முன்னாள் ராணுவத்தினருக்கு மாவட்ட அளவில் குறைதீர் முகாம் நடத்த கோரிக்கை
டெல்லி போர்வீரர்கள் நினைவு சின்னம் அமைந்துள்ள திடலில் முன்னாள் ராணுவத்தினர் ஒருங்கிணைப்புக்குழு தலைமை நிர்வாகிகள் இணைந்து படம் எடுத்துக் கொண்டனர்.
முன்னாள் படைவீரர்கள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் புதுடில்லியில் நடைபெற்றது. இந்தியா முழுவதும் இருந்து முன்னாள் படைவீரர்கள் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து மாநில தலைவர் சுபேதார் மகாராஜன், மாநில செயலாளர் மணி, பொருளாளர் சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.முன்னதாக கூட்டத்திற்கு வந்த நிர்வாகிகள் அனைவரும் டில்லியில் உள்ள போர்வீரர்கள் நினைவு சின்னத்தில் மலஞ்சலி செலுத்தினர். பின்னர் கூட்டம் நடந்தது.
நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இ.சி.ஹைச்.எஸ்., எனப்படும் ராணுவத்தினருக்கான மருத்துவமனைகள் உள்ளன. இதில் சிறப்பு சிகிச்சை வசதிகள் இல்லை. ஆனால் மிகப்பெரும்பான்மையான மாவட்டங்களில் தனியார் மருத்துவமனைகள் மூலம் சிறப்பு சிகிச்சை வசதிகள் கிடைக்கின்றன.இந்த சிகிச்சை வசதிகளை அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த முன்னாள், இந்நாள் படைவீரர்கள் அனைவரும் பயன்படுத்தும் வசதிகளை உருவாக்கித்தர வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் ராணுவ கேண்டீன்களின் எண்ணிக்கையினை இரு மடங்காக உயர்த்த வேண்டும். நாடு முழுவதும் ராணுவத்தினர் உள்ளிட்ட படைப்பிரிவினரின் குடும்பங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக போலீசாரிடம் சென்றால் முறையான நடவடிக்கைகள் எடுப்பதில்லை. இதனால் படைப்பிரிவுகளில் பணிபுரியும் வீரர்கள் தங்கள் குடும்பங்களை நினைத்து மனஉளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.
இப்பிரச்சினைக்கு தீர்வு காண, படைவீரர்களின் குடும்பத்தினரின் நியாயமான கோரிக்கை, பாதுகாப்பு விஷயங்களில் போலீசார் நேர்மையுடன் செயல்பட தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் கலெக்டர், எஸ்.பி., தலைமையில் படைவீரர்களின் குடும்பத்தினருக்கான குறைகேட்பு முகாம்கள் நடத்தி (தற்போது இந்த திட்டம் நடைமுறையில் இருந்தாலும் முறைப்படி செயல்படவில்லை) அவர்களின் குறைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu