தேனியில் இருந்து வெளிநாடு செல்லும் இளநீர்
தேனி அருகே கணேசபுரத்தில் தனியார் தோட்டத்தில் இளநீர் அறுவடை செய்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல லாரியில் ஏற்றும் தொழிலாளர்கள்.
பச்சை நிற இளநீரை விட சற்று விலை அதிகமாக செவ்விளநீர் விற்கப்படும். அதற்குக் காரணம் பச்சை இளநீரின் அளவுக்கு சிவப்பிளநீர் நிறைய கிடைப்பதில்லை. அதோடு இதில் கூடுதல் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இது சுவையிலும் பச்சை நிறத்தில் இருக்கும் இளநீரை விட கூடுதல் சுவை கொண்டதாக இருக்கிறது.
சித்த மருத்துவத்தில் இளநீருக்கு மிக முக்கிய இடமுண்டு. அதில் மருந்து தயாரிப்பு முறைகளான லேகியம், தைலம், சூரணம் ஆகியவற்றைத் தயாரிக்கிற பொழுது அதில் தேங்காய்ப் பால், இளநீர் ஆகியவை சேர்க்கப்படுவதுண்டு. அப்படி லேகியங்கள் தயாரிக்கிற பொழுது, பச்சை நிற இளநீரைக் காட்டிலும் சிவப்பு நிற இளநீர் தான் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இது அந்த மருந்துக்கு கூடுதல் வலிமையைத் தருவதாகக் கூறப்படுகிறது.
பொதுவாக இளநீரில் சுண்ணாம்புச் சத்தும் சர்க்கரை சத்தும் அதிகமாக இருக்கிறது என்று நமக்குத் தெரியும். அந்த வழக்கமான பச்சை நிற இளநீரைக் காட்டிலும் சிவப்பு இளநீரில் சர்க்கரை சத்து கொஞ்சம் குறைவாகவே இருக்கிறது.
அதோடு சிவப்பு இளநீரில் பொட்டாசியம், கால்சியம், சோடியம், இரும்புச் சத்து, காப்பர், கந்தகச் சத்து, மக்னீசியம் ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.
பொதுவாக டயேரியா போனால் அரிசி உணவு, பிரட், வாழைப்பழம் போன்றவற்றைக் கொடுப்பார்கள். ஆனால் டயேரியா போகிறவர்களுக்கு உடனடியாக செவ்விளநீர் கொடுப்பது நல்லது. அதிக அளவில் நிற்காமல் போகும் பேதியைக் கூட செவ்விளநீர் கட்டுப்படுத்தும். அதோடு அதிகப்படியான வயிற்றுப் போக்கால் ஏற்படும் களைப்பையும் போக்குகிறது.
தேனி மாவட்டத்தில் பல இடங்களில் செவ்விளநீர் சாகுபடி நடந்து வருகிறது. இவர்கள் ஏற்றுமதி ரகங்களை மட்டுமே விளைவிக்கின்றனர். இதற்கான செலவுகள் அதிகம் தான். இருப்பினும் அதிக விலை கிடைக்கிறது. ஒரு இளநீரை 20 ரூபாய்க்கு தோட்டத்திலேயே வந்து எடுத்துக் கொள்கின்றனர். மரம் ஏறி இளநீர் இறக்குவது, ஒருங்கிணைத்து லாரிகளில் ஏற்றிச் செல்வது உட்பட அனைத்துமே வியாபாரிகளின் பொறுப்பு.
ஆக இளநீர் விளைவிப்பது மட்டுமே விவசாயிகளின் வேலை. இப்படி வாங்கும் இளநீர்களை விவசாயிகள் லாரிகள் மூலம் விமான நிலையம் எடுத்துச் சென்று அங்கிருந்து அரபுநாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். இடையில் வியாபாரிகளின் குடோனில் இளநீரை பேக்கிங் செய்து கொண்டு செல்கின்றனர். அனைத்து செலவுகளும் போக ஒரு இளநீருக்கு வியாபாரிகளுக்கு சிறப்பான வருவாய் கிடைக்கிறது. அந்த அளவுக்கு இந்த இளநீர்களுக்கு அரபுநாடுகளில் சிறப்பான வரவேற்பு கிடைக்கிறது. நல்ல தரமான விலையும் தருகின்றனர். விவசாயிக்கும், வியாபாரிக்கும் வருவாய் கிடைப்பதால் செவ்விளநீர் உற்பத்தியில் விவசாயிகள் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu