காலையில் கொளுத்தும் வெயில்... மாலையில் மயக்கும் ‘குளுகுளு’
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி விட்டது. எப்போதும் குளுமையான சூழல், பசுமைப் பகுதிகளை கொண்ட தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் 11 மணி முதல் 12 மணி வரை அதிகபட்சம் வெயில் 102.2 டிகிரி பாரன்ஹீட் ஆக பதிவாகி வருகிறது. இது இன்னும் சில தினங்களில் 104 டிகிரியை எட்டும் என வானிலை ஆய்வு மைய கணிப்புகள் கூறுகின்றன. எங்கு திரும்பினாலும் மலைகள், நீர் நிலைகள், வயல் வெளிகள், பசுமை தோட்டங்கள் என பசுமை வழிந்தோடும் தேனி மாவட்டத்தில் அதிகமான வெயில் போட்டுத் தாக்குகிறது.இதனால் பகலில் வியர்த்து கொட்டுகிறது.
இளம் வயது, நடுத்தர வயதுக்காரர்கள் தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் உள்ளது. இந்த சூழலில் திடீரென மதியம் இரண்டு மணி அளவில் வெயிலின் தாக்கம் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மாலை 4 மணிக்கு மழைக்காற்று வீச தொடங்குகிறது. மிகவும் இதமான பருவநிலையும், சில்லென்ற காற்றும் வீசுகிறது. சில இடங்களில் லேசான துாரல், சாரல் பதிவாகிறது.
நாள் முழுவதும் வெயில் வாட்டும் என பயந்து கொண்டிருந்த மக்களுக்கு சூரியன் மதியம் ஒரு மணிக்கே தனது உக்கிரத்தை குறைத்து விடைபெறுவது பெரும் ஆறுதலாக உள்ளது. தேனி மாவட்டத்தில் கோடை மழை அதிகளவில் பெய்யும் வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையமும் அறிவிப்புகளை வெளியிட்டு மக்கள் மனதில் பால் வார்த்து வருகிறது. இருப்பினும் கோடையின் தொடக்கமே இப்படி இருந்தால், ஏப்ரல், மே மாதங்களில் வெயில் வறுத்து எடுத்து விடும் என்ற அச்சமும் மக்கள் மத்தியில் உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu