SDPI தோழமைகளே நீங்களுமா..? தமிழக விவசாயிகள் வேதனை..!
பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக் பாலசிங்கம்.
பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக் பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: முல்லைப் பெரியாறு அணையை செயலிழக்க செய்யக்கோரி SDPI எர்ணாகுளம் மாவட்டக் குழு 'ரெட் அலர்ட்' பேரணி நடந்தப்போவதாக அறிவித்திருப்பது மிகப்பெரிய வருத்தத்தை நமக்கு ஏற்படுத்தியிருக்கிறது.
இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னைக்கு நீங்கள் இத்தனை பெரிய பேரணியை நடந்துவீர்கள் என்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை. பேரிடர்களில் ஆகப்பெரிய பங்களிப்புகளின் கதாநாயகர்களான நீங்கள், முல்லைப் பெரியாறு அணையால் கேரளாவிற்கு எவ்வித ஆபத்தும் இல்லாத நிலையில், நான்கு மலையாள சுயநலவாதிகளோடு சேர்ந்து நீங்கள் முன்னெடுத்திருக்கும் இந்த நடவடிக்கை,தமிழகத்தில் வாழும் ஐந்து மாவட்ட மக்களுக்கு எதிரானது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
பாதர் ஜோ நிரப்பல், பாதர் ஜெபாஸ்டியன், டீன் குரியா கோஸ், அட்வகேட் ஜோயிஸ் ஜார்ஜ் உள்ளிட்டோர் வரிசையில் உங்களையும் பொருத்திப் பார்க்க மனம் ஏற்கவில்லை. முல்லைப் பெரியாறு அணையை தகுதி இழப்பு செய்யக்கோரி, SDPI எர்ணாகுளம் மாவட்டக் குழு, செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் ரெட் அலர்ட் ஊர்வலம் நடத்தும் என SDPI முல்லைப் பெரியாறு சமர சமிதி தலைவர் அலோசியஸ் கொல்லனூர் தெரிவித்துள்ள செய்தி மனதிற்கு இதமானது அல்ல.
இந்த நடை பயணம் தொடர்பாக பேசிய கொல்லனூர், 50 ஆண்டுகள் மட்டுமே ஆயுட்காலம் கொண்ட அணையை 130 ஆண்டுகளாக எந்தவித பாதுகாப்பு முன்னெச்சரிக்கையின்றி இயக்க அனுமதிப்பது, கேரளாவில் ஐந்து மாவட்டங்களில் உள்ள மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது எனவும். அணையை செயலிழக்கச் செய்வதே பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு என்று தெரிந்திருந்தும் அரசாங்கம் மெதுவாக நகர்வதாக குற்றஞ்சாட்டி இருக்கிறார்.
செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 3 வரை முல்லைப் பெரியாறு அணையை செயலிழக்கச்செய்யக் கோரி SDPI பிரசாரமும், செப்டம்பர் 18 முதல் ரெட் அலர்ட் அணிவகுப்பும் நடத்தும் எனவும். முல்லைப் பெரியாறு உருவான சப்பாத்தில் தொடங்கும் பேரணி, பல்வேறு தொகுதிகளில் சுற்றுகிறது என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அக்டோபர் 3 ஆம் தேதி எர்ணாகுளம் ஆட்சியர் அலுவலகம் முன் நிறைவு இந்த நீண்ட நடை பயணம் நிறைவு பெறுவதாகவும் அறிவித்திருக்கிறார்.
நடைபயணத்தின் ஒரு பகுதியாக கருத்தரங்குகள், மாநாடுகள், கையெழுத்து சேகரிப்பு, வீடு வீடாகச் சென்று பிரசாரம், தெரு நாடகம், மக்கள் பிரதிநிதிகளுக்கு நினைவேந்தல் சமர்ப்பித்தல், பேரிடர்களால் பாதிக்கப்பட்டோர் ஒன்றுகூடல், ஆயத்தப் பயிற்சி ஆகியனவும் நடைபெறும் எனவும் அவர் கூறியிருப்பது மிகப்பெரிய சங்கடத்தை எங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாடு எஸ்.டி,பி.ஐ., இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறது. எஸ்டிபிஐ கட்சியின் தேனி மாவட்ட கமிட்டி தோழமைகளுடன் இதற்கான பதிலை எதிர்பார்க்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu