சபரிமலை சீசன் காரணமாக வாழை விவசாயிகளுக்கு ஜாக்பாட்..!
தேனி மாவட்ட வாழை சந்தை (கோப்பு படம்)
சபரிமலை சீசன் காரணமாக கேரளாவில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இவர்கள் கேரள சிப்ஸ்களை விரும்பி வாங்குவதால், சிப்ஸ் தயாரிக்க பயன்படும் நாட்டுரக (சக்கை) வாழைக்காய்கள் தேனி மாவட்டத்தில் இருந்து கேரளா செல்கின்றன. இதனால் விலை மூன்று மடங்கிற்கு மேல் உயர்ந்துள்ளது.
சபரிமலை சீசன் காரணமாக வடமாவட்டங்கள், வட மாநிலங்களில் இருந்து பக்தர்கள் கேரளாவி்ல் குவிந்து வருகின்றனர். கேரளாவிற்குள் நுழைந்ததும் இவர்கள் தேடுவது கேரள சிப்ஸ்களை தான். அந்த அளவு கேரளாவில் தேங்காய் எண்ணெயில் தயாரிக்கப்படும் சிப்ஸ் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவாக உள்ளது. அதற்காக தேனி மாவட்டத்தில் இருந்து வாழைக்காய்களை அதிகளவில் கொள்முதல் செய்கின்றனர்.
வாழை வியாபாரி சிதம்பரம் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் தற்போது வாழைக்கு சீசன் இல்லாத காலம். கிலோ 24 ரூபாய் விற்ற ரோபஸ்டா ரக பச்சை வாழை தற்போது ஒரு கிலோ 12 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கிலோ 70 ரூபாய் வரை விற்பனையான நாளிப்பூவன் தற்போது 28 ரூபாய்கு விற்கப்படுகிறது. கற்பூர வள்ளி ஒரு தார் விலையே 150 ரூபாய் ஆக குறைந்து விட்டது. செவ்வாழை ஒரு கிலோ 58 ரூபாயில் இருந்து 40 ரூபாய் ஆக குறைந்துள்ளது.
தை மாதத்திற்கு மேல் மீண்டும் இவற்றின் விலைகள் அதிகரிக்க தொடங்கும். தொடர்ச்சியாக வைகாசி மாதம் வரை விலை கிடைக்கும். சபரிசலை சீசன் மும்முரமாக உள்ளதால், கேரளாவில் சிப்ஸ் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடக்கிறது. சிப்ஸ் விற்பனையும் களை கட்டி உள்ளது. இதனால் சிப்ஸ் தயாரிக்க உகந்த நாட்டுரக சக்கை எனப்படும் வாழைக்காய்களுக்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது.
இதனால் ஒரு கிலோ 26 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. முன்பு விவசாயிகளிடம் ஒரு கிலோ 5 ரூபாய்க்கு வாங்கி 12 ரூபாய்க்கு நாங்கள் விற்போம். தற்போது கிலோ விவசாயிகளிடம் 12 ரூபாய்க்கு வாங்கி, வெட்டுகூலி, சுமை கூலி, வண்டி வாடகை, லாபம், கமிஷன் எல்லாம் சேர்த்து 26 ரூபாய்க்கு விற்கிறோம். விவசாயிகளுக்கு 12 ரூபாய் கிடைப்பதே நல்ல விலை தான். இவ்வாறு கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu