சபரிமலை சீசன்: தேனி மாவட்டத்தில் சைவத்திற்கு மாறிய அசைவ ஹோட்டல்கள்...
தேனி- பெரியகுளம் சாலையில் உள்ள இரவு நேர உணவகம்.
சபரிமலை சீசன் உச்சகட்டத்தை எட்டி உள்ள நிலையில், தேனி மாவட்டம் வழியாக சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தேனி மாவட்டத்தில் நெடுஞ்சாலைகள், நான்கு வழிச்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரம் இருந்த அசைவ ஹோட்டல்கள் அத்தனையும் சபரிமலை சீசனுக்காக சைவ ஹோட்டல்களாக மாறி விட்டன. (இது ஆண்டு தோறும் நடக்கும். சீசன் முடிந்ததும் மீண்டும் அசைவ ஹோட்டல்களாக மாறி விடும்).
ஒரு பக்கம் சபரிமலை சீசன், மறுபுறம் தைப்பூச முருகன் வழிபாடு சீசன், ஆதிபராசக்தி கோயில் சீசன் என பக்தி சீசன் களைகட்டி உள்ளது. தற்போதைய மார்கழி கடைசி வாரம் தை முதல் வாரங்களில் சீசன் உச்சத்தில் இருக்கும். கிட்டத்தட்ட கார்த்திகை மாதம் முதல் தேதி தொடங்கும் இந்த சீசன், தை மாதம் இறுதி வரை நீடிக்கும். அதன் பின்னர் உள்ளூர் காவல் தெய்வங்கள், இஷ்ட தெய்வங்களின் வழிபாடுகள் தொடங்கி விடும்.
இந்த முக்கிய சீசன் நேரங்களில் சைவத்திற்கு மாறிய ஹோட்டல்களில் வியாபாரம் களை கட்டி வருகிறது. தவிர, தேனி மாவட்டம் முழுக்க விவசாய மாவட்டமாக இருந்தாலும், வணிக நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் என அனைத்தும் வந்து விட்டதால் மிகுந்த வளர்ச்சி பெற்ற மாவட்டமாக மாறி உள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து தேனி மாவட்டத்தில் தங்கி பணிபுரிபவர்களி்ன் எண்ணிக்கை மட்டும் லட்சத்தை எட்டி நிற்கிறது.
அவர்களில் மிகப்பெரும்பான்மையானோர் தனியாக வீடு எடுத்து தங்கி உள்ளனர். அல்லது தனியார் விடுதிகளில் தங்கி உள்ளனர். அவர்கள் எல்லோரும் கடை சாப்பாடு தான். தவிர வெளிமாவட்டங்களில் இருந்து தேனி மாவட்டத்திற்கு வந்து செல்பவர்களின் எண்ணிக்கை பல லட்சம் இருக்கும். தேனி மாவட்டத்தில் இருந்து தினமும் வெளியூர் சென்று வரும் பல லட்சம் பேரும் இரவு நேர சாப்பாட்டிற்கு தேனி திரும்பி விடுகின்றனர்.
தவிர உள்ளூர் மக்கள் பல்வேறு காரணங்களுக்காக கடையில் சாப்பிடும் வழக்கம் அதிகரித்து வருகிறது. தேனி உள்ளிட்ட பல நகராட்சி பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு காலை, மதியம், இரவு உணவுகளை ஹோட்டல்கள், மெஸ்களில் இருந்து வரவழைத்து வழங்கி வருகின்றன.
இதனால் தேனி மாவட்டத்தில் தற்போது ஹோட்டல் தொழில் தான் மிகவும் ஹைலைட்டான வருமானம் நிறைந்த தொழிலாக மாறி உள்ளது. அதுவும் இரவு நேர ஹோட்டல்கள், தெருவோர ஹோட்டல்கள் மிகவும் பிஸியாகி விட்டன. வருவாயும் கொட்டுகிறது. இதனால், ஹோட்டல் தொழிலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu