16 ஆண்டுகளாக விளையாத பி.டி.ஆர். நெல் வயல்கள்

16 ஆண்டுகளாக விளையாத பி.டி.ஆர். நெல் வயல்கள்
X

பைல் படம்

பி.டி.ஆர். கால்வாய் நெல் வயல்களில் தொடர்ச்சியாக 16 ஆண்டுகளாக நெல் விளைவிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது

தேனி மாவட்டத்தில் பி.டி.ஆர்., கால்வாய் மூலம் பயன்பெறும் 4986 ஏக்கர் நெல் வயல்கள் கடந்த 12 ஆண்டுகளாக முறை யாக விளைவில்லை. இதற்காக கம்பம் தொட்டமான் துறையில் இருந்து பி.டி.ஆர். கால்வாய்க்கு முல்லை பெரியாற்று தண்ணீர் கொண்டு வர விவசாயிகள் தி.மு.க., அரசின் உதவியை கேட்டுள்ளனர்.

தேனி மாவட்டத்தில் முல்லை பெரியாற்றில் கருங்கட்டான்குளம் என்ற இடத்தில் இருந்து பி.டி.ஆர்., கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும். இந்த கால்வாய் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கால்வாயில் தண்ணீர் வரவில்லை. இதனால் 12 ஆண்டுகளாக இந்த கால்வாய் பாசனத்தை நம்பி இருக்கும் 4986 ஏக்கர் நிலங்களில் நெல் விளைவிக்க முடியவில்லை.

பெரும்பகுதி வயல்களில் பாதி விளைந்த நிலையில் தண்ணீர் கிடைக்காமல் நெல் கதிர்கள் பொக்கு கதிர்களாக மாறி விடுகிறது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட இப்பகுதி விவசாயிகள் பி.டி.ஆர்., கால்வாயில் முறையாக தண்ணீர் கொண்டு வந்து இப்பகுதி நிலங்களுக்கு பாசன வசதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதுவரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இது குறித்து கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் கூறியதாவது: கருங்கட்டான் குளத்தில் இருந்து பி.டி.ஆர்., கால்வாயில் தண்ணீர் கொண்டு செல்ல முடியவில்லை. இந்த முயற்சிகள் முழுவதும் தோல்வியில் முடிந்து விட்டது. இதனால் இப்பகுதி விவசாயிகள் 16 ஆண்டுகளாக நெல் சாகுபடி செய்ய முடியாமல் தவிக்கின்றனர். அரசும் இத்திட்டத்தை கண்டு கொண்டதாக தெரியவில்லை. இதனால் கம்பம் எம்.எல்.ஏ.வும், தி.மு.க. முக்கிய பொறுப்பாளருமான ராமகிருஷ்ணனிடம் விவசாயிகள் முறையிட்டனர்.

அவர் இந்த பிரச்னையை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அவர் மூலம் நாங்கள் தமிழக அரசின் உதவியை நாடியுள்ளோம். எப்படியாவது நிதி வாங்கி விட வேண்டும் என எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் பெருமளவில் முயற்சித்து வருகிறார். அரசிடம் இருந்து பத்து கோடி ரூபாய் ஒதுக்கீடு கேட்டுள்ளோம். இந்த நிதி கிடைத்து விட்டால் தொட்டமான்துறையில் இருந்து முல்லை பெரியாற்று தண்ணீரை பி.டி.ஆர். வாய்க்காலுக்கு எளிதில் கொண்டு வந்து விடலாம். இதற்கான பெரும் முயற்சிகள் நடந்து வருகிறது. இந்த முயற்சியில் வெற்றி கிடைத்தால், தேனி, சின்னமனுார் ஒன்றிய கிராமங்கள் பெருமளவில் வளர்ச்சி பெறும். இவ்வாறு கூறினர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!