எஸ்.பி.ஐ. வங்கி வாடிக்கையாளர் சேவைக்கு பொதுமக்கள் பாராட்டு
தேனி எஸ்.பி.ஐ., வங்கி சார்பில் கொடுவிலார்பட்டியில் நடந்த பல்வேறு நலத்திட்ட சேவைகளை பாராட்டி முக்கிய பிரமுகர் ராஜ்குமார் பேசினார்.
எஸ்.பி.ஐ., வங்கியின் ஸ்தாபன நாள் ஆண்டு விழாவை தொடர்ந்து தேனி கொடுவிலார்பட்டியில் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. பொதுமக்களுக்கு இலவசமாக இன்சூரன்ஸ் வழங்குதல், சிறு தொழில் கடன் வழங்குதல், சைபர் பேலன்ஸ் திட்டத்தில் கடன் வழங்குதல், குடிநீர் தொட்டி அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருதல் உட்பட பல சேவைகள் நடைபெற்று வந்தன.
எஸ்.பி.ஐ., வங்கியின் இந்த சேவையினை உள்ளூர் மக்கள் பாராட்டி வரவேற்றனர். உள்ளூர் முக்கிய பிரமுகரான ராஜ்குமார் பேசியதாவது: சாதாரண பொதுமக்கள் வங்கி கணக்கு தொடங்குவது பற்றி சிந்திக்கவே முடியாது. அப்படி பட்ட மக்கள் வாழும் இடத்திற்கே வந்து எஸ்.பி.ஐ., வங்கி சைபர் பேலன்சில் கணக்கு தொடங்கி தருகிறது.
ஆண்டுக்கு 20 ரூபாய் மட்டும் செலுத்தி ஏதாவது ஒரு வகையில் மரணம் ஏற்பட்டால் 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு ஆண்டுக்கு 20 ரூபாய் மட்டும் செலுத்தி இன்சூரன்ஸ் போட்டு விட்டால் எந்த வகையில் இறப்பு ஏற்பட்டாலும், 2 லட்சம் அந்த குடும்பத்திற்கு கிடைத்து விடும்.
அந்த குடும்பம் திடீரென ஏற்படும் நெருக்கடியில் இருந்து மீண்டு விடும். இப்படிப்பட்ட அற்புதமான திட்டத்தை எஸ்.பி.ஐ., வங்கி இலவசமாக வழங்குகிறது. நான் எனது சொந்த செலவில் 300 பேருக்கோ 500 பேருக்கோ இந்த இன்சூரன்ஸ் திட்டத்தில் பயனாளிகளுக்கு பணம் கட்ட தயாராக இருக்கிறேன். அந்த அளவு இந்த திட்டம் எங்களை கவர்ந்துள்ளது.
அதேபோல் மக்கள் அவசர தேவைக்கும், தொழிலுக்கும் தனியாரிடம் வட்டிக்கு கடன் வாங்கி சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு வங்கி தேடி வந்து கடன் தருகிறது. இந்த வங்கி கடன் திட்டங்களை மட்டும் நல்ல முறையில் பயன்படுத்தினால், மக்கள் தனியாரிடம் வட்டிக்கு வாங்கி கஷ்டப்பட வேண்டி இருக்காது.
கொடுவிலார்பட்டி சுற்றுக் கிராமங்கள் நிறைந்த ஒரு அழகிய கிராமம். இங்கு எஸ்.பி.ஐ., வங்கி கிளையினை அமைக்க வேண்டும் என நான் இந்த மக்கள் சார்பாக இங்கு வந்துள்ள அதிகாரிகளுக்கு வேண்டுகோள் வைக்கிறேன். எங்கள் வேண்டுகோளை ஏற்று வங்கி திறக்க முன்வந்தால் நாங்கள் எங்கள் தரப்பில் தேவையான உதவிகளை செய்வோம். எங்கள் மக்களுக்கு குடிநீர் தொட்டிகள் அமைத்து குடிநீர் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்த எஸ்.பி.ஐ., வங்கியை மனமார பாராட்டுகிறோம். இவ்வாறு பேசினார். இதேபோல் கிராமத்தை சேர்ந்த பலரும் எஸ்.பி.ஐ. வங்கி சேவையினை பாராட்டி அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu