கொடி கட்டிப்பறந்த ரியல் எஸ்டேட் வணிகம்..! வீட்டு மனை, வீடு விற்பனை விறுவிறுப்பு..!
தேனி மாவட்டத்தில் விற்பனைக்கு தயாராக உள்ள நிலங்கள்.(கோப்பு படம்)
தேனி மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழில் புரட்டாசி மாதத்திலும் கொடி கட்டிப் பறந்தது. இடம், வீடு வாங்க வங்கிகள் தாராளமாக கடன் வழங்கி உள்ளன. தவிர வட்டிக்கு பணம் கொடுத்து சம்பாதித்தவர்கள், பொருளாதார நெருக்கடியில் மக்கள் சிக்கி உள்ளதால் தங்களிடம் உள்ள பணத்தை நிலத்தில் முதலீடு செய்வதும் முக்கிய காரணம் என புரோமோட்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் கொரோனா காலத்தில் பல ஆயிரம் கோடிகள் இழப்பு ஏற்பட்டதால் மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கினர். கொரோனா காலம் முடிந்து நான்கு ஆண்டுகளை எட்டி விட்டதால் பொருளாதார நிகழ்வுகள் பல மடங்கு மேம்பட்டு வருகின்றன. இதில் தொழில்துறையை பொருத்தவரை ரியல் எஸ்டேட் தொழில் தான் கொடி கட்டிப்பறந்தது.
வழக்கமாக புரட்டாசி மாதம் இடம், வீடு வாங்க மக்கள் தயக்கம் காட்டுவார்கள். இந்த சாஸ்திர, சம்பிரதாயங்களையும் மீறி மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழில் உச்சத்தை எட்டி இருந்தது.. புரட்டாசி மாதம், அஷ்டமி, நவமி நாட்களில் கூட நுாற்றுக்கணக்கான பத்திரப்பதிவுகள் நடந்துள்ளன. தற்போது வரை இத்துறையில் தொடர்ந்து வளர்ச்சியான நிலையே நீடிக்கிறது.
திடீரென ரியல் எஸ்டேட் தொழில் விறுவிறுப்படைய என்ன காரணம் என புரொமோட்டர்களிடம் கேட்ட போது கூறியதாவது: வழக்கமாக வட்டிக்கு பணம் கொடுப்பவர்களில் பலர் தங்களது தொழிலினை மாற்றி விட்டனர். வட்டிக்கு கடன் கொடுத்தால் பணம் திரும்ப வருமோ என சந்தேகப்படும் அளவுக்கு பொருளாதார நெருக்கடியில் இருந்து பல ஆயிரம் குடும்பங்கள் மீள முடியாமல் உள்ளன.
இதனால் கடன் கொடுத்து இருக்கும் பணத்தினை இழப்பதை விட, நிலத்தில் முதலீடு செய்யலாம் என முடிவு செய்து இடம் வாங்கி வருகின்றனர். இதற்கு ஏற்றார் போல் நொடிந்து போன பலர், தங்களது நிலங்களை விற்று பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருகின்றனர். இவர்கள் அவசரத்திற்கு விற்பதால் குறைந்த விலைக்கு நிலங்கள் கிடைக்கின்றன.
தவிர மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை, பைபாஸ் ரோடுகள் என வளர்ச்ச்சி வேகம் அதிகரித்துள்ளது. இதனால் பல இடங்களுக்கு திடீர் முக்கியத்துவம் கிடைத்துள்ளது. அரசு ஊழியர்கள், தொழிலதிபர்கள் பலர் வருமான வரி கிடுக்கிப்பிடியில் இருந்து தப்ப, வங்கிகளில் கடன் வாங்கி நிலம், புதிய வீடுகளில் முதலீடு செய்கின்றனர். வங்கிகளும் நிலம், வீடு வாங்க தாரளமாக கடன் தருகின்ற்ன. இப்படி பல்வேறு விதங்களில் ரியல் எஸ்டேட் துறைக்கு சாதகமான சூழல் உருவாகி உள்ளது. இவ்வாறு கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu