'ஐயா நீங்க கட்டுனதும் அப்படித்தாங்க இருக்கு' ; முதல்வருக்கு அ.தி.மு.க.,வினர் சரமாரி கேள்வி

தேனி புதிய பஸ்ஸ்டாண்ட். ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த போது கட்டப்பட்டு, ஜெ., ஆட்சியில் திறந்து வைக்கப்பட்டது.
துணை முதல்வர் ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சர் பொறுப்பையும் கவனித்த போது கட்டப்பட்ட தேனி புதிய பஸ்ஸ்டாண்ட் மிகவும் மோசமான நிலையில் வலுவிழந்து உள்ளது. இதன் கட்டுமான பணிகளிலும் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்க வேண்டும் அ.தி.மு.க.,வினர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.
சென்னை புளியங்குளத்தில் அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் பெயர்ந்து விழுவதால் அங்கு குடியேறிய மக்கள் பயந்து வெளியேறி விட்டனர். அதனை ஆய்வு செய்த தி.மு.க., அரசு நியமித்த அதிகாரிகள், கட்டுமான பணிகளில் தரக்குறைபாடு உள்ளதை கண்டறிந்து இருவரை சஸ்பெண்ட் செய்துள்ளனர். இதில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சட்டசபையிலேயே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஒட்டுமொத்த தமிழக மக்களும் வரவேற்று உள்ளனர். இனிமேலாவது கட்டுமான பணிகளில் தரம் இருக்க வேண்டும் என அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில் தேனி புதிய பஸ்ஸ்டாண்ட் கட்டடத்தின் மேல்தளத்தில் தேங்கும் நீர் கசிந்து ஒழுகுவது, சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுவது, கட்டடம் சேதமடைந்துள்ளது என தரக்குறைபாடான அத்தனை அறிகுறிகளையும் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டடம் வெளிப்படுத்தி வருகிறது. இது குறித்து தேனி மாவட்ட அ.தி.மு.க.,வினர் கடும் புகார் எழுப்பி வருகின்றனர்.
இந்த புதிய பஸ்ஸ்டாண்ட் கட்ட தேவையான அத்தனை நடவடிக்கைகளும் முதல்வர் ஸ்டாலின் முன்பு துணை முதல்வராகவும், உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் இருந்த போது எடுக்கப்பட்டது. கட்டுமான பணிகளும் தொண்ணுாறு சதவீதத்திற்கு மேல் தி.மு.க., ஆட்சி காலத்தில் நிறைவடைந்து விட்டது. அ.தி.மு.க., ஆட்சி வந்ததும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
அ.தி.மு.க., ஆட்சியில் நடைபெற்ற கட்டுமானங்களின் முறைகேடுகளை விசாரியுங்கள். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள். அதேபோல் உங்கள் ஆட்சியிலும் நடந்த தவறுகள் மீதும் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனி மாவட்ட அ.தி.மு.க.,வினர் வலியுறுத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu