கும் சமயத்தில் ஒரே நேரத்தில் பல லட்சம் பக்தர்கள் திடலுக்கு வந்து செல்வார்கள். தொடர்ச்சியாக இடைவெளி ஏதுமின்றி எட்டு நாட்கள் விழா நடக்கும். இதற்கான விழாத்திடல் குறைந்தபட்சம் 6 கி.மீ., நீளம் இருக்கும்.

கோயிலை சுற்றி உள்ள பகுதியில் மிகப்பெரிய அளவில் இடவசதியும் உள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி, பொருட்காட்சி திடலை சுற்றிப்பார்த்து விட்டு செல்ல குறைந்தபட்சம் 8 மணி நேரம் வரை ஆகும். இடைப்பட்ட நேரத்தில் சாப்பிடுவது, ஓய்வெடுப்பது போன்ற தேவைகளுக்கு கோயிலுக்கு அருகில் இருந்த விழாத்திடலை பயன்படுத்தி வந்தனர். இதற்கெனவே இந்த விழாத்திடலை சுத்தப்படுத்தி வைத்திருப்பார்கள்.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்த இடத்தில் கிடா வெட்டி சமைப்பது, உணவு பறிமாறுவது, ஓய்வெடுப்பது போன்ற பணிகளை செய்து வந்தனர். இந்த இடம் எப்போதும் சுத்தமாக இருக்கும் பல பக்தர்கள் இரவு முழுவதும் இங்கு தூங்கி எழுந்து மறுநாள் வழிபாடு செய்யும் பழக்கமும் இருந்தது. பல ஆண்டு காலமாக இந்த நிலை இருந்து வந்தது.

ஆனால் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் அலட்சிய போக்கு, அக்கறையின்மை, மற்றும் அரசியல்வாதிகளின் பணம் சம்பாதிக்கும் சுயநலப்போக்கு காரணமாக இந்த இடம் முழுக்க வணிகமயமாக மாறி விட்டது.

பக்தர்கள் அமர்ந்து ஓய்வெடுக்க ஒரு சதுர மீட்டர் இடம் கூட இல்லை. கோயில் திடலுக்கு வந்து இறங்கியது முதல் மீண்டும் புறப்படும் வரை பக்தர்கள் நின்று கொண்டே, நடந்து கொண்டே தான் இருக்க வேண்டும். சாப்பிட நினைத்தால் விழாத்திடலில் உள்ள அசுத்தம் நிறைந்த உணவகங்களில் தான் சாப்பிட வேண்டும். இதனை அதிகாரிகளும் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதில்லை. குடிநீர் விலைக்கு தான் வாங்க வேண்டும். இயற்கை உபாதைகளை கழிப்பது மிகப்பெரிய துன்பகரமான விஷயமாக மாறி வி்ட்டது.

கோயில் திருவிழா வருவாயினை பெருக்குவதற்காக, பக்தர்கள் நலன் முழுவதையும் அடமானம் வைத்து விட்டனர். தற்போதைய சூழலில் இந்த இடம் முழுக்க வணிக நிறுவனங்களும், பொருட்காட்சி திடல்களும் தான் உள்ளன. அதுவும் இங்கு விதிக்கப்படும் கட்டணங்களை கேட்டால் மலைத்து விடுவீர்கள். பக்தர்கள் கூட்டத்தை வைத்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் உதவியுடன் பலர் அதீத கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர் என்பது வெளிப்படையாகவே தெரியும்.

இதில் பாவம் செய்தவர்கள் காவல்துறையினரும், தீயணைப்பு படையினர் மட்டுமே. இவர்களின் பணி மிகவும் பாராட்டக்கூடியது. போற்றத்தக்கது. சிறப்பானது. இவர்களின் அயராத பணி மட்டுமே இப்போதைய நிலையில் மக்களுக்கு ஆறுதலான விஷயம்.

மற்றபடி எல்லாம் பணம்! பணம்! பணம் தான். இப்படி பக்தர்களுக்கு துன்பத்தையும், துயரத்தையும் ஏற்படுத்தி சம்பாதிக்கும் வல்லூறுகளை கவுமாரியம்மன் தான் அழித்தொழிக்க வேண்டும் என சாபம் விடாத பக்தர்கள் யாருமில்லை. அந்த அளவு பணத்திற்காக அத்தனை விதிமீறல்களையும், பாவங்களையும் கோயில் வளாகத்திலேயே செய்கின்றனர்.

இவர்களை கண்டிக்கும் சக்தி மக்களுக்கும் இல்லை. பக்தர்களுக்கும் இல்லை. எனவே அம்மன் தான் இந்த பணப்பேய்களை அழித்தொழிக்க வேண்டும் என பக்தர்கள் கூறுகின்றனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது