காய்கறிகள் பறித்தவுடன் விற்பனை; அசத்தும் தேனி விவசாயிகள்

தேனியில் ‘களைகட்டிய’ ரோட்டோர காய்கறி விற்பனை.
Today Vegetable Rate -தேனி- மதுரை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும், தேனியில் இருந்து ஆறு கி.மீ., தொலைவில் அரைப்படித்தேவன்பட்டி கிராமம் உள்ளது. இங்கு தோட்டக்கலை கிராமம் என வர்ணிக்கப்படும் அளவுக்கு, பல்வேறு வகையான காய்கறிகள் விளைகின்றன. இந்த கிராமத்தில் விளையும் காய்கறிகளை, சமீபகாலமாக விவசாயிகள் பலர் நேரடி விற்பனை செய்கின்றனர். தங்கள் தோட்டங்களில் விளையும் காய்கறிகளை பறித்த உடனே கொண்டு வந்து மதுரை- தேனி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் குவித்து வைத்து, சாலையில் செல்பவர்களிடம், சில்லரை விற்பனை செய்கின்றனர்.
காய்கறிகள் உழவர்சந்தை விலைக்கே கிடைப்பதாலும், மிகவும் 'பிரஷ்' ஆகவும், சுத்தமாகவும் இருப்பதாலும் டூவீலர் மற்றும் கார்களில் செல்பவர்கள், வாகனங்களை நிறுத்தி இறங்கிவந்து, இவற்றை விரும்பி வாங்கிச் செல்கின்றனர். வியாபாரமும் நல்ல முறையில் உள்ளது. தேனி- மதுரை ரோட்டோரம், தேனி அருகே குன்னுாரில் இருந்து அரைப்படித்தேவன்பட்டி வரை 3 கி.மீ., தொலைவிற்குள் ரோட்டின் இருபுறமும் 20க்கும் மேற்பட்ட கடைகள் அமைத்துள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் தோட்டத்தில் விளைந்த பொருட்களை மட்டுமே விற்பனைக்கு வைத்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகளிடம் கேட்ட போது, நாங்கள் நேரடியாக காய்கறிகளை விற்பதால், வாடிக்கையாளர்களுடன் நேரடி தொடர்பு ஏற்படுகிறது. இதனால் கமிஷன் கடைக்கு வாகனத்தில் காய்கறிகளை ஏற்றிச் செல்லும் செலவுகள், கமிஷன் கொடுக்கும் செலவு, மொத்த விலையில் இருந்து 20 சதவீதம் விலை உயர்த்தி, சில்லரையில் விற்பனை செய்வதால் கூடுதல் வருவாய் என, காய்கறிகளுக்கு இருமடங்கு லாபம் கிடைக்கிறது, என்றனர்.
இப்போது அரைப்படித்தேவன்பட்டி விவசாயிகளின் 'ஸ்டைல்' மாவட்டம் முழுவதும் பரவி வருகிறது. தேனி- குமுளி ரோடு, தேனி- போடி ரோடு, தேனி- மதுரை ரோடு, தேனி- திண்டுக்கல் ரோடு என முக்கிய வழித்தடங்களின் ஓரங்களிலும், மாவட்டத்திற்குள் செல்லும் சாலையின் ஓரங்களிலும் விவசாயிகள், தங்கள் நிலத்தில் விளையும் காய்கறிகளை அப்படியே பறித்துவந்து ரோட்டோரம் வைத்து நேரடி விற்பனை செய்து, கூடுதல் வருவாய் ஈட்டி வருகின்றனர். இந்த முறை விற்பனை, தற்போது தேனி மாவட்டம் முழுவதும் பரவி வருகிறது. பல இடங்களிலும் விவசாயிகள் நேரடி விற்பனை மையத்தை ரோட்டோரங்களில் தொடங்கி உள்ளனர். விவசாயிகள் நேரடியாக காய்கறிகளை விற்பனை செய்வதால், அவர்களின் வருமானம் இரண்டு மடங்கு பெருகி உள்ளது. உடனடியாக, கைக்கு பணமும் வந்து சேருகிறது. தேனி மாவட்டத்தின் 'டிரென்ட்' ஆகவே இது மாறி வருகிறது. இதனால் பல நுாறு ஆண்டுகளாக விவசாயிகளை வைத்து, அதிக லாபம் சம்பாதித்து வந்த இடைத்தரகர்கள், ஏமாற்றமடைந்து உள்ளனர். இடைத்தரகர்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்வதை தடுத்து, நேரடி விற்பனை வாய்ப்பு உருவாக்கி கொடுத்தால், விளைநிலங்களில் கடுமையாக உழைக்கும் விவசாயிகளுக்கு, நேரடியாக நல்ல வருமானம் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu