போலீஸ் இன்ஸ்பெக்டர் கட்டிய சிவன் கோயில்
ஆண்டிபட்டி அருகே குமணன்தொழு கிராமத்தில் மலையடிவாரத்தில் கட்டப்பட்டுள்ள சித்தப்பாறை லிங்கேஸ்வரர்.
டெல்லி சென்ட்ரல் ரிசர்வ் போலீசில் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் ஜெயராம். இவரது மனைவி லட்சுமியம்மாள். இவர் குமணன்தொழுவில் வசித்து வருகிறார். இங்குள்ள சிவலிங்கப்பாறையில் லட்சுமியம்மாள் அடிக்கடி சென்று பூஜை செய்து வழிபாடு நடத்தி வந்தார். இந்நிலையில் லட்சுமியம்மாளின் கனவில் சிவலிங்கப்பாறை மட்டும் வந்துள்ளது. அடிக்கடி கனவில் சிவலிங்கப்பாறை வந்ததும், லட்சுமியம்மாள் பாறை முன்பு அமர்ந்து தியானம் செய்துள்ளார். அப்போது அவருக்கு புதிய ஞானம் கிடைத்துள்ளது. அதாவது தன் எதிரில் நிற்பவர்களின் எதிர்காலம் குறித்த விஷயங்களும் அவரது ஞானத்திற்கு வந்துள்ளது. லட்சுமியம்மாள் இது குறித்து டெல்லியில் உள்ள தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். இன்ஸ்பெக்டர் ஜெயராமும் தன் மனைவியின் கோரிக்கையினை ஏற்று சிவலிங்கப்பாறையில் கோயில் கட்டியுள்ளார். தற்போது கணவனும், மனைவியும் சிவதொண்டு ஆற்ற தொடங்கி உள்ளனர்.
இவர்களிடம் இருந்த உண்மைத்தன்மையை அறிந்த தெய்வேந்திரன் என்பவர் கோயில் கட்ட தனக்கு சொந்தமான 25 சென்ட் நிலத்தையும், சுரேஷ் என்பவர் தியானமண்டபம் கட்ட 3 சென்ட் நிலத்தையும் தானமாக வழங்கி உள்ளனர். இப்போது இங்கு கோயில் எழும்பி கும்பாபிஷேகம் நடந்து முடிந்துள்ளது. இந்து எழுச்சி முன்னணி நிறுவன தலைவர் பொன்.ரவிஜீ, மாவட்ட தலைவர் ராமராஜ்ஜீ, மாவட்ட செயலாளர் ராமமூர்த்திஜீ, உட்பட பலர் இந்த கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினர். இன்ஸ்பெக்டர் ஜெயராம், இவரது துணைவியார் லட்சுமியம்மாள், சிவசிவவெள்ளியங்கிரி அடிகளார் இந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகளை வரவேற்று கோயிலில் சிறப்புபூஜை நடத்தி, அந்த இடத்தின் புனித தன்மை பற்றி எடுத்துக் கூறினர். சிவனே இங்கு பாறை வடிவில் இருப்பதாகவும், இந்த பாறையை லிங்கமாக கருதி கோயில் கட்டி உள்ளதாகவும் தெரிவித்தனர். தற்போது கூடுதலாக மக்கள் கோயிலுக்கு வழிபட சென்று வர தொடங்கி உள்ளனர். இந்த தலம் பற்றி கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள 8929750966 என்ற நம்பரில் தொடர்பு கொள்ளலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu