இனி இஷ்டம் போல் முடி வெட்ட முடியாது: போலீசார் போட்ட திடீர் உத்தரவு!

தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முடிதிருத்தக நிலைய உரிமையாளர்கள்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி அரசு பள்ளி மாணவன் ஒருவன், கோமாளி போல் ஒரு பக்கம் ஓட்ட முடிவெட்டி, உச்சந்தலையில் அதிகளவு முடி வைத்து, சினிமா பாணியில் வசனம் பேசிய வீடியோ வைரலானது. அந்த மாணவன் 18 வயதுக்கு குறைவானவன். அதனால் அவன் மீது பெரிய அளவில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இருப்பினும் இது போன்ற மாணவர்களுக்கு, கவுன்சிலிங் கொடுத்து அவர்களை நல்வழிப்படுத்த மாவட்ட போலீஸ் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும், கல்வித்துறையும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இவ்வளவு சிக்கலுக்கும் அடிப்படை பிரச்னை முடிவெட்டுவதில் தொடங்குகிறது. நமது இந்திய கலாச்சாரப்படி ஆண்கள் ராணுவம், போலீஸ் பாணியில் டிரிம்மாக முடிவெட்டி கம்பீரமாக வலம் வர வேண்டும். ஆனால் சினிமா பாணியில் பல முடிதிருத்தகங்கள் அசிங்கமாக முடி வெட்டி தலையை 'கந்தரகோலம்' செய்து விடுகின்றனர். ஒரே தலையில் நாலைந்து ஸ்டைலில் முடி வெட்டி, நாலைந்து கலர் கொடுத்து விடுகின்றனர். இந்த ஹேர் ஸ்டைல் மிகவும் ஒழுக்கமான மாணவனை கூட தடம் புரள வைத்து விடுகிறது. எனவே போலீசார் தறிகெட்ட ஹேர் ஸ்டைலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
தேவதானப்பட்டி போலீசார், அப்பகுதியிலும், சுற்றுக்கிராமங்களிலும் உள்ள அத்தனை முடிதிருத்தகங்களின் உரிமையாளர்கள், பணியாளர்களை அழைத்து, ஆண்களுக்கு எக்காரணம் கொண்டு, 'சினிமா பாணியில் கலாச்சாரத்தை கெடுத்து ரவுடி போல் காட்டும் கெட் அப்பில் முடி வெட்டக்கூடாது. மிகவும் கண்ணியமாக ஒரு போலீஸ் போல, ஒரு ராணுவ வீரனை போல கம்பீரமாக முடி வெட்ட வேண்டும்.
மீறி யாராவது மாணவர்களுக்கோ அல்லது வேறு ஆண்களுக்கோ 'குண்டக்க மண்டக்க' முடிவெட்டினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அப்படி முடி வெட்டச்சொல்லி யாரும் உங்களுக்கு நெருக்கடி கொடுத்தால் உடனே எங்களுக்கு தகவல் தாருங்கள். உங்களுக்கு தேவையான பாதுகாப்பினை நாங்கள் தருகிறோம் என்று அறிவுறுத்தினர். போலீசாரின் இந்த அறிவுரைக்கு முடிதிருத்தக உரிமையாளர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த பொதுமக்களும் பெரும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu