அண்ணாமலையை வீழ்த்த ரகசிய திட்டம்: திமுக.,வுடன் கைகோர்த்த பா.ஜ., புள்ளிகள்
பைல் படம்.
BJP News Tamilnadu -இதுகுறித்த விவரம் வருமாறு: தமிழக பா.ஜ.,வை பொறுத்தவரை, பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர், கட்சியில் செல்வாக்கு பெறுவதற்கு முன் இருந்த நிலை வேறு; தற்போது இருக்கும் நிலை வேறு. பிரதமர் மோடியின் தீவிர விசுவாசியும், கர்நாடகா எஸ்.பி., பதவியை ராஜினாமா செய்து விட்டு, பா.ஜ.,வில் இணைந்த முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியுமான அண்ணாமலை, தமிழக பா.ஜ., தலைவராக மோடியின் விருப்பத்தில் நியமிக்கப்பட்டார்.
'தமிழகத்தில், பா.ஜ.,வை வேகமாக வளர்க்க வேண்டும். அதற்காக, கட்சியில் யாரையும், எந்த பொறுப்பிலும் நியமிக்கலாம். கூட்டணி கட்சி அல்லது ஆளும்கட்சி என யாராக இருந்தாலும், அவர்கள் செய்யும் தவறுகளை தைரியமாக விமர்சிக்கலாம். பா.ஜ.,வுக்கு மக்கள் நலன் தான் முக்கியம் என்பதை ஒவ்வொரு தமிழரும் உணர வேண்டும்' என்பது தான் அண்ணாமலைக்கு கொடுக்கப்பட்ட, 'அசைன்மென்ட்'.
அண்ணாமலைக்கு இந்த பணியை கொடுத்தது, கட்சி தலைவர் ஜெ.பி.நட்டாவாக இருந்தாலும், அதன் பின்னணியில் இருந்தது மோடி, அமித் ஷா தான். கொள்கை ரீதியில் எதிரான கட்சி என்பதுடன், தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருப்பதும் தி.மு.க., தான் என்பதால், அண்ணாமலை அக்கட்சிக்கு எதிராக, பா.ஜ.,வை வேகமாக களம் இறக்கினார்.
அண்ணாமலையும் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்கிறார். தி.மு.க., அமைச்சர்கள் மற்றும் அக்கட்சியினர் செய்யும் தவறுகளை, தினமும் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி வருகிறார். இதனால், தி.மு.க., கட்சிக்கும், ஆட்சிக்கும் தலைவலி ஏற்பட்டது. எப்படியாவது, அண்ணாமலையை முடக்கி போட வேண்டும் என திட்டம் தீட்டினர். அண்ணாமலையை அரசியலில் அசிங்கப்படுத்தவும், பதவியை பறிக்கவும், பல விதங்களில் தொடர்ந்து முயற்சிக்கப்படுகிறது.
மதுரை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த நிதி அமைச்சர் தியாகராஜன் கார் மீது, பா.ஜ.,வினர் செருப்பு வீசினர். ஆனால், சம்பவம் நடந்த இடத்தில் அண்ணாமலை இல்லாததால், அவருக்கு போலீஸ் வாயிலாக நெருக்கடி கொடுக்க முடியவில்லை. எனினும், இரு தரப்பினர் இடையே கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன், அவர் நடத்தும் நிறுவனங்கள், உதயநிதி, அமைச்சர்கள் மற்றும் தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள், அதன் வாயிலாக நடக்கும் ஊழல்கள் என அனைத்தையும், அண்ணாமலை வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறார். இதனாலும், ஆளும் கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பா.ஜ.,வுக்குள் இருக்கும் அண்ணாமலை எதிர்ப்பாளர்களும், அண்ணாமலையால் பாதிக்கப்படும் தி.மு.க., உள்ளிட்ட பிற கட்சியினரும் கைகோர்த்து செயல்பட துவங்கி உள்ளனர். தமிழக பா.ஜ., தலைவர் பொறுப்பில் இருந்து, அண்ணாமலையை எப்படியாவது அப்புறப்படுத்த வேண்டும் என்பதே, அவர்களின் நோக்கமாக உள்ளது. அதற்காக, பல லட்சம் ரூபாயை கணக்கில்லாமல் செலவு செய்து வருகின்றனர்.
சென்னை நகர் முழுதும் அண்ணாமலையை விமர்சித்து, ஒட்டப்பட்ட போஸ்டர்களின் பின்னணி இது தான். அத்துடன், யாரையும் எளிதில் வீழ்த்தும் ஆயுதத்தை அண்ணாமலைக்கு எதிராக, அவர்கள் கையில் எடுக்க இருக்கும் தகவலும் கசிந்துள்ளது.
இதற்காக, பா.ஜ.,வில் ஐந்து பெண்களை தயார் செய்து வைத்துள்ளனர். அவர்கள், அண்ணாமலை மீது திடீரென பாலியல் குற்றச்சாட்டு சுமத்துவர். அது தான் அவர்களின் புது திட்டம். இதற்கு அஞ்சும் நபர் அல்ல அண்ணாமலை. எதையும் எதிர்கொள்ள தயார் நிலையில் தான் அவர் இருக்கிறார். இப்படி எல்லாம் நடக்கும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து தான், தமிழக பா.ஜ., தலைவராக பதவி ஏற்கும்போதே, சில அதிரடி நடவடிக்கைகளில் இறங்கினார்.
தமிழக பா.ஜ,, தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இருக்கும் தன் அறைக்கு, கண்ணாடி கதவை மாட்டினார். அறைக்குள் என்ன நடக்கிறது; அண்ணாமலை யாருடன் பேசுகிறார் என்பதை வெளியில் இருப்பவர்கள் நன்கு பார்க்க முடியும். தி.மு.க.,வினருடன் பா.ஜ.,வினர் கைகோர்த்துள்ள ரகசிய தகவல்கள், பிரதமர் மோடி வரை எடுத்து செல்லப்பட்டுள்ளன. இதையடுத்து, அண்ணாமலையை தொடர்பு கொண்ட பா.ஜ., தேசிய தலைமை, தி.மு.க.,வினரோடு கைகோர்த்துள்ள பா.ஜ.,வினர் யார் யார் என்ற பட்டியலை கேட்டு வாங்கியுள்ளது. மேலும், வழக்கப் போல, ஆளும் கட்சியை விமர்சிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu