வேகமாக உயர்ந்து வரும் முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம்

வேகமாக உயர்ந்து வரும் முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம்
X

பெரியாறு அணை பைல் படம்.

முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் தற்போது வேகமாக உயர்ந்து வருகிறது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை வலுத்துள்ளது. இதனால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து தொடங்கி உள்ளது. அணைக்கு விநாடிக்கு 2605 கனஅடிநீர் வந்து கொண்டுள்ளது.

அணையில் இருந்து விநாடிக்கு 356 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர் மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 114.50 அடிவரை குறைந்த நீர் மட்டம் இன்று காலை 116.50 அடியை கடந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணை நீர் மட்டம் மேலும் உயரும் வாய்ப்புகள் உள்ளது. எனவே இனிமேல் தேனி மாவட்டத்தில் முதல் போக நெல் சாகுபடிக்கு இனி பாதிப்பு வராது என விவசாயிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

கூடலுார், கம்பம், உத்தமபாளையம், குச்சனுார், சின்னமனுார் பகுதிகளில் நெல் நடவுப்பணிகள் தொடங்கி விட்டன. இன்னும் ஒரு மாதம் வரை நடவுப்பணிகள் நீடிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் தொடர்ந்து 3வது நாளாக மழை பெய்து வருகிறது. இன்று காலை 6 மணி நிலவரப்படி பெய்த மழையளவு விவரம் வருமாறு: அரண்மனைப்புதுார்- 2.4 மி.மீ., வீரபாண்டி 7.2 மி.மீ., பெரியகுளம் ஒரு மி.மீ., சோத்துப்பாறை ஒரு மி.மீ., உத்தமபாளையம் 3.2 மி.மீ., பெரியாறு அணை 51 மி.மீ., தேக்கடி 40 மி.மீ., மழை பதிவானது.

பெரியாறு அணைப்பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பதிவாகி வருகிறது. இதனால் நீர் வரத்து நொடிக்கு, நொடி அதிகரித்து வருவதால் தேனி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். அணையின் நீ்ர்மட்டம் மேலும் அதிகரித்தால், தண்ணீர் திறக்கப்பட்டு வைகை அணையில் சேமிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!