மாயாவதிக்கு பிரதமர் பதவி! பகுஜன் சமாஜ் கட்சி ஆசை!
அகில இந்திய அளவில் பாரதிய ஜனதா தலைமையில் "தேசிய ஜனநாயக கூட்டணி"யும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து "இந்தியா" எந்த பெயரில் மற்றொரு கூட்டணியும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியா கூட்டணி அமைப்பதில் முக்கிய பங்கு வகித்து, முதலில் அந்த அணியில் இடம் பெற்றிருந்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி பின்னர் விலகி விட்டார். இரண்டு அணியிலும் சேராமல் அவருடைய கட்சி தனித்தே போட்டியிடுகிறது.
அதேபோல், இரண்டு கூட்டணிகளிலும் அங்கம் வகிக்காத மற்றொரு முக்கியமான கட்சி மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஆகும். நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் நல்ல செல்வாக்கு பெற்ற பகுஜன் சமாஜ் இதன் மூலம் பாஜகவுடன் ரகசிய கூட்டணி வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
அவர்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலை விட உத்தர பிரதேச மாநில முதல்வர் பதவியை கைப்பற்றும் சட்டமன்றத் தேர்தல் தான் முக்கியம் என்பதால் கூட்டணி பற்றி அந்த தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம் என கருதி தனித்தே போட்டியிடுகிறது. எனினும் பாஜகவுக்கு ஆதரவாக வாக்குகளை பிரிப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாகவும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் நிச்சயம் அந்த கட்சி கூட்டணி சேரும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், மாயாவதியின் வாரிசும், அவருடைய மருமகனுமான ஆகாஷ் ஆனந்த் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "இந்தத் தேர்தல் முடிவை பார்த்துவிட்டு எந்த கூட்டணியை ஆதரிப்பது என்பது குறித்து கட்சித் தலைவர் மாயாவதி முடிவு எடுப்பார்" என்று தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: "தேசிய ஜனநாயக கூட்டணி அல்லது இந்தியா கூட்டணி கொள்கைகள் எங்களுக்கு ஒத்துப் போகவில்லை என்பதால் நாங்கள் தனித்தே போட்டியிடுகிறோம். எங்களுடைய கொள்கை திட்டத்தில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். வேலைவாய்ப்பு, கல்வி ஆகிய இரண்டுமே மிக முக்கிய பிரச்சினையாக நாங்கள் கருதுகிறோம். பெஹன்ஜியை (மாயாவதி) இந்த நாட்டின் முதல் தலித் பிரதமராக பார்க்க பகுஜன் சமாஜ் கட்சி விரும்புகிறது. தற்போது உள்ள களநிலவரங்களை பார்க்கும் போது தேர்தல் முடிவு எங்களது கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்று தான் எதிர்பார்க்கிறோம்".இவ்வாறு ஆகாஷ் ஆனந்த் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu