வனவிலங்குகளை பாதுகாக்க வேகத்தடைகள் அமைக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

வனவிலங்குகளை பாதுகாக்க வேகத்தடைகள்  அமைக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை
X
நீலகிரி மாவட்டத்தை போல் தேனி மாவட்டத்திலும் வனவிலங்குககள் அதிகமாக இருக்கும் இடங்களில் அமைக்கப்பட்ட ரோடுகளில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தை போல் தேனி மாவட்டத்திலும் வனவிலங்குககள் அதிகமாக இருக்கும் இடங்களில் அமைக்கப்பட்ட ரோடுகளில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.இது குறித்து முல்லை பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத்தினர் கூறியதாவது:-

மேட்டுப்பாளையம், குன்னூர் உதகை, வழியாக கூடலூர் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 181 ல் உள்ள குறுகலான இடங்களில், சாலை விரிவாக்கப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலை என்பதால் வேகத்தடைகளும் அமைக்க முடியாத நிலையில், விரிவாக்கப் பணிகள் வேகமெடுத்திருக்கிறது.

இந்தச் சாலையில் வரும் பர்லியாறு முதல் குன்னூர் ரன்னிமேடு வரை நீர்நிலைகளும் புல்வெளிகளும் அதிகமாக இருக்கிறது. இதற்கிடைப்பட்ட கெத்தை முதல் கல்லாறு வழித்தடத்தில், பல்லாண்டுகளாக யானைகள் வலசை செல்வது வாடிக்கையான ஒன்று.

இந்த வழித்தடத்தில் தான் வறட்சி காலங்களிலும், பலாப்பழ சீசனிலும் யானைகள் அதிகமாக வலசை செல்வது நடக்கும். இந்த நிலையில் சாலை விரிவாக்கப் பணிகள் வேகமெடுத்திற்கும் நிலையில், யானைகள் வழித்தடத்தில் இடையூறு ஏற்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

வழக்கை கையில் எடுத்துக்கொண்ட மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதியரசர்கள், தாங்களாகவே நீலகிரி மாவட்டத்திற்கு சென்று, சாலை விரிவாக்கத்தை கண்ணுற்று, யானைகள் இடம்பெயரும் தடத்தில் எவ்வித இடைஞ்சலும் இருக்கக் கூடாது என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி வந்தனர்.

அந்த அடிப்படையில் யானைகள் வலசை செல்லும் 9 இடங்கள் கண்டறியப்பட்டு, 16 வேகத்தடைகளை அமைத்திருக்கிறது நெடுஞ்சாலைத்துறை.

ஆனால் தேனி மாவட்டத்தில் உள்ள லோயர் கேம்ப் முதல் குமுளி வரையிலான மலைச்சாலையில், இரவு நேரங்களில் மிளாக்களின் (மான்கள்) நடமாட்டத்தை பலமுறை நாங்களே( விவசாயிகளே) பார்த்திருக்கிறோம். ஆறு கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த சாலையிலும் நீலகிரி மாவட்ட நெடுஞ்சாலை துறையின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப வேகத்தடைகள் அமைக்கப்பட வேண்டும்.

அதுபோல தென்பழனி சோதனைச்சாவடி முதல் மகாராஜா மெட்டு வரையிலான சாலை, புதிதாக போடப்படுவதோடு விரிவாக்கமும் நடந்து வருகிறது. வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த இந்த சாலையிலும் எங்கும் வேகத்தடை இதுவரை அமைக்கப்படவில்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காலை 7 மணிக்கு சிலுவை கோயிலுக்கு கீழே ஒரு சிறுத்தை வேகமாக வந்த காரில் அடிபட்டு இறந்தது. காலையிலேயே இதுதான் நிலைமை என்றால் இரவு நேரங்களில் சொல்ல வேண்டியதில்லை.

மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை, மேகமலை செல்லும் தென்பழனி சோதனைச்சாவடி பூட்டப்பட்டாலும், வனப்பகுதிக்குள் இருக்கும் தேயிலைத் தோட்ட வண்டிகளும், சொகுசு விடுதிகள் என்ற பெயரில் கட்டப்பட்டிருக்கும் இரவு நேர பார்களுக்கு, அரை போதையில் செல்லும் வண்டிகளும், செல்வாக்கு மிக்க அரசியல் வாதிகளின் வண்டிகளும் இரவு நேரங்களிலும் சென்றுதான் வருகிறது.

இது போக தனியார் பேருந்து ஒன்றும், அரசு பேருந்து ஒன்றும் நள்ளிரவு நேரங்களில் இரவங்கலாறு மற்றும் மகாராஜா மெட்டுக்கும் சென்று வருகிறது.

வனப்பகுதிகளில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறா வண்ணம், தேனி மாவட்ட நெடுஞ்சாலை துறையும், வனத் துறையும், வருவாய்த் துறையும் இணைந்து, போர்க்கால அடிப்படையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் உடனடியாக வேகத்தடை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil