தேனி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் தாராள விற்பனை

தேனி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் தாராள விற்பனை
தேனி மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுகின்றன.

தேனி மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுவதை காவல்துறையும் உள்ளாட்சி சுகாதாரப்பிரிவு அதிகாரிகளும் இதனை கண்டுகொள்ளாமல் இருந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

தேனி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை, போதை பாக்குகள் பல்வேறு வடிவங்களில் தாராள விற்பனை செய்யப்படுகிறது. தினமும் இரவில் 2 மணிக்கு இந்த பொருட்கள் வெளி மாவட்டங்களில் இருந்து தேனிக்கு கொண்டு வரப்பட்டு, மினி வேன்கள், லாரிகள் மூலம் மாவட்டம் முழுவதும் சப்ளை செய்யப்படுகிறது.

தினமும் மாலை ஆறு மணி முதல் ஏழு மணிக்குள் பெரும்பாலான கடைகளுக்கு விநியோகிக்கப்பட்டு விடுகிறது. இது குறித்து சுகாதாரப்பிரிவு அதிகாரிகளோ, அல்லது காவல்துறை நிர்வாகமோ இதனை கண்டுகொள்வதில்லை. இதனால் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலம் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் மிகவும் தாராளமாக கிடைக்கிறது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கூட இந்த போதை பாக்கு, புகையிலைகளை பயன்படுத்துகின்றனர்.

இது குறித்து பள்ளி நிர்வாகங்களுக்கு தெரிந்தும் அவர்களும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இதனால் மாணவ, மாணவிகள் போதைக்கு அடிமையாவதும் அதிர்ச்சிகரமான விஷயமாக மாறி வருகிறது. தவிர தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையும் களை கட்டி வருகிறது.

கஞ்சாவையும் சிறிய பொட்டலங்களாக கட்டி விற்பனை செய்கின்றனர். மாவட்டத்தில் கம்பம் பகுதியில் மட்டும் அவ்வப்போது கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்கின்றனர். வேறு எந்த பகுதியிலும் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் அதிருப்தியில் உள்ளனர்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் கள ஆய்வு செய்து, மாவட்டத்தில் தாராளமாக விற்கப்படும் போதை பொருட்களின் விற்பனையினை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags

Next Story