/* */

மழை பற்றாக்குறை எதிரொலி: பெரியாறு அணை நீர் மட்டம் சரிவு

தென்மேற்கு பருவமழை மிகவும் குறைவாக பெய்ததால், முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம் மீண்டும் சரிய தொடங்கி உள்ளது.

HIGHLIGHTS

மழை பற்றாக்குறை எதிரொலி: பெரியாறு அணை நீர் மட்டம் சரிவு
X

முல்லைப்பெரியாறு அணை  பைல் படம்.

கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து போனது. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மழை மிக, மிக குறைவாக பெய்தது. இந்த மழை குறைவாக பெய்ததால், முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து ஒரு நாள் கூட விநாடிக்கு 2000ம் கனஅடியை எட்டவில்லை. நீர் மட்டமும் 122 அடியை எட்டவில்லை. அதிகபட்சமாக இதுவரை 121.65 அடி வரை மட்டுமே உயர்ந்தது. தொடர்ந்து ஒரு வாரம் வரை நீர் வரத்தும், வெளியேற்றமும் சம அளவில் இருந்ததால், நீர் மட்டம் குறையாமல் இருந்தது.

ஆனால் தொடர்ச்சியாக மழை இல்லாததால், நீர் வரத்து குறைந்து கொண்டே வந்தது. தற்போதைய நிலையில் நீர் வரத்து விநாடிக்கு 291 கனஅடியாக குறைந்துள்ளது. விநாடிக்கு 400 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் நீர் மட்டம் குறைந்து 121.45 அடியாக உள்ளது. இன்றும் வெயில் வாட்டுகிறது. அணையின் நீர் வரத்து பகுதியிலோ, நீர் பிடிப்பு பகுதியிலோ மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் கொஞ்சம் கூட இல்லை. இதனால் நீர் மட்டம் கிடுகிடுவென குறையும்.

இருப்பினும் அணையில் தற்போது உள்ள நீரை வைத்து முதல் போக நெல் சாகுபடியை எடுத்து விடலாம். வடகிழக்கு பருவமழையாவது தடையின்றி பெய்யும் என எதிர்பார்ப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

வைகை அணை நீர் மட்டமும் மிகவும் சரிந்து 48.69 அடியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து இல்லை. மதுரை மட்டும் ஆண்டிபட்டி சேடபட்டி கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்காக வைகை அணையில் இருந்து விநாடிக்கு 69 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போதய நிலையில் மதுரை மாவட்ட பாசனத்திற்கு கூட நீர் திறக்க எந்த வாய்ப்பும் இல்லை. இதனால் மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டு முதல்போக சாகுபடிக்கு வாய்ப்பு இல்லை. வடகிழக்கு பருவமழை கை கொடுத்தால், இரண்டாம் போக சாகுபடி விளையும். வடகிழக்கு பருவமழையும் பொய்த்தால் குடிநீருக்கே திண்டாட்டம் ஏற்பட்டு விடும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 4 Aug 2023 2:36 AM GMT

Related News