ஷீரடி ஆன்மீக பயணம்: தேனி ரயில்வே நிலையத்தில் வழியனுப்பு விழா
தேனியில் இருந்து ஷீரடிக்கு செல்லும் பக்தர்களை வழியனுப்ப ரயில்வே ஸ்டேஷன் வந்த அறக்கட்டளை நிர்வாகிகள்.
தேனி மாவட்டம், லட்சுமிபுரத்தில் ஷீரடி சாய்பாபா கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களின் பெயர்களை எழுதிப்போட்டு குலுக்கல் முறையில் தேர்வு செய்வார்கள். இப்படி தேர்வு செய்யப்படும் பக்தர்களை ஷீரடிக்கு இலவசமாக அழைத்துச் செல்வார்கள்.
இதற்கான முழு செலவுகளையும் லட்சுமிபுரம் ஷீரடி சாயிபாபா கோயில் அறக்கட்டளை ஏற்றுக் கொள்கிறது. இப்படி அடிக்கடி குலுக்கல் நடத்தப்பட்டு பக்தர்கள் ஷீரடிக்கு இலவசமாக அனுப்பி வைக்கப்பட உள்ளனர். முதல் குழுவின் பயணம் தேனி ரயில் நிலையத்தில் நேற்று இரவு (செவ்வாய்க்கிழமை இரவு) தொடங்கியது.
முதல் குழுவில் 65 பயணிகள் புறப்பட்டனர். இவர்களை சாயிபாபா அறக்கட்டளை குழு தலைவர் ராஜன், இந்து எழுச்சி முன்னணி மாவட்ட தலைவர் ராமராஜ், பாண்டிச்சேரி- சென்னை வக்கீல் கூட்டமைப்பின் தென்மண்டல செயலாளர் எம்.கே.எம்.முத்துராமலிங்கம், உயிரி மருத்துவ பொறியாளர் ராஜேஷ் கண்ணா, கிளாசிக் மணி உட்பட ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். ஆன்மீகப்பயணம் செல்பவர்களுக்கு தேவையான ஸ்நாக்ஸ்கள், உணவுகள், மருந்து மாத்திரைகள், படுக்கைகள், துணிகள், துண்டுகள் உட்பட அத்தனையும் வழங்கப்பட்டன. அனைத்து பக்தர்களுக்கும் அடையாள அட்டை போல் சிவப்பு துண்டு வழங்கப்பட்டது. ஆன்மீக பயணம் முடித்து திரும்பும் வரை இந்த துண்டினை பக்தர்கள் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
அறக்கட்டளை தலைவர் ராஜன் கூறியதாவது: பக்தர்கள் வீடுகளில் புறப்படுவதில் இருந்து திரும்ப வீடு வந்து சேரும் வரை பயண செலவு, தங்குமிடம், உணவு, கோயிலில் வழிபாடு ஏற்பாடுகள் உட்பட அத்தனை செலவுகளும் அறக்கட்டளையினை சேரும். ஷீரடி வழிபாடு இரண்டு நாட்கள் இருக்கும். அதாவது இருமுறை ஷீரடி சாயிபாபாவை வழிபடலாம். பின்னர் புனே வரை இக்குழுவினர் பயணிப்பாளர்கள். வழியில் அவர்கள் ஐந்து புனித தலங்களை வழிபட்டு சுற்றிப்பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் ௫ நாட்கள் ஆன்மீக பயணம் இருக்கும். அவர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல தனியாக பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பயணம் செல்பவர்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல் முறைகளும் வழங்கப்பட்டுள்ளன. இன்று தொடங்கிய இந்த சேவை இனி எப்போதும் தொடரும். இவ்வாறு கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu