கேரள வன அலுவலகங்களை சீல் வைக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்: விவசாயிகள் சங்கம்
பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக்.
பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளரும், தமிழக விவசாயிகள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளருமான ச.பென்னி குயிக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் தேனி மாவட்டம், கூடலுாரிலும், தென்காசி மாவட்டத்திலும் கேரள வனத்துறை அலுவலகங்கள் தமிழக அரசின் அனுமதியின்றி செயல்படுகிறது. இதனை இழுத்து மூடி அரசு சீல் வைக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்.
இது குறித்து தேனி மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சியர்கள் கவனம் கொள்ள வேண்டும். கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் குமுளியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும், பெரியார் புலிகள் காப்பகம், அத்து மீறி தமிழகத்திற்குள் நுழைந்து இரண்டு அலுவலகங்களை அமைத்ததோடு, அது தொடர்ந்து செயல்பாட்டிலும் இருந்து வருகிறது.
1982 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பெரியார் புலிகள் காப்பகம், சுற்றுலா மூலம் ஆண்டொன்றிற்கு பல கோடி ரூபாய்களை வாரிச்சுருட்டி வரும் நிலையில், அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி அது நகர ஆரம்பித்திருக்கிறது. அதாவது கேரளாவை மையமாகக் கொண்ட இந்த புலிகள் காப்பகம், அத்துமீறி தமிழகத்திற்குள் இரண்டு கட்டடங்களை கட்டி திறந்ததோடு, அங்கு தன்னுடைய வனத்துறை அதிகாரிகளையும் தங்க வைத்திருக்கிறது என்பது உச்சக்கட்ட கொடுமை.
சமீபத்தில் கூடலூர் அருகே காஞ்சிபுரத்துறையில் இதே பெரியார் புலிகள் காப்பகத்தால் கட்டப்பட்ட கட்டிடத்தை மையமாக வைத்து மாட்டுவண்டி சுற்றுலா ஒன்றை அது நடத்தி வந்ததை அம்பலப்படுத்தினோம்.
இதே போல ஏற்கனவே வருசநாடு, கடமலைக்குண்டு வழியாக வெள்ளி மலைக்குச் சென்று, அங்கிருந்து பெரியார் புலிகள் காப்பகத்தினுள் வரும் தாண்டிக்குடிக்கு செல்வதற்காக இரவும் பகலும் 24 மணி நேரமும், இரவு நேர பயணத்திற்கு தடை செய்யப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் வழியாக கேரள அதிகாரிகள் சென்று வருகிறார்கள்.
மூன்றாவதாக கேரள வனத்துறை, தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகாவில் ஒரு கொடுமையை அரங்கேறியிருக்கிறது. அதாவது தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா, வாசுதேவநல்லூரில் இருந்து, தலையணைக்கு செல்லும் வழியில் ஆறு சென்ட் நிலத்தை வாங்கிய கேரள வனத்துறை அதில் ஒரு கட்டடத்தையும் கட்டி, அங்கிருந்து தலையணை வழியாக 24 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் செண்பகவல்லி கால்வாய்க்கு நடந்து செல்கிறார்கள் என்பது தான் வேதனையான உண்மை.
கேரள வனத்துறையின் கட்டிடம் இருக்கும் இடம் முழுக்க முழுக்க சிவகிரி தாலுகாவிற்கு உட்பட்ட தமிழ் நிலம். செண்பகவல்லி கால்வாய் பகுதிக்குள் தமிழக வனத்துறை அதிகாரிகளை நெருங்கவே விடாத இந்த பெரியாறு புலிகள் காப்பக வனத்துறை அதிகாரிகள்... எந்த யோக்கியதையில் தமிழக எல்லைக்குள் கட்டிடத்தை கட்டி இருக்கிறார்கள் என்பது தான் தெரியவில்லை.
அல்லாமல் இதற்கு தமிழக வனத்துறை எப்படி எதிர்ப்பு ஏதும் தெரிவிக்காமல் மௌனம் சாதிக்கிறது என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. இரண்டு படுக்கை அறை, ஒரு நடுக்கூடம், சமையலறை என ஒரு தங்கும் விடுதி அளவுக்கு கட்டிடத்தை மிக நேர்த்தியாக கட்டி இருக்கிறது கேரள வனத்துறை.
தமிழகத்தில் உள்ள நில மாஃபியாக்களின் ஆதரவோடு கட்டப்பட்டிருக்கும் இந்த கட்டிடத்தை கடந்த 12-06-2015 அன்று திறந்து வைத்தவர் அமித் மல்லிக். ஐ எஃப் எஸ் (Field director- project tiger-Kottayam), உடனிருந்தவர் சஞ்சாயன்குமார். ஐ.எஃப் எஸ், (Deputy director-PTR East Division-thekkady)என்கிறது அங்கிருக்கும் கல்வெட்டு. மறந்தும் கூட அன்றைக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளடங்கி இருந்த வனத்துறை அதிகாரிகள் எவரையும் பெயருக்கு கூட அழைக்கவில்லை இந்த மலையாள கும்பல். என்ன யோக்கியதையில் இந்த கட்டடத்தில் பெரியாறு புலிகள் காப்பக அதிகாரிகள் தங்குகிறார்கள் என்று தெரியவில்லை.
உணர்வு நிரம்பப்பெற்ற சிவகிரி தாலுகா விவசாயிகள், தங்கள் வாழ்வாதாரமான செண்பகவல்லி கால்வாயை சூறையாடிய ஒரு கும்பல், எந்த அடிப்படையில் வாசுதேவநல்லூருக்கு மேற்கு பகுதியில் வீடு கட்டி தங்குவதற்கு அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கூடலூர் காஞ்சிமரத்துறையில் கட்டப்பட்டிருக்கும் பெரியார் புலிகள் காப்பக கட்டிடம் முற்று முழுதாக சீல் வைக்கப்பட வேண்டும். அதேபோல் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூருக்கு மேற்கே தலையணை செல்லும் வழியில் கட்டப்பட்டிருக்கும் பெரியார் புலிகள் காப்பகத்தின் கிழக்கு டிவிஷன் அலுவலகமும் பூட்டி சீல் வைக்கப்பட வேண்டும்.
பெரியார் புலிகள் காப்பக எல்லையை ஒட்டி வரும் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தின் கிளை அலுவலகங்களை இடுக்கி மாவட்டத்தில் பீருமேடு தாலுகாவில் கட்டுவதற்கு கேரள மாநில வனத்துறை அனுமதிக்குமா...???
தேனி மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சியர்கள், உடனடியாக மேற்படி பெரியார் புலிகள் காப்பகத்தால் எவ்வித அனுமதியும் இன்றி, தமிழக எல்லைக்குள் கட்டப்பட்டு இருக்கும், இரண்டு அலுவலகங்களையும் பூட்டி சீல் வைப்பதொடு, அத்துமீறி கட்டப்பட்ட அந்த அலுவலகத்திற்கு உரிய தண்ட தொகையை விதித்து, கட்டிடத்தை இடித்து தரைமட்டமாக வேண்டும்.
தமிழக அரசு ஒரு இறையாண்மை பெற்ற மாநில அரசு. முல்லைப் பெரியாறு அணைக்கு கடுமையான நெருக்கடியை கொடுத்து, அணைக்குச் செல்லும் தரைப்பாதையான வல்லக்கடவு பாதையிலே ,மகாராஜாக்கள் போல அமர்ந்து கொள்ளும் கேரள வனத்துறை, தமிழகத்தில் இருந்து அணைக்கு செல்லும் பொதுப்பணித்துறை பொறியாளர்களை, சிக்கல் இல்லாமல் ஒருபோதும் அனுமதிப்பதில்லை.
அதேபோல் குமுளியில் உள்ள தமிழக பொதுப்பணித்துறை அலுவலகங்களுக்கு செல்லும் வழியில் சோதனை சாவடி அமைத்திருக்கும் பெரியார் புலிகள் காப்பகம், அங்கும் தொடர்ந்து நம்முடைய பொறியாளர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி வரும் நிலையில், எதற்காக அந்த கட்டடத்தை தமிழக அரசு விட்டு வைக்க வேண்டும்.
மேற்படி பெரியார் புலிகள் காப்பகத்தின் இரண்டு கட்டிடங்களும் தமிழக அரசின் இறையாண்மைக்கு விடப்பட்டிருக்கும் சவாலாக நான் பார்க்கிறேன்.
வரும் சனிக்கிழமை எங்கள் விவசாய சங்க நிர்வாகிகள் அனைவரும் கூடலூர் காஞ்சிமரத்துறைக்கு சென்று, அங்குள்ள பெரியார் புலிகள் காப்பகத்தின் கட்டடத்தை பார்வையிட இருக்கிறோம்.
அதற்கு அடுத்த செவ்வாய்க்கிழமை வாசுதேவநல்லூர் அருகே பெரியார் புலிகள் காப்பகத்தால் கட்டப்பட்டிருக்கும் கட்டிடத்தை பார்வையிட இருக்கிறோம். தமிழகத்திற்குள் கட்டடங்களை கட்டி, கேரளாவிலே இருந்து கொண்டு ஆதிக்கம் செலுத்த நினைக்கும் கேரள வனத்துறைக்கு கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu