மத்திய நிதியமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்?
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
நீதிக் கட்சித் தலைவரும், சென்னை மாகண முன்னாள் முதல்வருமான பி.டி.ராசனின் பேரன். திமுக முன்னாள் அமைச்சர் பழனிவேல் ராஜனின் மகன் என திராவிட இயக்கதோடு பிடிஆருக்கு பின்னிப் பிணைந்த தொடர்பு உண்டு. ஆனாலும், அரசியலுக்கு வராமல் சுமார் 20 ஆண்டுகள் வரை பன்னாட்டு நிறுவனங்கள், வங்கிகள் என முக்கிய பொறுப்புகளை வகித்தார்.
2006ஆம் ஆண்டு திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற சில காலத்திலேயே பழனிவேல் ராஜன் காலமானார். அவரது தொகுதிக்கு வந்த இடைத் தேர்தலில் பிடிஆரை நிற்கச் சொன்னது திமுக தலைமை. ஆனால், அதனை ஏற்காத பிடிஆர் வெளிநாட்டிற்கு சென்று விட்டார். பின்னர் 10 ஆண்டுகள் கழித்து 2016ஆம் ஆண்டில் அரசியலுக்குள் நுழைந்து தனது தந்தையின் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு வென்று சட்டமன்றம் சென்றார் பிடிஆர்.
திமுகவில் புதிதாக உருவாக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளராகவும் பிடிஆர் 2017ஆம் நியமிக்கப்பட்டார். இவர் தலைமையில் தகவல் தொழில்நுட்ப அணி சிறப்பாகவே செயல்பட்டது. 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்த சூழலிலி பிடிஆரை தேடி வந்தது நிதியமைச்சர் பொறுப்பு. மூத்த தலைவர்கள் யாருக்காவது நிதித்துறை வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிடிஆருக்கு வழங்கப்பட்டது பலருக்கும் ஆச்சரியம் அளித்தது.
ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் மீது வைத்த நம்பிக்கை சரியானது என தனது செயல்பாடுகள் மூலம் பிடிஆர் நிரூபித்தார். நிதித்துறை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட்டு பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டார். அதற்கான பலன்கள் மெல்ல மெல்ல தெரிய ஆரம்பித்தது. அதன்பிறகு உதயநிதி - சபரீசன் குறித்து பிடிஆர் பேசியதாக வெளியான ஆடியோ தமிழக அரசியலில் புயலை கிளப்பியது.
அடுத்த சில வாரங்களில் நிதியமைச்சர் பொறுப்பில் இருந்து தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக மாற்றப்பட்டார் பிடிஆர். இதற்கு ஆடியோ விவகாரம்தான் காரணம் எனக் கூறப்பட்டாலும், நிதி ஒதுக்கீட்டில் மூத்த அமைச்சர்களுக்கே பிடிஆர் கறார் காட்டியதும் ஒரு காரணம் என்ற தகவலும் வந்தது. ஆனாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என ஐடி துறை சார்ந்த பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வந்தார் பிடிஆர்.
அதே சமயம் பிடிஆர் மீது திமுக தலைமைக்கு இருந்த அதிருப்தியும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. இந்த நிலையில் ஐடி நிகழ்ச்சி ஒன்றில் பிடிஆரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிப்படையாகவே பாராட்டினார். நிதித்துறை போன்று ஐடி துறையிலும் மாற்றங்கள் வரவேண்டும் என்பதற்காகவே பிடிஆரை துறை மாற்றம் செய்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இந்த நிலையில் வரும் ஜூன் 4ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்றே இந்தியாவை ஆளப்போவது யார் என்பது தெரிந்து விடும். இந்தியா கூட்டணி வென்று ஆட்சிக்கு வரும் பட்சத்தில் நிதி உள்ளிட்ட சில முக்கிய துறைகளை திமுகவு கேட்டுப் பெறும் முடிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். அப்படி நிதித் துறை ஒதுக்கீடு செய்யப்படும் பட்சத்தில், பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை மத்திய நிதி அமைச்சராக நியமிக்கும் திட்டமும் முதல்வரிடம் உள்ளதாக கூறுகிறார்கள் திமுக வட்டாரங்களில்.
இதற்கு ஒரு காரணமும் உள்ளது. ஏற்கனவே பல்வேறு வகையான நிதி ஒதுக்கீடு விவகாரங்களில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்திற்கு குறைவாகவே நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. தமிழகம் அளிக்கும் 1 ரூபாய் வரியில் 29 பைசாதான் திரும்பி வருவதாகவும், ஆனால் வட மாநிலங்களுக்கு வரியை விட அதிகமாக செல்வதாகவும் திமுக குற்றம் சாட்டுகிறது. ஆகவே, நிதிப் பகிர்வு சரியான முறையில் இருக்க அதிமுக்கியத்துவம் வாய்ந்த நிதித்துறையை கேட்க முடிவெடுத்துள்ளது என்கிறார்கள் திமுக வட்டாரங்களில். ஆனாலும் என்ன நடக்கும் என்பது ஜூன் 4ஆம் தேதிக்குப் பிறகுதான் தெரியும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu