தனியார் இலவச மருத்துவ முகாம்கள் வணிக நோக்கத்திற்காக நடத்தப்படுகிறதா?

தனியார் இலவச மருத்துவ முகாம்கள்   வணிக நோக்கத்திற்காக நடத்தப்படுகிறதா?
X
பைல் படம்.
பெருநகரங்களில் தனியார் இலவச மருத்துவ முகாம்கள் வணிக நோக்கத்திற்காக நடத்தப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இன்றுள்ள பெரும்பாலான நோய்களை முறையான உடற்பயிற்சி, உணவுப்பழக்கம் மூலம் வராமலேயே தடுக்கலாம். வந்தாலும் எளிதில் கட்டுப்படுத்தி கையாளலாம். மிகுந்த அவசியம் ஏற்பட்டால் மட்டுமே மருந்துகள் தேவைப்படும். இதெல்லாம் மக்களுக்கு தெரியவில்லை.

இலவச பொதுமருத்துவமுகாம்கள் மூலம் பல தனியார் மருத்துவமனைகள், மக்களை பரிசோதனை செய்து, அவர்களை மருந்து, மாத்திரைகள் இல்லாமல் வாழ என்ன செய்ய வேண்டும் எனக்கூறி அறிவுறுத்தி, சரியான பாதைக்கு திருப்புகின்றனர். மிகவும் அவசியப்படும் ஒரு சிலரை மட்டும் தங்கள் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள் என ஆலோசனை வழங்குகின்றனர். இந்த விஷயம் மிகவும் நியாயமானது. இதனை ஏற்றுக் கொள்ளலாம். வரவேற்கலாம். இதன் மூலம் பலர் விழிப்புணர்வு பெற்று வருகி்ன்றனர் என்பதும் மறுக்க முடியாத உண்மை. எனவே தான் இலவச மருத்துவ முகாம்கள் நடத்த தனியார் மருத்துவமனைகளுக்கு அரசே மாவட்ட நிர்வாகங்கள் மூலம் அனுமதி வழங்கி வருகிறது.

ஆனால் இப்படி ஒரு நல்ல வாய்ப்பை சில மருத்துவமனைகள் தவறாக பயன்படுத்துகின்றன. சாதாரண மனிதர்களை கூட நோயாளிகளாக மாற்றும் யுக்தியை கையாளுகின்றனர். அந்த அளவு அவர்களின் பரிசோதனை முடிவுகளை வைத்து அச்சுறுத்துகின்றனர். டாக்டர்கள் என்ன சொன்னாலும் அதனை நம்பும் பழக்கம் நம் மக்களிடம் உள்ளது. இந்த ஒரு பலகீனத்தை வைத்து அந்த மருத்துவமனைகள் பெரிய அளவில் வியாபாரம் செய்கின்றனர். இவர்கள் மருந்து மாத்திரைகளை தொட்டு விட்டால், வாழ்நாள் முழுவதும் தொடரும் நிலையை உருவாக்கி விடுகின்றனர்.

பெரும்பாலும் கார்ப்பரேட் அந்தஸ்தில் இருக்கும் சில மருத்துவமனைகளே இந்த விஷயத்தில் ஈடுபடுகின்றனர் என்ற புகாரும் பரவலாக இருந்து வருகிறது. இவர்களின் சகல செல்வாக்கு காரணமாக இவர்களை அசைக்கவே முடியாது. தவிர இவர்கள் கையாளும் நுட்பமும் மிகவும் அசாத்தியமானது. அதாவது சில குறிப்பிட்ட பரிசோதனை முடிவுகளை (பார்டர்களில் வரும் புள்ளி விவரங்களை) கையில் வைத்துக் கொண்டு இவர்கள் சொல்லும் விதம் நோயாளிகள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே இருக்கும். இதனை மறுக்கவும் முடியாது. அந்த அளவு நுட்பமான முறைகளை கையாளுகின்றனர். இந்த இடத்தில் அறிவுறுத்தல் மூலமும் அவர்களை சரி செய்யலாம். அச்சுறுத்தல் மூலமும் நோயாளிகளாக மாற்றலாம். இரண்டாவது சாய்சையே சில மருத்துவமனைகள் தேர்வு செய்கின்றனர்.

இந்த முகாம் முடிகளில் கிடைக்கும் பரிசோதனைகளால் விரக்தி அடைந்த மக்கள் தங்களது குடும்ப டாக்டர்களிடம் காட்டி மீண்டும் பரிசோதனை செய்து, அவர்களின் ஆலோசனைகளை கேட்கும் போது, அச்சுறுத்திய டாக்டர்களின் மீது நம்பிக்கையிழந்து விடுகின்றனர். இதனால் பொதுவாக மருத்துவ முகாம்கள் என்றாலே மக்கள் அச்சப்படும் நிலை உருவாகி வருகிறது. ஒரு சில மருத்துவமனைகள் மேற்கொள்ளும் இந்த தவறான போக்கினால் மக்கள் யார் சரியானவர்கள் என்பதை புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறி எதற்கு வம்பு என இலவச பொது மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்களுக்கு செல்வதையே தவிர்க்கின்றனர். இதுவும் தவறாக முடிந்து விடும். அதாவது இலவச பொது மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் மக்கள் பலனடைவதும் தடுக்கப்படுகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம். முகாம் நடத்தும் மருத்துவமனையின் நம்பகத்தன்மை, ஒருங்கிணைப்பாளர்கள், முகாம் ஏற்பாட்டாளர்கள் (பெரும்பாலும் உள்ளூர் சமூக நல அமைப்புகளே ஏற்பாடுகளை செய்யும்) இவர்களின் நம்பகத்தன்மை இவற்றை ஆய்வு செய்து முடிவு செய்ய வேண்டும். குறிப்பாக முகாம் நடத்துபவர்கள் உள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மருத்துவமனைகளின் மருத்துவர்கள் என்றால் நிச்சயம் சந்தேகம் இன்றி அந்த முகாமில் பங்கேற்கலாம். காரணம் உள்ளூர் மாவட்ட மருத்துவர்களுக்கு பொய் சொன்னால் சிக்கிக் கொள்வோம் என்பது மிகவும் நன்றாகவே தெரியும். பெரும்பாலும் அச்சுறுத்தும் வேலையை செய்ய மாட்டார்கள். அறிவுறுத்தும் பணியினை சிறப்பாக செய்வார்கள். ஆனால் மிகப்பெரிய சிட்டிகளில் இருந்து வரும் மிகப்பெரிய மருத்துவமனைகள் அல்லது கார்ப்பரேட் மருத்துவமனைகள் நடத்தும் முகாம்களில் உள்ளூர் டாக்டர்களின் அல்லது குடும்ப டாக்டர்களின் அறிவுரைப்படி மட்டுமே பங்கேற்க வேண்டும். உள்ளூர் டாக்டர்களின் அறிவுரை இன்றி அவர்களிடம் சிகிச்சையும் பெறக்கூடாது என்பது பெரும்பாலான டாக்டர்களின் அறிவுரையாக உள்ளது. காரணம் புனிதமான மருத்துவ உலகில் இன்று வணிகம் புகுந்து விட்டதால், பொதுமக்கள் கவனமாக பாதையை தேர்ந்தெடுக்கும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் எனவும் டாக்டர்கள் கூறுகின்றனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil