போலீஸ்காரரிடம் 'பளார்' வாங்கிய செய்தியாளர்

போலீஸ்காரரிடம் பளார் வாங்கிய செய்தியாளர்

மாதிரி படம் 

தேனியில் போலீஸ்காரரை மிரட்டி 50 ஆயிரம் ரூபாய் கேட்ட நிருபர் ஒருவர் அவரிடம் கன்னத்தில் ‘பளார்’ என அறை வாங்கியதும் மன்னிப்பு கேட்டு தப்பினார்.

தேனி எஸ்.பி., அலுவலகத்தில் காவலராக பணிபுரியும் ஒருவர் தேனியில் வீடு கட்டி வருகிறார். இவர் தனது நேர்மையான பணி காரணமாக எஸ்.பி., எஸ்.பி.,இன்ஸ்பெக்டர் மற்றும் தனிப்பிரிவு அலுவலக அதிகாரிகளிடம் நற்பெயர் பெற்றுள்ளார்.

தனது ஓய்வு நேரத்தில் தனது வீடு கட்டும் பணி நடைபெறுவதை பார்வையிட்டுள்ளார். அப்போது மாடிக்கு மணல் ஏற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதற்கு போலீஸ்காரர், கிணற்றி்ல் இறைக்க பழைய காலத்தில் சுழலும் கொக்கி பயன்படுத்துவார்கள். அந்த கொக்கியை பயன்படுத்தி மணல் ஏற்றிக் கொண்டிருந்தார்.

இதனை ஒரு சிறிய பத்திரிக்கையின் நிருபர் வீடியோ எடுத்துள்ளார். வீடியோ எடுத்த பின்னர், அவரிடம் போய், 'நீங்கள் விதிகளை மீறி மக்களுக்கு ஆபத்து ஏற்படும் வகையில், மணல் ஏற்றுகிறீர்கள். இதனை நான் வீடியோ எடுத்து விட்டேன். இதனை வெளியிட்டால் உங்கள் வேலையே போய் விடும். எனவே வெளியிடாமல் இருக்க 50 ஆயிரம் ரூபாய் தாருங்கள். நான் எந்த பத்திரிக்கையிலும் படம் செய்தி வராமல் பார்த்துக் கொள்கிறேன்' என மிரட்டி உள்ளார்.அவர் தான் போலீசாயிற்றே. இந்த நிருபர் வீடியோ எடுப்பது, பின்னர் பேரம் பேசுவது உட்பட அத்தனையையும் தனது கேமரா மொபைலில் தெளிவாக பதிவு செய்து விட்டார்.

நிருபர் பேசும் போது ஒன்றும் அறியாத அப்பாவி போல் அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்த காவலருக்கு , அவர் பணம் கேட்டு மிரட்டியதும் 'சுர்' என கோபம் ஏறியது. நிருபரின் கன்னத்தில் 'பளார்' என ஒரு அறை விட்டார். பின்னர் நிருபரின் டூ வீலர் சாவியை பறித்து அவரையும் உட்கார வைத்து விட்டு, 'நீ என்னை என் அனுமதியின்றி அத்துமீறி வீடியோ எடுத்தது, அந்த வீடியோவை மையமாக வைத்து என்னை பணம் கேட்டு மிரட்டியது என அத்தனை ஆதாரமும் உள்ளது. உன்னை நான் புகார் செய்து சிறையில் தள்ளாமல் விடமாட்டேன்' என கடுமையாக கண்டித்துள்ளார்.

அதன் பின்னர் 'அய்யோ, அப்பா... என புலம்பிய நிருபர், சார் இந்த முறை மன்னித்து விடுங்கள். நான் இனி இந்த பக்கமே வரமாட்டேன்' என கெஞ்சி கூத்தாடி பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதனை பார்த்த நுாற்றுக்கணக்கான பொதுமக்கள், 'போலீசையே நிருபர்கள் மிரட்டுகின்றனர் என்றால் சாதாரண பொதுமக்களை என்ன பாடுபடுத்துவார்கள். இவர்களை விடக்கூடாது' என கண்டனம் தெரிவித்தனர்.

Tags

Next Story