தேனி மாவட்டத்தில் மானாவாரி பயிர்களை காப்பாற்றிய மழை..!

தேனி மாவட்டத்தில் மானாவாரி பயிர்களை காப்பாற்றிய மழை..!

மானாவாரி நிலப்பரப்பு (கோப்பு படம்) 

தேனி மாவட்டத்தில் 75 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

தேனி மாவட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த மானாவாரி பயிர்களை தற்போது பெய்த மழை காப்பாற்றி உள்ளது. சிறுதானியங்களை விதைக்க ஆர்வம் இருந்தாலும் விதைகள் கிடைக்கவில்லை என விவசாயிகள் புகார் எழுப்பி உள்ளனர்.

தேனி மாவட்டத்தில் மானாவாரி பயிர்களாக கம்பு, சோளம், மக்காச்சோளம் மற்றும் பயறு வகைகளான பாசிப்பயறு, தட்டைப்பயறு, உளுந்து போன்றவை முழுவதும் 75 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பெய்யும் மழையும், கொழுத்தும் வெயிலும் இந்த மானாவாரி பயிர்களுக்கு புத்துயிர் கொடுத்துள்ளது. இதனால் இந்த ஆண்டு மானாவாரி பயிர்களின் விளைச்சல் அதிகமாக இருக்கும் என விவசாயத்துறை மதிப்பீடு செய்துள்ளது.

அதேசமயம் குதிரைவாலி ஒரு கிலோ 80 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. குதிரைவாலி விதைத்தால் 90 நாளில் அறுவடைக்கு வந்து விடும். சிறுதானியங்களான குதிரைவாலி, தினை, வரகு, கேழ்வரகு போன்ற அனைத்திற்கும் தற்போது நல்ல விலை கிடைத்து வருவதால், இவற்றை சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வத்துடன் உள்ளனர். ஆனால் சிறுதானியங்களை விதைக்க தேவையான விதைகள் கிடைக்கவில்லை. இவற்றை விதைக்குமாறு வேளாண்மைத்துறையும் விவசாயிகளை ஊக்கப்படுத்தவில்லை. மானியம், விதைகள் வாங்குவது மிகவும் சிரமமாக இருப்பதால் சிறுதானிய சாகுபடி பெருமளவு வீழ்ச்சி அடைந்துள்ளது என விவசாயிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

அடுத்த ஆண்டிலாவது சிறுதானியங்களை போதுமான அளவு விதைக்க வேளாண்மைத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story