எங்க ஊருக்கு வந்துபாருங்க! முதுவாக்குடி மக்கள் கலெக்டரிடம் கண்ணீர்
தேனி கலெக்டர் முரளீதரனை சந்திக்க கலெக்டர் அலுவலகம் வந்த முதுவாக்குடி ஆதிவாசி மக்கள்.
தேனி கலெக்டர் முரளீதரன், மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி, தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார். இந்த நிலையில், போடி அருகே உள்ள கொட்டகுடி கிராம ஊராட்சிக்கு உட்பட்ட முதுவாக்குடிக்கு வர வேண்டும் என, அக்கிராமத்தில் வசிக்கும் ஆதிவாசி மக்கள் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் தலைமையில் முதுவாக்குடி ஆதிவாசி மக்கள் கலெக்டர் முரளீதரனை சந்தித்து தங்களின் வாழ்வியல் நிலை குறித்து கண்கலங்கினர்.
கலெக்டரிடம் அவர்கள் கூறியதாவது: எங்கள் கிராமத்தில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில் கட்டப்படும் வீடுகளின் கட்டுமான பணிகளும் பல மாதங்களாக முடங்கி கிடக்கின்றன. பசுமை வீடு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடு பணிகளும் முடங்கி கிடக்கின்றன. அடிப்படை வசதிகள் ஏதுமில்லை. வீடுகள் இல்லாமல் கடந்த நான்கு மாதங்களாக மழையில் நனைந்து, நாங்கள் பட்டபாடுகளை விவரிக்கவே முடியாது. அந்த அளவு துன்பத்தை அனுபவித்து விட்டோம்.
கிராம ஊராட்சி நிர்வாகமுமோ, போடி ஊராட்சி ஒன்றிய நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை. நீங்கள் நேரடியாக எங்கள் கிராமத்திற்கு வந்தால் உண்மை தெரியும். பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுத்து விடுவீர்கள். நிலைமை அந்த அளவு மோசமாக உள்ளது என்று கூறி அழைத்தனர். கலெக்டரும் மனு மீது நடவடிக்கை எடுப்பதாகவும், கிராமத்திற்கு வருவதாகவும் உறுதி அளித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu