ஸ்ரீரங்கம் வருகிறார் பிரதமர்; ராமேஸ்வரத்திலும் வழிபாடு..!
பிரதமர் மோடி (கோப்பு படம்)
அயோத்தி ராமர்கோவில் திறப்பு விழாவான ஜனவரி 22க்கு முந்தைய நாள் ராமனின் குலதெய்வமான ஸ்ரீரங்கம் ரங்கநாதரை மோடி வணங்கி விட்டு பின் ராமன் நாடு திரும்பும் போது வழிபட்ட ராமேஸ்வரமும் சென்று விட்டு பின் அயோத்தியில் விழாவினை தொடங்குவார் என்பது மிக்க மகிழ்ச்சி கொடுக்கும் ஆனந்தமான செய்தி.
இது இந்துக்களுக்கு பெரும் மகிழ்ச்சி, சம்பிரதாயங்களை பாரம்பரியங்களை மறக்காமல் பழமையின் தொடர்ச்சியினை இழக்காமல் மோடி அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டுகின்றார் என்பது கையெடுத்து வணங்க வேண்டிய தருணம்.
நாடு இதனால் இன்னும் பலம் பெறும் வடக்கு தெற்கு பேதங்கள் ஒழிந்து இன்னும் ஒன்றாகும். இங்கிருந்து இந்துக்கள் அயோத்தி செல்லும் நேரம் அங்கிருந்து இந்துக்கள் ஸ்ரீரங்கம் வருவார்கள், ராமேஸ்வரம் வருவார்கள் என்பது தேச ஒற்றுமைக்கு வலுசேர்க்கும்.
கடந்த ஜனவரி இரண்டாம் தேதி மோடி திருச்சி விமான நிலைய விழாவுக்கு வரும்போதே நாம் இதனை நினைத்தோம், மோடி ஸ்ரீரங்கம் செல்லவேண்டும் அது முக்கியமானது என நினைத்திருந்தோம். இப்போது அது நடந்திருக்கின்றது.
அதற்காக கோழி கூவித்தான் சூரியன் வந்தது என்பது அர்த்தமில்லாதது. அவர்களுக்கு முன் கூட்டியே திட்டம் இருந்திருக்கும், உரிய நேரம் சாஸ்திர சம்பிரதாயபடி செல்ல முன்பே திட்டமிட்டிருப்பார்கள். சில பல காரணங்களுக்காக ரகசியமாக வைத்திருப்பார்கள் இப்போது முறைப்படி அறிவித்து விட்டார்கள்.
அயோத்தி ராமன் அங்கு குடியேறும் முன் ராம தூதனாக அவன் குலதெய்வத்தின் ஆசியும் வாழ்த்தும் வேண்டி ஸ்ரீரங்கம் வரும் மோடியினை அந்த ரங்கநாதன் நிரம்ப ஆசீர்வதிக்கட்டும்.
அயோத்தி ராமன் ஆலயம் 1500களில் இருந்து 2019 வரை சந்தித்த அத்தனை கொடுமைகளையும் 13ம் நூற்றாண்டில் ஸ்ரீரங்கம் ரங்கனும் அனுபவித்தார். சுமார் 80 ஆண்டுகள் ஸ்ரீரங்கம் ஆலயம் சீரழிந்து கிடந்தது, அதுவும் இருமுறை தாக்குதலுக்கு உள்ளாகி பெரும்பாடு பட்டது.
கில்ஜி காலத்தில் டெல்லியில் இருந்து அரங்கனை மீட்டது, பின் துக்ளக் காலத்தில் இன்னும் பாழ்பட்டது. அயோத்தியினை மீட்க என்னென்ன யுத்தமும் ரத்தமும் போராட்டமும் நடந்ததோ அத்தனையும் திருவரங்கத்திலும் நடந்தது. நாம் மோடியிடம் வலியுறுத்துவது ஒன்றுதான், அயோத்தி ஆலயம் மீண்ட போராட்டத்தை அங்கே காட்சி படுத்தும் திட்டம் உண்டு என்கின்றன செய்திகள், எவ்வளவு பெரும் போராட்டத்தை செய்து அதனை மீட்டோம் என்பதை எக்காலமும் சொல்லும்படி பல ஏற்பாடுகளை செய்திருக்கின்றார்கள்.
உறுதியாக ஸ்ரீரங்கம் ஆலயமும் அத்தனை போராட்டத்தையும் சந்தித்தது, ராமன் ஆலயம் மட்டுமல்ல அவன் குலதெய்வ ஆலயமும் காரிருள் காலத்தில் வீழ்ந்து தான் எழும்பிற்று. ஆனால் அந்த திருவரங்கத்தில் எந்த வரலாற்று சுவடுமில்லை ஒரு வரி கூட இல்லை. மோடி ஸ்ரீரங்கம் வந்து வணங்கி அரங்கனின் அருளை பெற வரும் சமயம் இதுபற்றி உரியோர் எடுத்து சொல்லட்டும், ஒரு சிறிய அரங்காமவது அந்த ஆலயம் பட்ட பெரும் அவலத்தை இந்துக்கள் 80 வருடம் கண்ட அவலத்தை பெண்கள் வரை போராடி செத்து ஸ்ரீரங்கம் மீட்க பாடுபட்ட ரத்த வரலாற்றை, அந்த அரங்கனை இருமுறை காத்து மீட்ட சரித்திரத்தை எழுதி வைக்க காட்சிபடுத்த ஒரு மண்டபம் அமையட்டும்.
அது எக்காலமும் இங்கு நடந்த கொடுமைகளுக்கு சாட்சியாக இனி ஒருமுறை அப்படி நடக்க கூடாது என்பதற்கு எச்சரிக்கையாக இருக்கும். அப்படியே அதை மீட்ட நாயக்க மன்னர்கள் வரலாறு, அதன் வாசலில் ஜம்புதீவு பிரகடனம் எழுதி ஒட்டிய மருதுபாண்டியர் வரலாறு எல்லாம் இடம் பெறட்டும்.
அதனை மோடி செய்வார் என எதிர்பார்த்து அந்த ராம தூதனை ஸ்ரீரங்கம் ஆலயமும் அதன் பக்தர்களும் பெரும் ஆனந்தத்தோடும் நன்றியோடும் பூரண கும்ப மரியாதையோடு எதிர்பார்க்கின்றார்கள். யானை கொண்டு மோடியினை அழைத்து வரவேண்டிய நேரமிது. "வாரண மாயிரம் சூழவ லம்செய்து, நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர், பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும், தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான் கதிரொளி தீபம் கலசமு டனேந்தி, சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள, மதுரையார் மன்ன னடிநிலை தொட்டு, எங்கும் அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்" என ஆண்டாள் கண்ட கனவு அவளுக்குமானது மட்டுமல்ல, ஒரு தலைவன் வரமாட்டானா இந்த மதத்தையும் ஆலயத்தையும் காக்க மாட்டானா என ஏங்கிய ஒவ்வொரு இந்துவுக்குமானது.
அப்படி ஒரு தலைவன் வந்து நாம் கனவுகண்டதெல்லாம் நடக்கின்றது என்பது மெய்சிலிர்க்கும் நேரம். அதுவும் அந்த தலைவன் ராமன் ஆலயத்துக்காக திருவரங்கன் சன்னதிக்கு வந்து கைகூப்பி நிற்கின்றான் என்பது உண்மையிலே மனம் சிலிரிக்கும் தருணம். அரங்கனும் ராமனும் எக்காலமும் உண்டு என்பதை அழுத்தி அகிலத்துக்கு கம்பீரமாக சொல்லும் தருணம்.
ஆண்டாள் அன்றே ஒவ்வொரு இந்துவின் சார்பிலும் கண்ட கனவுபடி வரும் அந்த மோடியினை யானைமேல் ஏற்றி வரவேற்கும் நேரமிது, முடியாவிட்டால் யானை மாலையிட்டு வரவேற்கட்டும். அந்த ராம தூதுவன் பெரும் ஆசிபெற்று சிரஞ்சீவியாக நிலைக்க ஸ்ரீரங்கநாதன் பெருவரம் அருளட்டும்.
நன்றி: ஸ்டான்லி அல்போன்ஸ் ராஜன்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu