பாம்புகள் படையெடுப்பால் அலறும் மக்கள்: போன்களால் திணறும் தீயணைப்புத்துறை
கோப்புப்படம்
தேனியில் தற்போது மழைக்காலம் தீவிரம் அடைந்துள்ளது. காற்றில் ஈரப்பதம் அதிகம் இருந்தாலும் பகலில் வெயில் சில நாட்களாக சுட்டெரிக்கிறது. தேனி நகராட்சியில் சிவராம்நகர், வள்ளிநகர், காந்திநகர், குறிஞ்சிநகர், விஸ்வநாததாஸ் காலனி, கொட்டகுடி ஆற்றுப்படுகை குடியிருப்பு, ஸ்ரீராம்நகர், வீரப்பஅய்யனார் கோயில் செல்லும் ரோடு குடியிருப்பு பகுதிகள் மலைஅடிவாரங்களிலும், தோட்டங்களின் ஓரங்களிலும் அமைந்துள்ளன.
இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு தினமும் பாம்புகள் புகுந்து விடுகிறது. தினமும் குறைந்தது 5 முதல் 10 அழைப்புகள் தேனி தீயணைப்புத்துறைக்கு வருகின்றன. தீயணைப்புத்துறையினர் சென்றால் பாம்பு, இங்கே சென்று மறைந்து கொண்டது. அங்கு சென்று விட்டது என கண்ணாமூச்சி காட்டுகின்றனர். ஒருசில இடங்களில் மட்டும் பாம்புகள் பிடிபடுகின்றன. இவற்றை பாதுகாப்பாக வனப்பகுதிகளில் கொண்டுபோய் விடுகின்றனர்.
தீயணைப்புத்துறையினர் கூறுகையில், ‛வீட்டிற்குள் பாம்பு புகுந்து விட்டது என தினமும் 10 அழைப்புகளாவது வருகின்றன. பாம்புகள் வசிக்கும் பகுதியில் வீட்டைக்கட்டிக்கொண்டு, அவைகள் வீட்டிற்குள் வந்து விட்டன என்று கூறுவதே தவறு. இருப்பினும் உயிர்ப்பலி ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக நாங்களும் சென்று பாம்புகளை சில இடங்களில் பிடித்து விடுகிறோம். பல இடங்களில் தப்பி விடுகின்றன’.
தற்போது தேனியில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றமே பாம்புகள் அதிகம் தனது வசிப்பிடத்தை விட்டு வெளியேற காரணம் என உயிரின ஆய்வாளர்கள் எங்களிடம் தெரிவித்தனர்’ என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu