தேவிகுளம், பீருமேட்டை குடுத்திருங்க..! அணையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்..!

தேவிகுளம், பீருமேட்டை குடுத்திருங்க..!  அணையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்..!
X

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக் பாலசிங்கம்.

பெரியாறு அணையினை நாங்கள் பாதுகாத்துக் கொள்கிறோம். எங்கள் நிலத்தை தமிழகத்திடம் கொடுத்து விடுங்கள்.

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர், ச.பென்னிகுயிக் பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

1956 காலகட்டங்களில் பெரிய அளவிலான தமிழர் பெரும்பான்மை இருந்தும், எந்த அடிப்படையில் மொழிவழி பிரிவினை கமிட்டி, தேவிகுளம் பீர்மேடு பகுதிகளை கேரளாவோடு சேர்க்க முன் வந்தது.

பழனி மலைக் குன்றுகளில் அமைந்திருக்கும் அஞ்சுநாடு என இன்றளவும் அழைக்கப்படும், மறையூர், காந்தலூர், கோடாந்தூர், கீழாந்தூர், கொட்டகம்பூர் உள்ளிட்ட பகுதிகளின் மொத்த பரப்பு 112 சதுர கிலோ மீட்டர்கள்.

இந்தப் பகுதிக்கும் தேவிகுளம் தாலுகாவிற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. மூணாறிலிருந்து மறையூர் வழியாக உடுமலைப்பேட்டை செல்லும் சாலை மட்டும் இல்லாதிருந்தால், இன்று மறையூர் உள்ளிட்ட அஞ்சு நாடு, உடுமலைப்பேட்டை தாலுகாவில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ளடங்கிய ஒரு பகுதியாக இருந்திருக்கும்.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில், கேரளாவிற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் 30 டி.எம்.சி தண்ணீரில், இந்த மறையூர் அஞ்சு நாட்டிலிருந்து கிளம்பி அமராவதி அணைக்கு செல்லும் பாம்பாறிலிருந்து,3 டிஎம்சி தண்ணீரை எடுப்பதற்காக, தூவானம் என்னுமிடத்தில், தடுப்பணை கட்டும் வேலையை தீவிரப்படுத்தி இருக்கிறது கேரள மாநில அரசு.

காவிரியின் துணை நதிகளில் ஒன்றான இந்த பாம்பாறு, தூவானத்தில் மூன்று டிஎம்சி க்காக மறிக்கப்பட்டால், அமராவதி அணை வற்றி வறண்டுபோகும். இந்தச் சிக்கல் அன்று இல்லாத காரணத்தினால், மறையூர் அஞ்சு நாட்டை, அன்றைக்கிருந்த சென்னை மாகாண அரசு கண்டுகொள்ளவில்லை.

ஆனால் தேவிகுளம் பீர்மேடு விஷயத்தில் மலையாளிகள் இந்த அளவிற்கு பிடிவாதம் காட்டுவதற்கான பின்னணியில், வேறொரு கிளைக் கதையும் இருக்கிறது. கேரளாவின் இரண்டு பிரதான நதிகள் பம்பா மற்றும் பெரியாறு. இதில் பெரியாறு பெரிய அளவிற்கு விவசாயத்திற்காக பயன்படாவிட்டால் கூட, கேரள மாநிலத்திற்கான மின் தேவையில் 42 விழுக்காடை அதுதான் பூர்த்தி செய்கிறது. ஆனால் பம்பை அப்படி அல்ல, கேரளாவில் விவசாயம் செழித்த குட்டநாடு பகுதியினுடைய ஜீவாதாரமே இந்த பம்பை தான். மேலாக மத்திய திருவிதாங்கூரின் நீர் வளத்திற்கு காரணமாக விளங்குவது இந்த பம்பை நதிதான்.

பழைய பீர்மேடு தாலுகாவில் புளிச்ச மலையில் உற்பத்தியாகும் இந்தப் பம்பா நதி, ஆலப்புழா மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களில் வழியே ஓடி, வேம்பநாட்டு காயலில் சென்று கலக்கிறது.

இதைவிட இன்னொரு கொடுமை இன்றளவும் நீடித்துக் கொண்டிருக்கிறது... கேரளாவிற்கும்- தமிழகத்திற்குமிடையிலான எல்லையின் நீளம் 822 கிலோமீட்டர்கள். அதாவது நீலகிரி மாவட்டத்திலுள்ள முதுமலை சரணாலயத்தில் தொடங்கும் எல்லை...

கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை (சதுரகிரி), விருதுநகர், தென்காசி வழியாக பயணித்து குமரி மாவட்டத்தின் கொல்லங்கோட்டில் முடிவடைகிறது. இத்தனை நீளமான எல்லையில் முறையாக அளக்கப்பட்ட பகுதிகள் வெறும் 203 கிலோ மீட்டர்கள் மட்டுமே...அப்படியானால் மொழிவழி பிரிவினை கமிட்டி போகிற போக்கில் கையை காட்டிவிட்டு சென்றது தான், நமக்கும் கேரளாவிற்கு மான எல்லையாக இதுவரை இருந்து வருகிறது.

அளவீடு செய்யப்படாமலேயே இரண்டு மாநில எல்கைகளும் நிர்வகிக்கப்பட்டு வருகிறது... எத்தனை ஆண்டுகளாக தெரியுமா, கிட்டத்தட்ட 63 ஆண்டுகளுக்கு மேலாக... இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த சிக்கல் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். மிக நீண்டகாலமாக கர்நாடகத்தின் வட எல்லையிலுள்ள பெல்காம் மாவட்டத்தில், மராட்டிய மொழியை முன்னிறுத்தி போராட்டங்கள் நடந்து கொண்டே இருக்கிறது.

60 ஆண்டுகளுக்கு மேலாக நடக்கும் அந்த எல்லை சிக்கல், இன்றுவரை தீர்ந்தபாடில்லை. ஆனால் கர்நாடகா மற்றும் மராட்டிய மாநிலங்களுக்கு இடையிலான எல்லை முழுமையாக அளவீடு செய்யப்பட்டு விட்டது. அளவீடு செய்யப்பட்ட பின்னரும் இரண்டு மாநிலங்களுக்கும் இடையிலான போர் நிற்கவே இல்லை... ஆனால் அளவீடே செய்யப்படாத நிலையிலும் இங்கு, எவ்வித போராட்டமும் நடக்கவே இல்லை. அப்படியானால் என்ன மனநிலையில் வாழ்கிறோம் நாம்....

21- 11- 1955 ஆம் ஆண்டு, சென்னை மாகாண சட்டமன்றத்தில் பேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினரான எஸ். தினகரசாமி தேவர் வாதம் புறக்கணிக்கப்பட முடியாத ஒன்று. ‘‘தேவிகுளத்தில் 90 விழுக்காடு தமிழர்களும், பீர்மேட்டில் 51 விழுக்காடு தமிழர்களும் வாழ்ந்து வரும் நிலையில்...எந்த அடிப்படையில் மேற்கண்ட இரண்டு தாலுகாக்களையும், கேரளாவோடு இணைப்பதற்கு மொழிவழி பிரிவினை கமிட்டி சம்மதம் தெரிவித்திருக்கிறது என்பதாகும்’’.

ஆனால் எஸ். தினகரசாமி தேவர் இந்த வாதத்தை, அன்றைக்கு சென்னை மாகாண சட்டமன்றத்தில் இருந்த மலையாள உறுப்பினர்கள் எவரும் மறுக்கவில்லை என்பதை, அன்றைய சட்டமன்றக் குறிப்பேடுகளிலேயே நாம் பார்த்துக்கொள்ள முடியும். தேவிகுளம் தாலுகாவில் 1931 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தமிழர்கள் எண்ணிக்கை- 51,730 ம் பேர். மலையாளிகள் எண்ணிக்கை-3,834 மட்டுமே. இதுவே 1941 ல் தமிழர்களின் எண்ணிக்கை-53,394 பேர். மலையாளிகளின் எண்ணிக்கை- 8,282 பேர். இதுவே 1951ஆம் ஆண்டு தமிழர்களின் எண்ணிக்கை-62,130 பேர். ஆனால் அதே ஆண்டு மலையாளிகளின் எண்ணிக்கை 16,050 பேர்.

அதாவது 51 ஆயிரத்து 730 பேர், 62 ஆயிரத்து 130 பேர் ஆக உயர்ந்திருக்கிறார்கள். ஆனால் வெறும் 3,834 பேர், 16,050 பேராக உயர்ந்திருக்கிறார்கள். இந்தக் கணக்கில் ஏதாவது நியாயம் இருக்கிறதா...? பிராய்லர் கோழிகளைப் போல தங்கள் எண்ணிக்கையை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தேவிகுளம் தாலுகாவில் உயர்த்திக் கொண்ட இவர்கள்... இன்று மண்ணின் மைந்தர்கள் ஆகிவிட்டார்கள்...

ஆனால் 1931 ஆம் ஆண்டு அரை இலட்சத்திற்கும் மேல் வாழ்ந்த தமிழர்கள், இன்று அந்த மண்ணுக்கு அந்நியமாகிப் போனார்கள்.. இதுதான் இந்திய ஜனநாயகத்தின் ராஜபாட்டை.. நீங்கள் பெரியாறு அணையினை பாதுகாக்கவும், உடைக்கவும் மிகவும் சிரமப்பட வேண்டாம். எங்கள் தமிழர்களின் நிலத்தை தமிழக அரசிடம் திரும்ப கொடுத்து விடுங்கள்.

அணையினை நாங்கள் அதாவது தமிழ்நாடு பராமரித்து பாதுகாத்துக் கொள்ளும். தேவையில்லாத சுமையினை ஏன் மலையாளிகள் சுமக்க வேண்டும். எங்களின் சொத்துக்களை எங்களிடமே தாருங்கள். அந்த நிலம் வந்தால், அணை தமிழகத்திற்கு சொந்தமாகி விடும். பின்னர் அணை தொடர்பான அத்தனை ரிஸ்க்குகளையும் தமிழகம் பார்த்துக் கொள்ளும். நீங்கள் அணைக்கு எதிராக பேசிக் கொண்டே போனால், நாங்கள் எங்கள் நிலத்தை எங்களிடம் தாருங்கள் என நாளுக்கு நாள் வலுவாக கேட்போம்.

நாங்கள் எங்கள் நிலத்தை கேட்பது எங்களின் உரிமைக்காக. கேரள அரசியல்வாதிகளும், அங்குள்ள சில சுயநலவாதிகளும் சுப்ரீம்கோர்ட், மத்திய நீர் வள ஆணையம், முல்லைப்பெரியாற அணை கண்காணிப்புக்குழு போன்ற உயர் இந்திய நிர்வாக அமைப்புகளின் உத்தரவினை மதிக்காமல், அணையை உடைப்போம் என வன்முறையாக பேசுவது மிகவும் ஆபத்தானது. இந்திய நிர்வாக உயர் கட்டமைப்புகளின் உத்தரவுகளை மீறுபவர்களால் பெரியாறு அணைக்கு எந்த நேரமும் ஆபத்து வரலாம்.

இப்படிப்பட்ட தீவிர சிந்தனை கொண்டவர்களை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும். இவ்வளவு வன்மமும், வன்முறை சிந்தனையும் கொண்டவர்களை கேரள அரசோ, மத்திய அரசோ கட்டுப்படுத்த குறைந்த பட்ச எச்சரிக்கை கூட தரவில்லை. எனவே எங்களின் அச்சம் காரணமாக, எங்களின் உரிமையான எங்கள் தமிழ் நிலத்தை தமிழகத்திடம் தாருங்கள் என கேட்கிறோம்.

எங்களின் தரப்பில் உள்ள நியாயத்தை தமிழக அரசும், மத்திய அரசும் புரிந்து கொள்ள வேண்டும். எங்களை தவறாக புரிந்து கொள்ளக்கூடாது. எந்த சூழலிலும் நாங்கள் பிரிவினை பற்றி பேசப்போவதில்லை. பிரிவினையை ஆதரிக்கபோவதும் இல்லை. பிரிவினை வேறு, உரிமை வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த உரிமை கூட கேரளாவில் சில சுயநலவாதிகளால் ஏற்பட்ட அச்சத்தின் காரணமாக எழுப்ப வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது என்பதை தமிழக அரசும், மத்திய அரசும் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த அறிக்கை தொடர்பாக எனக்கு எதிராக வரும் அத்தனை கருத்துக்களையும், நடவடிக்கைகளையும் நான் எதிர்கொள்ளவும் தயாராக உள்ளேன். என் பின்னால் ஐந்து மாவட்ட விவசாயிகளும், மக்களும் உள்ளனர். அவர்கள் எனது கருத்தை ஏற்றுக் கொள்வார்கள் என நம்பிக்கையுடன் உள்ளேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி