19 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட பள்ளிகள் உற்சாகத்தில் தேனி மாவட்ட மாணவர்கள்

19 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட பள்ளிகள்  உற்சாகத்தில் தேனி மாவட்ட மாணவர்கள்
X

கூடலுார் அரசு பள்ளியில் மாணவிக்கு லட்டு கொடுத்து வரவேற்றார் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ.,மகாராஜன்.

பள்ளிகள் திறக்கப்பட்டதை மாணவ, மாணவிகளும், ஆசிரியர்களும், அதிகாரிகளும், அரசியல்பிரமுகர்களும் உற்சாகமாக கொண்டாடினர்

தேனி மாவட்டத்தில் 940 பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டன. பள்ளி திறப்பை மாணவ, மாணவிகள் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். கலெக்டர் முரளீதரன் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பூங்கொத்து, சுவீட் கொடுத்து வரவேற்றார்.

பள்ளி இன்று திறக்குமா நாளை திறக்குமா என 19 மாதங்களாக ஏங்கிக் கொண்டிருந்த மாணவ, மாணவிகள் இன்று காலை உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு புறப்பட்டனர். மாவட்டம் முழுவதும் எந்த பகுதியிலும் மாணவ, மாணவிகளின் உற்சாகத்திற்கு குறைவில்லை.

அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, மெட்ரிக் பள்ளி, சி.பி.எஸ்.சி., பள்ளி, ஐ.சி.எஸ்.சி., பள்ளி என அத்தனை பள்ளிகளிலும் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஒரே கொண்டாட்டம் தான். பள்ளிகளுக்கு வந்த மாணவ, மாணவிகளை அத்தனை இடங்களிலும் பூங்கொத்து, சுவீட் கொடுத்து வரவேற்றனர்.

பல பள்ளிகளில் ஆசிரியர்களே ஒருங்கிணைந்து அமைத்து இனிப்பு செய்து தயாராக வைத்திருந்தனர். சில பள்ளிகளில் டிரம்செட், மேளதாளம், முகப்பு அலங்காரம் என அமர்க்களப்படுத்தினர். உப்புக்கோட்டையில் அரசு பள்ளிக்கு காலை 8 மணிக்கே சென்ற தேனி கலெக்டர் முரளீதரன், மாணவ, மாணவிகள் அனைவருக்கும் ரோஜா பூ, இனிப்பு கொடுத்து வரவேற்றார்.

ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் காலை 8 மணிக்கே கூடலுார் ராஜாங்கம் நினைவு அரசு கள்ளர் பள்ளியில் இனிப்புகளுடன் காத்திருந்தார். நகர செயலாளர் லோகன்துரை உட்பட கட்சியினர் ஏராளமாக வந்திருந்தனர். மாணவ, மாணவிகள் வர, வர அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி எம்.எல்.ஏ. வரவேற்றார். இதனால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதேபோல் அத்தனை பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு மாஸ்க், சானிடைசர் கொடுத்து அனுப்பியிருந்தனர். பள்ளிகளில் உடல் வெப்ப பரிசோதனை, பல்ஸ் ஆக்ஸிமீட்டர் மூலம் ஆக்ஸிஜன் நுகர்வு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று எந்த பள்ளிகளிலும் பாடம் நடத்தப்படவில்லை. ஒரே கொண்டாட்டம் மட்டும் இருந்தது என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story