தேனி ரயிலுக்கு அனுமதி வழங்க ரயில்வே நிர்வாகம் தயங்குவது ஏன்? (எக்ஸ்குளுசிவ்)

தேனி ரயிலுக்கு அனுமதி வழங்க ரயில்வே நிர்வாகம் தயங்குவது ஏன்? (எக்ஸ்குளுசிவ்)
X

மதுரை தேனி ரயில்பாதை

Erode To Theni Train-ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்திய மண் மற்றும் குறிப்பிட்ட அளவு ஜல்லிகளை பயன்படுத்தாததால் ரயிலுக்கு அனுமதி வழங்க தயக்கம் காட்டி வருகிறது.

Erode To Theni Train-மதுரை- போடி அகல ரயில்பாதை பணிகள் தொடங்கி சுமார் 12 ஆண்டுகளை கடந்து விட்டது. மதுரையில் இருந்து தேனி வரை பணிகள் நிறைவடைந்து, ஐந்து முறை சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டு விட்டது. இதில் ஒருமுறை முழுமையான ரயில் முழு வேகத்தில் இயக்கப்பட்டு விட்டது.

இருப்பினும் ரயில்வே நிர்வாகம் இதுவரை மதுரை- தேனி வரை ரயில் இயக்குவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிடவில்லை. ரயில் வரும்? வரும்? என பல்வேறு நிலைகளில் இருந்து அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் மட்டுமே உலா வந்து கொண்டுள்ளன. பணிகள் முடிந்து மாதங்களை கடந்து, ஆண்டுகள் உருண்டோடி விட்ட நிலையில், ரயில் மட்டும் வராததன் காரணம் என்ன என்பது குறித்து சில அதிகாரிகளிடம் கேட்டோம்.

அவர்கள் கூறியதாவது: ரயில்வே வழித்தடம் அமைக்கப்படும் போது, எந்த வகையான மண் பயன்படுத்த வேண்டும். அதனை எந்த அளவு பயன்படுத்த வேண்டும். அதன் அடித்தட்டு அகலம், மேல்தட்டு அகலம், மண் ரோட்டின் பலம், அதன் உயரம், இறுகும் தன்மை உட்பட பல விஷயங்களை ரயில்வே அதிகாரிகள் சுட்டிக்காட்டி அதற்கு ஏற்ற மண்ணை ஆய்வு செய்து இந்த மண்ணை பயன்படுத்துங்கள். இந்த மண் இந்த இடத்தில் உள்ளது என அறிவுரை வழங்கும்.

அதேபோல் ஜல்லிகள் எங்கிருந்து பெறப்பட வேண்டும். எந்த அளவு இருக்க வேண்டும். எவ்வளவு ஜல்லிகளை அடுக்க வேண்டும். அதாவது எத்தனை அடி உயரம் மண் ரோடு உள்ளது. அதற்கு மேல் எவ்வளவு உயரம் ஜல்லிகள் அமைக்கப்பட வேண்டும். அதற்கு மேல், தான் சிமென்ட் சிலாப்புகள் அமைத்து, அதன் மேல் ரயில்வே லைன் அமைக்கப்பட வேண்டும் என்ற வழிகாட்டுதல் நெறிமுறைகள் உள்ளன.

இந்த நெறிமுறைகளின்படி மதுரையில் இருந்து ஆண்டிபட்டி கணவாயின் மதுரை மாவட்டம் வரை அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஆய்வு செய்த டெல்லி ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஓ.கே., கொடுத்து விட்டார். ஆனால் ஆண்டிப்பட்டி கணவாயில் தேனி மாவட்டம் தொடங்கும் இடத்தில் இருந்து தேனி வரை அமைக்கப்பட்ட வழித்தடத்தில் இந்த விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. இதனை டெல்லியில் இருந்து வந்த ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கண்டறிந்து விட்டார். எனவே அவர் அனுமதி தர மறுத்து விட்டார்.

தவிர அவர் இப்படி ஒரு வழித்தடம் அமைக்கப்பட்டதை கண்காணிக்காமல் விட்ட அதிகாரிகளை டோஸ் விட்டதாகவும் கூறப்படுகிறது. காரணம் ரயில்வேயின் வழிகாட்டுதல் விதிமுறைப்படி வழித்தடம் அமைக்கப்பட்டால் மட்டுமே அத்தனை ஆயிரம் டன் எடை கொண்ட ரயில், குறிப்பிட்ட வேகத்தில் செல்லும் போது, அதன் அதிர்வினை தாங்கி நிற்கும்.

எனவே அந்த விதிமுறையினை பின்பற்றாமல் அமைக்கப்பட்ட வழித்தடத்தில் ரயில் இயக்கப்பட்டால் பயணிகளின் பாதுகாப்பிற்கு பிரச்னை ஏற்படும் என்ற பெரும் தயக்கம் ரயில்வே நிர்வாகத்திடம் நிலவுவதாக தெரிகிறது. ரயில்வே நிர்வாகம் மிகவும் கண்டிப்பானது என்பதால் விதிமுறைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில், அனுமதி வழங்க தயக்கம் காட்டுவதால் தான் இந்த தாமதம் ஏற்படுகிறது.

இந்த தலைவலி தீராததால் தான், தேனி போடி வரை வழித்தடம் அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!