அரை கிலோ வெரைட்டி ரைஸ் 45 ரூபாய் பாலீதீன் பயன்படுத்தாத சாலையோர வியாபாரி..!
தேனி போலீஸ் ஸ்டேஷன் எதிரே பெரியகுளம் ரோட்டோரம் புளியமரத்தடியில் தள்ளுவண்டியில் சுகாதாரமான முறையில் உணவு விற்கும் ஜெயபாண்டி.
தேனியில் போலீஸ் ஸ்டேஷன் எதிரே 33 ஆண்டுகளாக வெரைட்டி ரைஸ் விற்பனை செய்யும் சிறு வியாபாரி, 45 ரூபாய்க்கு அரைகிலோ உணவு வழங்குகிறார். இதுவரை உணவுகளை பாலீதீன் பைகளில் வழங்கியதில்லை. பரிந்துரைக்கப்பட்ட சுகாதாரமான டப்பாக்களில் அடைத்து விற்பனை செய்வதால், போலீசார், அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் என பலரும் விரும்பி வாங்குகின்றனர்.
தேனியில் போலீஸ் ஸ்டேஷன் எதிரே புளியமரத்தடியில் ஒரு தள்ளுவண்டியில் 31 ஆண்டுகளாக சாலையோர உணவகம் நடத்தி வருபவர் ஜெயபாண்டி, 66. இவர் ஆரம்பகாலங்களில் வாழை இலையில், உணவுகளை மடித்து பேக்கிங் செய்து விற்பனை செய்து வந்தார். தற்போது வாழை இலைக்கு தட்டுப்பாடு ஏற்படவும், உணவுகளை அடைத்து விற்பனை செய்ய பரிந்துரைக்கப்பட்ட டப்பாக்களில் (ஒரு டப்பா 7 ரூபாய்) வெரைட்டி ரைஸ்களை அடைத்து விற்பனை செய்கிறார்.
முட்டை பிரியாணி, தக்காளி சாதம், மிளகு சாதம், தயிர்சாதம், லெமன் சாதம், சாம்பார் சாதம் என பல வகை சாதங்களை குழம்பு, துவையல், ஊறுகாயுடன் விற்பனை செய்கிறார். ஒரு டப்பாவில் அரைகிலோ உணவு பிடிக்கிறது. இதன் விலை 45 ரூபாய் என நிர்ணயித்துள்ள ஜெயபாண்டி, டப்பாவிற்கும் சேர்த்து 45 ரூபாய் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கிறார்.
ஆனால் உணவு தரமாகவும், சுத்தமாகவும் இருப்பதால், போலீசார், வங்கி ஊழியர்கள், அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் என பலரும் இவரது வாடிக்கையாளர்களாக உள்ளனர். காலை 10 மணிக்கு கடை விரிக்கும் ஜெயபாண்டி மதியம் 1.30 மணிக்குள் வியாபாரத்தை முடித்து வீட்டிற்கு கிளம்பி விடுகிறார்.
அவர் கூறியதாவது:
நான் 28 ஆண்டுகளாக உணவு வியாபாரம் செய்கிறேன். வாழை இலை மட்டுமே பயன்படுத்துவேன். பாலீதீன் பேப்பரோ, பைகளோ இதுவரை பயன்படுத்தியதில்லை. இதனால் வாடிக்கையாளர்களுக்கு என் மீது நல்ல மரியாதை உண்டு. தற்போது வாழை இலை கிடைப்பதில்லை. எனவே சுகாதாரப்பிரிவு அதிகாரிகளை கலந்து ஆலோசனை செய்து, பரிந்துரைக்கப்பட்ட டப்பாக்களில் விற்பனை செய்கிறேன்.
இந்த டப்பாவின் விலை மட்டும் 10 ரூபாய் ஆகும். நான் மொத்தமாக விலைக்கு வாங்குவதால் ஒரு டப்பாவிற்கு ஏழு ரூபாய் விலை கிடைக்கிறது. இதில் அரைகிலோ உணவு அடைத்து 40 ரூபாய்க்கு விற்கிறேன். உணவுக்காக எனக்கு 38 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. எவ்வளவோ மிகப்பெரிய ஓட்டல்கள் வந்து விட்ட நிலையிலும் நான் விற்கும் உணவுகள் ஒரு நாள் கூட மீதம் ஆனதில்லை. அந்த அளவு என் வாடிக்கையாளர்கள் திருப்தியாக உள்ளனர். இதுவே எனக்கு மனநிறைவை தருகிறது. இவ்வாறு கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu