தேனியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க இரண்டு மேம்பாலங்களுக்கு அனுமதி
பைல் படம்.
தேனி மாவட்டத்தின் தலைநகரான தேனியில் கம்பம், பெரியகுளம், மதுரை ரோடுகள் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்தவை. எந்த நேரமும் இந்த ரோடுகள் நெரிசலில் நிரம்பி வழியும். இந்நிலையில் மதுரை-போடி அகல ரயில் முதல் கட்டமாக தேனி வரை இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் மதுரை ரோட்டில் அரண்மனைப்புதுார் விலக்கு அருகிலும், பெரியகுளம் ரோட்டில் பெத்தாட்ஷி விநாயகர் கோயிலை ஒட்டியும் கடந்து செல்கிறது. இந்த இடங்களில் கேட் போடப்பட்டுள்ளது. (பாரஸ்ட் ரோட்டையும் கடக்கிறது. ஆனால் இங்கு கேட் மட்டும் போதும். பாலம் தேவையில்லை).
இந்த கேட் மூடப்பட்டால் ஓரிரு நிமிடங்களில் பல கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கும். தேனி மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்கள், நகரங்கள், இந்த கேட்டினை கடந்தே தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். எனவே கேட் மூடப்பட்டால் ஆம்புலன்ஸ்கள் கூட செல்ல வழியில்லை. கேட் திறக்கப்பட்டு மிக நீண்ட நேரம் கழித்தே போக்குவரத்து சீராகும். அதற்குள் அடுத்த கேட் விழுந்து விடும். எனவே நெரிசலுக்கு தீர்வு காண வாய்ப்பே இல்லை.
எனவே அரண்மனைப்புதுார் விலக்கு அருகே உள்ள ரயில்வே கேட்டிலும், பெத்தாட்ஷி விநாயகர் கோயில் அருகே உள்ள ரயில்வே கேட்டிலும் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரயில்வே நிர்வாகமும், தேசிய நெடுஞ்சாலைத்துறைகளும் இணைந்து இந்த பாலத்தை கட்ட முடிவு செய்துள்ளன. இரண்டு பாலங்களுக்கும் சேர்ந்து கட்டுமான மதிப்பீடு குறைந்தபட்சம் 250 கோடிக்கும் அதிகமாக இருக்கும். தற்போது முதல் கட்ட நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி முடிந்துள்ள நிலையில், பாலம் கட்ட தேவையான மண் திட பரிசோதனை பணிகளும் நிறைவடைந்துள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu