தேனியில் இருந்து சுற்றுக்கிராமங்களுக்கு எட்டு வழித்தடங்களில் தனியார் போக்குவரத்து!

தேனியில் இருந்து சுற்றுக்கிராமங்களுக்கு  எட்டு வழித்தடங்களில் தனியார் போக்குவரத்து!
X
தேனியில் இருந்து சுற்றுக்கிராமங்களுக்கு எட்டு வழித்தடங்களில் தனியார் போக்குவரத்தையே பொதுமக்கள் நம்பி உள்ளனர்.

அரசு போக்குவரத்துக்கழகத்தின் மெத்தனத்தால் தனியார்கள் வருவாயினை வாரிக்குவிக்கின்றனர். கமிஷன் கொட்டுவதால், அதிகாரிகள் கண் திறக்க மறுக்கின்றனர்.

தேனியில் இருந்து பழனிசெட்டிபட்டி வழியாக கோடாங்கிபட்டி, தேனியில் இருந்து பூதிப்புரம், மஞ்சிநாயக்கன்பட்டி வழியாக கோடாங்கிபட்டி, தேனியில் இருந்து அரண்மனைப்புதுார் வழியாக அம்மச்சியாபுரம், தேனியில் இருந்து அரவிந்த் கண் ஆஸ்பத்திரி, அல்லிநகரம், பொம்மையகவுண்டன்பட்டி வழியாக வடபுதுப்பட்டி, மற்றும் இதே வழித்தடத்தில் அன்னஞ்சி விலக்கு வழியாக பெரியகுளம், தேனியில் இருந்து குன்னுார் வழியாக மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மற்றும் க.விலக்கு, தேனியில் இருந்து பெருந்திட்ட வளாகம், அரண்மனைப்புதுார் வழியாக கொடுவிலார்பட்டி, என மொத்தம் எட்டு வழித்தடங்களில் தனியார்களே போக்குவரத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இந்த வழித்தடங்களில் ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒரு ேஷர் ஆட்டோ அல்லது மேக்ஸிகேப், அல்லது மினிபஸ் என தனியார் வாகனங்களே அடுத்தடுத்து இயக்கப்படுகின்றன. அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் இந்த வழித்தடங்களில் டவுன் பஸ்கள், மொபசல் பஸ்கள் இயக்கப்பட்டாலும், பயணிகளை ஏற்றி இறக்குவதில் டிரைவர், கண்டக்டர்கள் காட்டும் கெடுபிடி காரணமாக மக்கள் தனியார் சேவையினை நோக்கி ஓடுகின்றனர். தனியார்களிடம் வாகன பராமரிப்பின் தரம் மிகவும் குறைவாக உள்ளது. குறிப்பாக பெரியகுளம் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் மேக்ஸிகேப் வாகனங்கள் ‛காயலான் கடைக்கு போடக்கூட தகுதியற்றவை’. இவற்றை வைத்து 10 முதல் 14 பேர் வரை ஏற்றிச் சென்று வசூலை வாரிக்குவிக்கின்றனர்.

இப்படி தரமற்ற வாகனங்களை இயக்கி வசூலை குவிக்கும் தனியார்கள் அதில் ஒரு பங்கினை குறிப்பிட்ட சில துறைகளை சேர்ந்த அதிகாரிகளுக்கு தவறாமல் பங்கு கொடுத்து விடுத்து விடுகின்றனர். இந்த பங்கு முறையாக வந்து சேர்ந்தால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் வாகனங்களின் தரத்தை கூட பரிசோதிப்பதில்லை. தனிநபர்கள் ெஹல்மெட் அணியாமல் சென்றால் அவர்களை நிறுத்தி அபராதம் விதிக்கும் போலீசார் கூட, இந்த தனியார் வாகனங்களுக்கு வழிவிடுவதன் ரகசியம் இதுவரை புரியாத புதிராகவே உள்ளது. மக்களுக்கு தனியார் மூலம் போக்குவரத்து கிடைப்பது நல்ல விஷயம் தான். ஆனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, தரமான வாகனங்களை இயக்க வேண்டும் என்பதிலும் அரசு உறுதியாக இருக்க வேண்டும். இப்படி கை விட்டுப்போன போக்குவரத்தை அரசு போக்குவரத்துக்கழகம் தற்போதைய நிலையில் மீட்க எந்த வழியும் இல்லை.

எனவே மாவட்ட ஆட்சியரும், எஸ்.பி.,யும் நேரடியாக தலையிட்டு, பொதுமக்களை ஏற்றிச் செல்லும் வாகனத்தின் தரம், கட்டுப்பாடு போன்றவற்றை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story
எப்டியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க!..டிங்கா டிங்கானு ஒரு நோயாமா..பேரு தாங்க அப்டி,ஆனா பயங்கரமான நோய்!..