துல்லியமான சிலம்பக் கலை கற்றுத்தரும் மாஸ்டர் குருசாமி..!

துல்லியமான சிலம்பக் கலை கற்றுத்தரும் மாஸ்டர் குருசாமி..!
X

சிலம்பாட்ட பயிற்சி வழங்கும் மாஸ்டர் குருசாமி.

சிலம்ப கலையினை துல்லியமாக படித்து, தற்கால தலைமுறைக்கு கற்றுத்தந்து வருகிறார் கூடலுார் மாஸ்டர் குருசாமி.

தேனி மாவட்டம், கூடலுாரை சேர்ந்தவர் முத்தையா தேவர். நம்பவே முடியாத உண்மை, இவர் ஒரு நெருக்கடியான சூழலில் 1956ம் ஆண்டு சிலம்பத்தில் ஒரே நேரத்தில் 200 பேரை வீழ்த்தியவர். மிக, மிக திறமையான சிலம்பாட்ட வீரர். இவர் 2021ம் ஆண்டு தனது 90வது வயதில் இறந்தார். (அடுத்து நீங்கள் வாசிக்கப்போகும் வார்த்தைகள் ஒரு விளம்பரத்திற்காக சேர்க்கப்பட்ட வார்த்தைகள் இல்லை. உண்மையாக வாழ்ந்த ஒரு மனிதனின் வரலாற்றை பற்றி அப்படியே வடிக்கும் வார்த்தைகள்.) இப்படிப்பட்ட மனிதர்களும் இந்த பூமியில் வாழ்ந்திருக்கிறார்கள்.

முத்தையா தேவரின் உயரமான, ஆஜானுபாகுவான தோற்றமும், கம்பீரமான வெள்ளை மீசையும், வெள்ளை பைஜாமா சட்டையும், வேஷ்டியும் கட்டி இவர் நடந்து வரும் போதே சிங்கம் நடப்பது போன்ற தோற்றம் இருக்கும். சினிமாவில் நாம் பார்க்கும் இந்த காட்சியை கூடலுார் மக்கள் நேரில் பல ஆயிரம் முறை முத்தையாதேவரின் உருவில் பார்த்துள்ளனர்.

சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தன்னுயிரை கூட துறக்க தயாராக இருக்கும் நேர்மையும், இவ்வளவு கம்பீரம், துணிச்சல், திறமைகளை வைத்துக் கொண்டு நேர்மை தவறாமல், பாகுபாடு இல்லாமல் அத்தனை பேரிடமும் அன்பு காட்டும் முத்தையா தேவரின் குழந்தை உள்ளமும் கூடலுார் மக்களுக்கு மிகவும் பரிச்சயமானவை.


இவரது உடலில் வேட்டி, சட்டையை போன்றே கையில் எப்போதும் கம்பு இருக்கும். அந்த அளவு இவருக்கு சிலம்பாட்டம் என்றால் உயிர். மிகச்சிறந்த ஈடு இணை சொல்ல முடியாத ஒரு சிலம்பாட்ட வீரர். இவருக்கு சிலம்பம் சொல்லிக்கொடுத்தது, இவரது ஆசான் மொக்கவர்ணத்தேவர். மொக்கவர்ணத்தேவரின் சிலம்ப ஆசான் அழகர். இப்படி கூடலுார் மண்ணுக்கே உரிய ஒரு பெருமையாக இந்த சிலம்பாட்டம் இன்னும் உயிர்ப்போடும், புத்துணர்வோடும் இருக்கிறது. இன்று கூடலுார், கம்பத்தில் பலநுாறு சிலம்ப வீரர்கள் இருக்கிறார்கள். இதற்கு காரணம், முத்தையா தேவரின் மாணவன் த.குருசாமி என்ற திருமால்(42).

இரண்டு வகை

இவ்வளவு பெருமைக்குரிய முத்தையா தேவரிடம் தொடர்ச்சியாக 23 ஆண்டு முறைப்படி சிலம்பம் கற்றவர் குருசாமி. சிலம்பத்தில் அலங்காரம், போர்ச்சிலம்பம் என்ற இரண்டு நுட்ப கலைகள் உள்ளன. அலங்காரம் என்பது மற்றவர்கள் முன்பு விளையாடி காட்டுவது. போர்சிலம்பம் என்பது முழுமையான போர். இதில் தாக்குதல் முறை, தற்காப்பு முறை இரண்டும் உண்டு. தாக்குதல் சிலம்பத்தில் வர்ம அடிமுறைகளும் உண்டு.

வர்மத்தை தாண்டிய நிலை மருத்துவம். மருத்துவத்தை தாண்டியது சிலம்பவாசி என்ற அடிமுறையும் உண்டு. வாசியோகம் தான் சிலம்பத்தின் முழுமையான யோகநிலை. இப்படி அத்தனை வகையான சிலம்ப கலைகளையும் முழுமையாக கற்றுத் தேர்ந்தவர் த.குருசாமி. தான் கற்ற அத்தனை வித்தைகளையும் கற்றுத்தந்த முத்தையாதேவர், தனது சிஷ்யன் குருசாமிக்கு பல கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளார்.

