'சாவா மூவா பேராடுகள்' - 1000 ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜ சோழனின் அற்புத நலத்திட்டம்

சாவா மூவா பேராடுகள் - 1000 ஆண்டுகளுக்கு முன்பு  ராஜராஜ சோழனின் அற்புத நலத்திட்டம்
X

ராஜராஜ சோழனின் நலத்திட்டத்தை விளக்கும் செப்பேடு.

Rajaraja Cholan -இந்து சனாதன தர்மத்தில், 1000 ஆண்டுகளுக்கு முன்பு, ராஜராஜசோழன் ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நவீன நலத்திட்டம் இந்துக்களின் பொருளாதார அறிவுசார்ந்த ஒரு அற்புத விஷயமாக அறியப்படுகிறது.

Rajaraja Cholan -'சாவா மூவா பேராடுகள்' என்றால், ராஜராஜசோழன் கொண்டுவந்த திட்டம். அன்று இந்துக்களிடம் இருந்த ஆலயநலம், சமூகநலம், அரச வருமானம் என மூன்றையுமே சேர்த்து, முடிவெடுத்த உன்னதமான அறிவும், ஞானமும் கொண்ட ஒரு அற்புதமான திட்டம். அதாவது தஞ்சை கோவிலை கட்டிமுடித்தபின், அதற்கு அனுதினமும் விளக்கு இரவும், பகலும் ஏற்றும் அவசியம் இருந்தது. இடைவிடாமல் அது எரிந்துகொண்டே இருக்கவேண்டும் என்பதுதான் விதி.

இதனை அரசனே செய்யமுடியும் என்றாலும், நாடும் மக்களும் வளமாக வாழ்ந்தால்தானே வரி வரும். அதனால், எல்லா திட்டங்களும் மக்கள் நலம் சார்ந்துதான் முடிவெடுக்கப்படும். காவேரி கொட்டி கொடுத்த காலங்களிலும், நாகை துறைமுகமும் இன்னும் பல துறைமுகங்களும் செல்வத்தை அள்ளி கொடுத்த காலத்திலும், இன்னும் கடல்கடந்த கலங்கள் கொடுத்த வரியிலும் சோழதேசம் செழித்து மின்னியது என்றாலும் அகதிகளாக வருவோர், வறுமையுற்றோர் என, சிலர் இருக்கத்தான் செய்தார்கள். அவர்களையும் வாழவைப்பது மன்னன் கடமை என்பதால், இதுபோன்ற ஒரு சிறப்பு திட்டம் உருவாக்கப்பட்டது.

90 ஆடுகள் அதாவது பெண் ஆடுகளும் ஆண் கடா ஆடுகளும் அடங்கிய மந்தை ஒன்று, குடியானவனுக்கு வழங்கப்படும். அவன் அனுதினமும் ஒரு ஆழாக்கு நெய் கோவில் விளக்குக்கு வழங்க வேண்டும் என்பதுதான், இந்த திட்டத்தில் உள்ள முக்கிய நிபந்தனை.

அக்காலத்தில் மாட்டுநெய் போல ஆட்டுபாலின் நெய்க்கும் பெரும் வரவேற்பு இருந்தது, ஆடுகள் வெறும் மாமிசத்துக்கு மட்டும் வளர்க்கப்படவில்லை. இதனால் வறுமையுற்றோர் அல்லது முதல் இல்லாதவர்கள் அரசிடம் சென்று, 90 அல்லது 94 ஆடுகள் கொண்ட மந்தை அல்லது, 45 மாடுகள் அடங்கிய மந்தையினை பெற்றுகொள்ளலாம்.

இவை கொடுக்கும் குட்டிகள், பால் இதர விஷயமெல்லாம் குடியானவன் அவனுக்கே சொந்தம், அவன் அனுதினமும் ஒரு ஆழாக்கு நெய் கொடுத்தால் போதும். அவன் பண்ணை பெருக பெருக, அவன் நெய்மட்டும் கொடுத்தால் போதும், அதுவும் ஒரு ஆழாக்கு. இப்படி அவன் மந்தை பெருகி விட்ட பின், அரசன் எப்பொழுது கேட்டாலும், அவன் அந்த 96 ஆடுகளையும் அல்லது 45 மாடுகளையும் திரும்ப கொடுக்க வேண்டும், அரசன் கொடுத்த பொழுது, என்ன வயதோ என்ன பருவமோ அதே பருவத்தில் அதே எண்ணிக்கையில் கொடுக்க வேண்டும்.

