தேனி மாவட்டத்தில் இரவெல்லாம் கொட்டிய மழை: இன்றும் கனமழைக்கு வாய்ப்பு

தேனி மாவட்டத்தில் இரவெல்லாம் கொட்டிய மழை: இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
X

பைல் படம்.

தேனி மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்துவரும் நிலையில், இன்றும் கனமழைக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினமே பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் இருண்ட மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பதிவானது. அதுவும் இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது.

மாவட்டத்தில் பெய்த மழை விவரம் (மி.மீ.,ல் குறிக்கப்பட்டுள்ளது): ஆண்டிபட்டி 35.8, அரண்மனைப்புதுார் 27.6, வீரபாண்டி- 4, பெரியகுளம் 35, மஞ்சளாறு- 28, சோத்துப்பாறை- 32, வைகை அணை- 35, போடி- 31, உத்தமபாளையம்- 6.4, கூடலுார்- 8.2, பெரியாறு அணை- 15.4, தேக்கடி- 17.2, சண்முகாநதி- 7.8 என மழை பதிவானது. இன்றும் பல இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெரியாறு அணை நீர் மட்டம் 137 அடியை எட்டி உள்ள நிலையில், இந்த மழையால் நீர் வரத்து கிடுகிடுவென அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே பெரியாறு அணை நீர் மட்டம் மீண்டும் 142ஐ நோக்கி உயரும் வாய்ப்புகள் உள்ளன. வைகை அணை நீர் மட்டமும் 70.44 அடியாக உள்ளது. சண்முகாநதி, மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளும் நிரம்பி உள்ளன. கும்பக்கரை அருவி, சுருளி அருவி, சின்னசுருளி அருவி, அணைக்கரைப்பட்டி தடுப்பணைகளில் யாரும் குளிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழை எந்த அளவு இனி பெய்யும் என்பதை உறுதியாக கணிக்க முடியவில்லை. பலத்த மழையும் பெய்யலாம். குறைவான மழையும் பெய்யலாம். மழை இல்லாமலும் போகலாம். அந்த அளவு வானிலை கணிப்பில் குழப்பம் நிலவுகிறது. வானிலை ஆய்வு மையம் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் என அறிவுறுத்தி இருந்தாலும், எந்த அளவு மழை பெய்யும் என தெரியவில்லை எனவும் பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்