சிலம்ப கலையை எப்போது, எப்படி பயன்படுத்த வேண்டும் என்று ஒரு ஜாதகமே இவருக்கு எழுதிக் கொடுத்து சத்தியமும் வாங்கி உள்ளார். அதன்படியே குருசாமி தனது குருவிற்கு கொடுத்த சத்தியத்தை மீறாமல், ‘இரட்டை வாள்’ என்ற சிலம்ப பயிற்சி பள்ளி தொடங்கி, தான் கற்ற கலையை மாணவ, மாணவிகளுக்கு கற்றுத்தந்து வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர், குருசாமி ஒரு பெரும் நெருக்கடியில் சிக்கினார். கிட்டத்தட்ட இவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் கடும் நெருக்கடி. அந்த நிலையில் குருசாமி நினைத்திருந்தால், தன்னை சூழ்ந்த அத்தனை பேரையும் நொடிப்பொழுதில் வீழ்த்தி விட்டு, தேவைப்பட்டால், தன் குரு இருக்கும் இடத்திற்கு தன் எதிரிகளை அனுப்பி விட்டு தான் தப்பித்திருக்க முடியும். ஆனாலும் அந்த நெருக்கடியிலும், தன் உயிரே போனாலும் பரவாயில்லை.

தனது குருவிற்கு கொடுத்த சத்திய வாக்கினை மீறாமல் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டார். அந்த கட்டுப்பாட்டை உணர்ந்ததாலோ என்னவோ, குருநாதர் முத்தையா தேவர் தான் போலீஸ் உருவில் வந்து இவரை காப்பாற்றினார். இப்படி சத்தியம், தர்மம் மீறாத ஒரு சிலம்பாட்ட வீரர் குருசாமி. இவரது சிலம்பக் கலையை அறிந்த கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் கூட பலரும் இவரிடம் வந்து சிலம்பம் கற்கின்றனர். தங்கள் இடத்திற்கு இவரை அழைத்துச் சென்று சிலம்ப நுட்பங்களை கற்றுக் கொள்கின்றனர்.

அதாவது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த சிறப்பான சிலம்ப வீரர்கள் கூட இவரிடம் வந்து நுட்பங்களை கற்றுச் செல்கின்றனர். இப்படி கை தேர்ந்த சிலம்ப வீரரான குருசாமி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சிலம்பத்தில் பட்டயப்படிப்பும் முடித்துள்ளார். தமிழக அரசு இவரது சிலம்ப சேவையினை பாராட்டி, கலை பண்பாட்டுத்துறை சார்பில், சிறந்த சிலம்ப வீரர் சான்றும், அடையாள அட்டையும் வழங்கி உள்ளது.

இப்போது தனது இரட்டை வாள் சிலம்ப பயிற்சி பள்ளி மூலம் கூடலுார், கம்பத்தில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிகள் வழங்கி வருகிறார். சில பள்ளிகளும் இவரை சிறப்பு பயிற்சிக்காக அழைப்பு விடுத்துள்ளன. பள்ளிகளுக்கும் சென்று சிலம்ப பயிற்சி வழங்கி வருகிறார். இதுவரை குருசாமியிடம் பல ஆயிரம் மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்றுள்ளனர்.

இவரது மாணவர்கள் இரட்டை வாள் சிலம்ப பள்ளி மாணவர்கள் ஆண்டுதோறும் தமிழக அளவிலான சிலம்பாட்ட போட்டிகளில் வெற்றிகளை குவித்து வருகின்றனர். இந்த ஆண்டு கோவாவில் நடந்த சர்வதேச சிலம்ப போட்டியில் இவரது மாணவர் ம.யோகேஷ் கலந்து கொண்டு ஒற்றைக்கம்பு சிலம்ப போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார்.

திருச்சியில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் இரண்டு சுருள்வாள் போட்டியில் முதலிடம் பெற்றார். இதற்காக சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த விழாவில். அமைச்சர்கள் அன்பில்மகேஷ், சேகர்பாபு, சுப்பிரமணியம், எம்.பி., தயாநிதிமாறன், சென்னை மேயர் பிரியா, ஆகியோர் மாணவன் யோகேஷை பாராட்டினர்.

இந்த விழா மேடையில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி மாணவன் யோகேஷூக்கு பாராட்டு சான்றிதழ், பரிசு வழங்கி கௌரவித்துள்ளார். இப்படி சிலம்பக்கலையினை அழியாமல் பாதுகாக்க தற்போதைய தலைமுறைக்கு அத்தனை நுட்பங்களையும் கற்றுத்தரும் மாஸ்டர் குருசாமியின் சேவை மென்மேலும் வளர நாமும் வாழ்த்துவோம்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!