இதனால் எப்பொழுதும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆடும், மாடும் அரசனிடம் தயாராக இருக்கும், இவை எப்பொழுது கேட்டாலும் அதே பருவத்தில் கிடைப்பதால், அவை சாவுமில்லாத மூப்புமில்லா ஆடுகளாக கருதபட்டது.

இன்று 3 வயது ஆட்டை கொடுத்து, 10 ஆண்டுகள் கழித்து கேட்டாலும் அது 3 வயது ஆடாகவே திரும்ப வரும். இதனால் அவை சாவே இல்லாத மூப்பே இல்லாத ஆட்டுமந்தையாயின, இவை "சாவா மூவா பேராடுகள்" என்றாயின.

"நந்தாவிளக் கொன்றினுக்கு வைத்த சாவாமூவாப்பேராடு தொண்ணூறு" என்பது கல்வெட்டு வரி, இப்படி விளக்கு எரிக்க 'சாவா மூவா பேராடுகள்' வழங்கபட்டன என்பதை சொல்லும் சாட்சியான வரி.

இப்படி "சாவா மூவா பசுக்கள்" எனும் கூட்டமும் உண்டு

இதனால் என்னென்ன நன்மைகள் நடந்தன என்றால், முதலில் ஒரு குடும்பமே பிழைக்க வழி செய்யபட்டது. இரண்டாவது கோவிலில் விளக்கு தடையின்றி எரிந்தது. மூன்றாவது மந்தைகள் பெருகி, அவை கொடுக்கும் வருமானம் அரச வரி, மக்கள் தேவை என எல்லா தரப்புக்கும் பயன்பட்டது. அந்த ஆடுகளும், மாடுகளும் இன்னொருவனுக்கு கொடுக்கும்படி எப்பொழுது சாகாத மூவாத தன்மையுடன் இருந்தன.

இன்று உலகில் எத்தனை பொருளாதார திட்டம் , வட்டி, நிதி என வந்தாலும் இம்மாதிரியான திட்டங்களின் அருகில் கூட வரமுடியாது. இவை இந்துக்கள் எவ்வளவு ஞானமாக நாட்டை ஆண்டார்கள், எல்லா விஷயத்தையும் எப்படி ஞானமாக அணுகி எல்லோரையும் வாழவைத்தார்கள் என்பதற்கு இது மிகச்சிறந்த சான்று

இதுபற்றிய கல்வெட்டு இன்றும் அங்கு உண்டு

"ஸ்வஸ்திஸ்ரீ கோராஜகேசரி பர்மற்கு யாண்டு – -ஆவது நாள் தேவதானந் திருத்துருத்தி மகாதேவர்க்குச் சோழப் பெருமானடிகள் போகியார் நங்கைசாத்தப் பெருமானார் நொந்தா விளக்கனுக்கு

வைத்த பொன்(ங). இப்பொன் முப்பத்தின் கழஞ்சுங் கொண்டு இரவும் பகலும் முட்டாமே ஒரு நொந்தா விளக்கு சந்திராதித்த வல் ஏரிப்போமானோந் திருத்துருத்தி சபையோம் இது பன்மாயேசுஸ்வர ரக்ஷை" என கல்வெட்டு சொல்கிறது

இந்துக்களின் ஞானமும். பக்தியும் சமூக வாழ்வும் எப்படி ஆலயங்களோடு பின்னி பிணைந்திருந்தன, அதுவும் ராஜராஜசோழன் அதை எவ்வளவு ஞானமாக நடத்திகொண்டிருந்தான் என்பதற்கு இவையெல்லாம் சாட்சிகள்.

இங்கு சாணக்கியன் எழுதிய, அர்த்த சாஸ்திரமாகட்டும், வள்ளுவன் எழுதிய ஆட்சிக்குரிய வழிகளாகட்டும் எல்லாமே இந்துதர்மம், எல்லாமே இந்துக்களிடம் இருந்த ஆழ்ந்த நிர்வாக அறிவின் சாயலே. இந்துக்களின் ஆழ்ந்த நிர்வாக ஞானமே, இப்படி புலவர்களாலும் ஞானியராலும் வடித்து வைக்கப்பட்டது, ராஜராஜசோழன் அந்த இந்துக்களின் ஆட்சியின் பெரும் வடிவம் என்பதால் அதையே தன் ஆட்சியில் செயல்படுத்தியும் காட்டினான்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
இது நல்ல இருக்கே, எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரிக்கு 8 வருஷம் வாரன்டியா !