தேனி மாவட்டத்தில் பக்தர்களுக்கு மீண்டும் சிறப்பு வசதிகள்

தேனி மாவட்டத்தில் பக்தர்களுக்கு மீண்டும் சிறப்பு வசதிகள்
X

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் சபரிமலை பக்தர்களுக்காக மீண்டும் சிறப்பு வசதிகள் தொடங்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் சீசன் முழுமையாக தொடங்கி உள்ள நிலையில், தேனி மாவட்டத்தின் வழியாக சபரிமலை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் சபரிமலை நோக்கி செல்கின்றன. இந்த வாகனங்கள் வட மாநிலங்கள் மற்றும் வட மாவட்டங்களில் இருந்து வருகின்றன.

சபரிமலைக்கு வரும் மொத்த பக்தர்களில் மூன்றில் ஒரு பங்கு பக்தர்கள் தேனி மாவட்டத்தை கடந்தே செல்கின்றனர். தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களும், வடமாநிலத்தவரும் தேனி மாவட்டம் வழியாக செல்வதே சிறந்த சாலைவழிப் பயணமாக உள்ளது. இப்போது சீசன் மும்முரமாக உள்ளதால் பக்தர்களின் வாகனங்கள் கணக்கில் இல்லாமல் வருகின்றன.

இவர்கள் நீண்ட துாரம் பயணித்து வருவதாலும், இடைவிடாமல் பயணிப்பதாலும் களைப்பாகி விடுகின்றனர். குறிப்பாக டிரைவர்கள் துாங்கி விடுகின்றனர். இதனால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. கடந்த வாரத்தில் மட்டும் பல விபத்துக்கள் ஏற்பட்டன. கடந்த வாரம் குமுளி மலைப்பாதையில் வேன் உருண்டதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பாக இன்ஸ்டா நியூஸ் செய்தி தளத்தில் விரிவான செய்தி வெளியாகி இருந்தது. பக்தர்களுக்கு முந்தைய காலங்களில் செய்து கொடுத்ததை போல் இந்த ஆண்டுகள் வசதிகள் வழங்கப்பட வேண்டும் என செய்தியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அந்த செய்தியில் கடந்த காலங்களில் சபரிமலை பக்தர்களுக்கு இரவில் துாக்காமல் தடுக்க போலீஸ் நிர்வாகம் ஆங்காங்கே முகாம்கள் அமைத்து சுக்குகாபி வழங்கியது. தனியார் பலர் ஓய்வெடுக்கும் வசதிகளையும், உணவு வசதிகளையும் செய்து கொடுத்திருந்தனர். இதனை செய்தியில் சுட்டிக்காட்டியதால் மீ்ண்டும் போலீஸ் நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே சுக்குகாபி பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. நடந்து வரும் பக்தர்களுக்கு இரவில் விபத்து ஏற்படாமல் தடுக்க இரவில் ஒளிரும் ஸ்டிக்குகள் வழங்கப்பட்டு வருகின்றன. முக்கிய சாலை சந்திப்புக்களில் மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

முன்பு போன்றே பக்தர்கள் குளிக்கவும், தங்கவும் ஓய்வெடுக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில், தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், கம்பம் வேலப்பர் கோயில்களில் பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்க வசதிகள் உள்ளன.அதேபோல் இலவச அன்னதானமும் பல இடங்களில் வழங்கப்படுகிறது. அதேபோல் கும்பக்கரை அருவி, சுருளி அருவிகளில் பக்தர்கள் குளிக்கவும், அங்குள்ள கோயில்களில் வழிபாடுகள் நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் மகரஜோதி நிறைவடைந்து பக்தர்கள் ஊர் திரும்பும் வரை தொடரும் என போலீஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதேபோல் பக்தர்கள் குறைந்த வேகத்தில் பயணிக்குமாறு அறிவுறுத்த ஆங்காங்கே போலீசார் நிறுத்தப்பட்டுள்ளன. இவர்கள் பக்தர்களின் வாகனங்களை மறித்து மிதமான வேகத்தில் பயணிக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர். விபத்தை தடுக்க போலீஸ் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் எவ்வளவு வசதிகளை செய்திருந்தாலும் பக்தர்கள் கவனமுடன் பயணித்தால் மட்டுமே விபத்துக்களை குறைக்க முடியும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!